மாநகராட்சி தேர்தல் முறையை மாற்றக் கூடாது

மாநகராட்சி தேர்தல் முறையை மாற்றக் கூடாது
தமிழக அரசுக்கு தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்
 

  தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சிகளின் மேயர்களை மக்கள் நேரடியாக வாக்களித்துத் தேர்வு செய்யும் முறை இப்போது நடைமுறையில் உள்ளது.  அதை மாற்றி கவுன்சிலர்கள் மூலமாக தேர்வு செய்யும் மறைமுகத் தேர்தல் முறையை அறிமுகம் செய்வதற்காக தமிழக அரசு சட்ட மசோதா ஒன்றை சட்டப் பேரவையில் கொண்டுவந்துள்ளது.  இதைக் கைவிட வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தமிழக அரசை வலியுறுத்துகிறோம்.
 
மாநகராட்சி மேயர்களை நேரடியாக தேர்ந்தெடுக்கும் முறையை 2011ஆம் ஆண்டு இதே அதிமுக அரசுதான் கொண்டுவந்தது.  கவுன்சிலர்கள் மூலமாக மேயரைத் தேர்ந்தெடுத்தால் தேர்ந்தெடுக்கப்படுகிறவர் தனது வார்டில் மட்டும்தான் கவனம் செலுத்துகிறார். ஒட்டுமொத்த மாநகராட்சியின் நலனைக் கருத்தில் கொள்வதில்லை. எனவேதான், நேரடித் தேர்தல் முறையைக் கொண்டு வருகிறோம் என அப்போது அதிமுக அரசின் சார்பில் விளக்கம் தரப்பட்டது.  ஆனால், இன்று தனது நிலையை மாற்றிக்கொண்டு தான் கொண்டுவந்த சட்டத்தையே திருத்தம் செய்து மறைமுகத் தேர்தல் முறையை இப்போது அதிமுக அரசு ஞாயப்படுத்துகிறது.  இதை ஏற்க முடியாது.  நேரடித் தேர்தல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டும் மேயருக்கு பெரும்பான்மை கவுன்சிலர்களின் ஆதரவு இல்லாவிட்டால் அவர்கள் செயல்பட முடியாத நிலை உண்டாகும் என அரசின் சார்பில் இப்போது காரணம் கூறுகிறார்கள்.  ஆனால், தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சிகள் எதிலும் இப்படியான முரண்பாடுகள் ஏற்பட்டதில்லை.  எல்லா மாநகராட்சிகளிலும் அதிமுகதான் மேயர் பதவியிலும் இருக்கிறது.  எனவே, நேரடித் தேர்தல் முறையையே தொடர்ந்து பின்பற்ற வேண்டுமென தமிழக அரசை கேட்டுக்கொள்கிறோம்.
 
மாநகராட்சிகள் உள்ளிட்ட நகர அமைப்புகளிலும் ஒன்றிய பெருந்தலைவர், பஞ்சாயத்து தலைவர் முதலான ஊரக அமைப்புகளிலும் நேரடித் தேர்தல் முறையே வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் வலியுறுத்துகிறது.  ஒன்றிய பெருந்தலைவர் தேர்தல் இப்போது மறைமுகத் தேர்தலாக உள்ளது.  இதனால் கவுன்சிலர்களை விலைக்கு வாங்கும் குதிரைபேரம் பரவலாக நடைபெறுகிறது. அதனை தடுத்து நிறுத்தி உள்ளாட்சி அமைப்புகளில் மெய்யான சனநாயகத்தைக் காப்பாற்றுவதற்கு எல்லா மட்டங்களிலும் தலைவர் பொறுப்புகளை நேரடித் தேர்தல் முறையிலேயே தேர்வு செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறோம்.
 
தமிழ்நாட்டில் இப்போதுள்ள 12 மாநகராட்சிகளில் வேலூர் மாநகராட்சி மட்டும்தான் தலித் பெண்ணுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  மக்கள் தொகை அடிப்படையில் சென்னை மாநகராட்சிதான் தனித் தொகுதியாக அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும்.  கடந்த 20 ஆண்டுகளாக சட்ட விரோதமான முறையில் அது மறுக்கப்பட்டு வருகிறது.  அதனால்தான் 2006ஆம் ஆண்டு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சென்னை மாநகராட்சியை தலித்துகளுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டுமெனக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தோம். அந்த வழக்கு தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்யாத காரணத்தினால் கிடப்பில் போடப்பட்டு இப்போதுதான் விசாரணைக்கு வந்துள்ளது.  நீதிமன்றம் ஆணை பிறப்பிக்கும் வரை காத்திருக்காமல் இப்போதாவது சட்டத்தின்படி சென்னை மாநகராட்சியை தலித்துகளுக்கு ஒதுக்கீடு செய்ய தமிழக அரசு முன்வர வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.
 
உள்ளாட்சித் தேர்தல் நெருங்கி வரும் வேளையில் பஞ்சாயத்துராஜ் சட்டத்தின்படி 2011ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தலித்துகளுக்கு இடஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்துகிறோம்.  அதுபோலவே, ஊரக, நகர அமைப்புகளில் இருக்கும் துணைத் தலைவர் பதவிகளுக்கும் இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டுமென்றும் அதற்கான ஆணையை தமிழக அரசு பிறப்பிக்க வேண்டுமென்றும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.
 
தமிழக உள்ளாட்சித் தேர்தல்கள் தமிழக தேர்தல் ஆணையத்தால் நடத்தப்படுகின்றன.  ஒவ்வொரு முறையும் முறைகேடுகள் தொடர்பான பல்வேறு புகார்கள் எழுந்துள்ளன.  அதனைக் கணக்கில்கொண்டு உள்ளாட்சித் தேர்தல்களிலும் வெளிப்படைத்தன்மையை நிலைநாட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை பயன்படுத்த வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறோம்.

இவண்
தொல்.திருமாவளவன்

0 comments:

கருத்துரையிடுக