25 விழுக்காடு சேர்க்கை அளிக்காத பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும்!

புதிய கல்வி உரிமைச் சட்டத்தின்படி
கல்விக் கட்டணத்தை பள்ளிகளுக்கு தமிழக அரசு உடனே வழங்க வேண்டும்!
25 விழுக்காடு சேர்க்கை அளிக்காத பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும்!

தொல்.திருமாவளவன் அறிக்கை
 

புதிய கல்வி உரிமைச் சட்டத்தின்படி தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஏழை எளிய மாணவர்களுக்கு அனைத்துப் பள்ளிகளிலும் 25 விழுக்காடு கட்டணமில்லாக் கல்வி வழங்குவதற்கு ஏற்கனவே அரசாணை பிறப்பிக்கப்பட்டு அவை நடைமுறையிலும் இருந்து வருகிறது.  அவ்வரசாணையின்படி சிறுபான்மையினர் நடத்துகின்ற பள்ளிகளுக்கு மட்டும் மேற்கண்ட விதிகளிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.  
 
ஆனால் தற்போது மைய அரசு பாடத்திட்டத்தின்படி இயங்கி வருகின்ற மைய இடைநிலைக் கல்விக் கூடங்களில் (சிபிஎஸ்சி) புதிய கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் மாணவர் சேர்க்கை நடைபெறவில்லை எனத் தெரிய வருகிறது.  அதற்குக் காரணமாக, அப்பள்ளிகளில் ஏற்கனவே சேர்க்கப்பட்டுள்ள மாணவர்களுக்குரிய கல்விக் கட்டணத்தை மைய இடைநிலைக் கல்விக்கூடங்களுக்கு அரசு வழங்கவில்லை என்கிற குற்றச்சாட்டை அவர்கள் முன்வைத்ததுடன் இவ்வாண்டுக்குரிய 25 விழுக்காடு மாணவர்களைச் சேர்ப்பதற்கு தயக்கம் காட்டியும் வருகின்றனர்.  ஆனால், அச்சட்டமானது அரசு உதவிபெறும் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள் மற்றும் சிபிஎஸ்சி பள்ளிகள் ஆகிய அனைத்துப் பள்ளிகளிலும் கட்டணமில்லாக் கல்வி சேர்க்கையில் 25 விழுக்காடு வழங்க வேண்டுமெனக் குறிப்பிட்டுள்ளது.  
 
ஆகவே, தமிழக அரசு இப்பிரச்சனையில் உடனடியாகத் தலையிட்டு சிபிஎஸ்சி பள்ளிகளுக்கு புதிய கல்வி உரிமைச் சட்டத்தின்படி வழங்க வேண்டிய கல்விக் கட்டணத் தொகையை உடனடியாக வழங்குவதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதுடன் அச்சட்டத்தின்கீழ் 25 விழுக்காடு மாணவர்களைச் சேர்க்காத மெட்ரிக் மற்றும் சிபிஎஸ்சி பள்ளிகள் மீது உரிய நடவடிக்கை எடுத்து அப்பள்ளிகளுக்கான அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டுமெனவும் தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறோம்.

இவண்
தொல்.திருமாவளவன்

0 comments:

கருத்துரையிடுக