சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் தலித்துகளுக்கு ஏமாற்றமா?

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் தலித்துகளுக்கு ஏமாற்றமா?
நீதிபதிகளுக்கான அனைத்துக் காலியிடங்களையும்
தலித் வழக்கறிஞர்களைக்கொண்டு நிரப்ப
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதியரசர் நடவடிக்கை எடுக்க வேண்டும்

தொல்.திருமாவளவன் அறிக்கை  சென்னை உயர்நீதிமன்றத்திற்கான 75 நீதிபதிகளில், மக்கள் தொகையில் 25 சதவிகிதமாக உள்ள தலித் சமூகத்தினருக்குப் போதுமான பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில் 19 தலித் வழக்கறிஞர்களை நீதிபதிகளாக நியமிக்க வேண்டுமெனவும், அதற்கேற்ப ஒரே பட்டியலில் பரிந்துரை செய்ய வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் கடந்த பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறோம்.  இதற்கென விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வழக்கறிஞர் அணி, நீதித் துறையின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தையும் நடத்தி சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதியரசர் அவர்களுக்கும் மற்ற நீதியரசர்களுக்கும் கோரிக்கை மனு அளித்துள்ளோம்.  ஆனால், 30 பேர்களை நீதிபதி பதவிக்கு பரிந்துரை செய்துள்ள சென்னை உயர்நீதிமன்ற கொலீஜியம் தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை மட்டும் பரிந்துரை செய்துள்ளதாக அறிகிறோம். 


 இந்த நடவடிக்கையை தலித் மக்களின் நியாயமான கோரிக்கையை வேண்டுமென்றே புறந்தள்ளியுள்ளதாகவே உணர முடிகிறது.  இந்த நீதிபதிகள் பரிந்துரைப் பட்டியல் தொடர்பாக சமூக நீதி மற்றும் சனநாயக, முற்போக்கு வழக்கறிஞர்கள் எவரும் கேள்வி கேட்கக்கூடாது என்பதற்காகவே இந்தியாவில் எந்த நீதிமன்றத்திலும் இல்லாத ஒரு புது விதியை சென்னை உயர்நீதிமன்றம் உருவாக்கி, அதன் விளைவாக கடந்த 45 நாட்களாக தமிழ்நாட்டின் அனைத்து நீதிமன்றங்களும் முடங்கிப் போயின.  


இந்த நிலையில், தலித்துகளின் ஞாயமான கோரிக்கைகளை சென்னை உயர்நீதிமன்றம் உணர்ந்து அவர்களின் பங்காக இப்போது நிலுவையிலுள்ள நீதிபதிகளுக்கான அனைத்துக் காலியிடங்களையும் தலித் வழக்கறிஞர்களைக் கொண்டு விரைவாக நிரப்பும் வகையில், ஏற்கனவே பரிந்துரைக்கப்பட்ட பட்டியலுடன் இணைத்து ஒரே பட்டியலாகப் பரிந்துரை செய்ய உரிய நடவடிக்கையை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதியரசர் திரு.சஞ்சய் கிஷன் கவுல் அவர்கள் மேற்கொள்ள வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

இவண்
தொல்.திருமாவளவன்

0 comments:

கருத்துரையிடுக