டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா மரணம் சிபிஐ விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை வரவேற்கிறோம்!

டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா மரணம் சிபிஐ விசாரணைக்கு 
சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை வரவேற்கிறோம்!  

தொல்.திருமாவளவன் அறிவிப்பு
 

  சேலம் கோகுல்ராஜ் கொலைவழக்கில் புலன் விசாரணை அதிகாரியாக இருந்த டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா மர்மமான முறையில் மரணமடைந்ததையொட்டி சிபிஐ விசாரணை வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கோரிக்கை விடுத்திருந்தது.  அதை வலியுறுத்தி போராட்டங்களை நடத்தியது.  தற்போது அவரது தந்தை தொடர்ந்த வழக்கில் சிபிஐ விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  இதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வரவேற்கிறோம்.  3 மாதங்களுக்குள் விசாரணை நடத்தி முடிக்கப்பட வேண்டுமென்று சென்னை உயர்நீதிமன்றம் கூறியிருப்பது ஆறுதலையளிக்கிறது.

டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா அவர்கள் மர்மமான முறையில் மரணமடைந்ததற்கு அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது பெற்றோர் புகார் கூறினார்கள்.  சேலம் கோகுல்ராஜ் ஆணவக் கொலை வழக்கை மட்டுமின்றி, மில் அதிபர் ஒருவர் கொலைசெய்யப்பட்ட வழக்கையும் அவர் விசாரித்து வந்ததாகவும் அந்த வழக்கு விசாரணையையொட்டி அதிகாரிகள் மட்டத்திலும் அரசியல் ரீதியாகவும் அவருக்கு நெருக்கடிகள் கொடுக்கப்பட்டதாகவும் விஷ்ணுபிரியாவின் தந்தை புகார் கூறியிருந்தார்.

எனவே, தமிழ்நாடு காவல்துறை விசாரித்தால் அந்த வழக்கில் உரிய நீதி கிடைக்காது என்பதனால் சிபிஐயிடம் இந்த வழக்கை ஒப்படைக்க வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகளும், ஏனைய அரசியல் கட்சிகளும் தமிழக அரசை வலியுறுத்தின. ஆனால், தமிழக அரசு சிபிசிஐடி விசாரணைக்கு மட்டுமே உத்தரவிட்டிருந்தது.  மரணம் நிகழ்ந்து ஒன்பது மாதங்கள் கடந்த பின்னரும்கூட வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை என்பதால்தான் தற்போது உயர்நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.  இது தமிழக காவல்துறையின் மீது அவநம்பிக்கையை அதிகரிக்கச் செய்கிறது.
 
விஷ்ணுபிரியாவின் மரணம் மட்டுமின்றி, அண்மையில் நடந்த சுவாதி படுகொலையும், சேலம் வினுப்ரியாவின் தற்கொலையும் தமிழகக் காவல்துறை மீதான நம்பிக்கையை வலுவிழக்கச் செய்துள்ளன.  இதை தமிழக அரசு கவனத்தில்கொண்டு இத்தகைய கொடுங்குற்றங்கள் தொடர்ந்து நடைபெறாவண்ணம் தடுப்பதற்குரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.  தமிழகக் காவல்துறை மீதான பொதுமக்களின் நம்பிக்கையை வலுப்படுத்துவதற்கு தமிழக முதலமைச்சர் அவர்கள் உரிய நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்துகிறோம்.  விஷ்ணுபிரியாவின் வழக்கை விசாரிக்க இருக்கும் மத்திய புலனாய்வு அமைப்பு வழக்கறிஞர் சங்கரசுப்பு மகன் மரணம் தொடர்பான வழக்கில் அலட்சியம் காட்டி காலங்கடத்தியதைப்போல இல்லாமல் உயர்நீதிமன்றம் விதித்துள்ள 3 மாத கெடுவுக்குள் உண்மைக் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கும் என நம்புகிறோம்.

இவண்
தொல்.திருமாவளவன்

0 comments:

கருத்துரையிடுக