அனைத்து விளிம்புநிலை சமூகத்தினரும் பங்கேற்கும் வகையில் அரசு வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட வேண்டும்!

அனைத்து விளிம்புநிலை சமூகத்தினரும் பங்கேற்கும் வகையில் அரசு வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட வேண்டும்!
தொல். திருமாவளவன் அறிக்கை. 
-------------------------
 
 
உயர்நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றங்கள், ஆணையங்கள், தீர்ப்பாயஙகள் மற்றும் பல சிறப்பு நீதிமன்றங்களில் தமிழக அரசு  அரசு வழக்கறிஞர்களை நியமிக்கிறது.அதாவது,சிவில் வழக்குகள் மற்றும் குற்ற வழக்குகளில் அரசு தரப்பில் வாதாடுவதற்கென அரசு வழக்கறிஞர்கள், அரசு கூடுதல் வழக்கறிஞர்கள், அரசுக்குற்றவியல் வழக்கறிஞர்கள் மற்றும் சிறப்பு வழக்கறிஞர்கள் ஆகியோரை தமிழக அரசு நியமித்து வருகிறது. இவர்களுக்குரிய வழக்குக்கட்டணங்கள் மக்களின் வரிப்பணத்திலிருந்து தான் வழங்கப்படுகிறது. 
 
ஆனால், இவ்வாறு நியமிக்கப்படுவோர் நூறு விழுக்காடு ஆளுங்கட்சியைச் சார்ந்தவர்களாகவே உள்ளனர். சட்ட நுணுக்கமோ, வாதாடும் திறனோ இதற்கு அளவுகோலாகக் கருத்தில் கொள்வதில்லை. ஆளுங்கட்சி உறுப்பினர், ஆளுங்கட்சி ஆதரவாளர் என்பவை மட்டுமே அளவுகோலாகக் கொள்ளப்படுகிறது.
 
இதனால், சமூகநீதி மற்றும் மக்கள் நலத்திட்டங்களைச் செயல்படுத்துதல் உள்ளிட்ட பெரும்பாலான வழக்குகளில் அரசுக்கு எதிராகவே தீர்ப்புகள் வருகின்றன.

கடந்த பத்தாண்டுகளில் மட்டும் ஏராளமான குற்ற வழக்குகளில் பெரும்பாலான குற்றவாளிகள் விடுதலையடைந்துள்ளனர். இதனால் சட்டம் ஒழுங்கு  பிரச்சினைகள் அதிகரித்துள்ளன என்று அண்மையில் சென்னை உயர்நீதிமன்றமே ஒரு வழக்கில் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இதனை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில்  தொடுக்கப்பட்டுள்ள பொதுநல  வழக்குகளில், சென்னை உயர்நீதிமன்ற டிவிசன் பெஞ்ச், மத்திய அரசு, மாநில அரசு, மத்திய மற்றும்  மாநிலத்தலைமை கணக்காயர்களை வரும் ஜூலை -15  க்குள் தங்களது  உரிய விளக்கங்களை அளிக்கவேண்டுமென உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், தமிழ்நாடு  மற்றும்  புதுச்சேரி மாநில அரசுகள், ஏற்கனவே உச்சநீதிமன்றமானது, அரசு வழக்கறிஞர்கள் நியமனம் தொடர்பாக அளித்துள்ள தீர்ப்பையும் கவனத்தில் கொண்டு, சட்ட நுணுக்கம், வாதிடும் ஆற்றல் மற்றும் பொது  நிலையிலான அணுகுமுறை ஆகியவற்றை   அடிப்படையாகக்கொணடு அனைத்து விளிம்புநிலை சமூகத்தினரும் பங்கேற்கும் வகையில் தமிழக முதல்வர் அவர்கள் , அரசு தரப்பு வழக்கறிஞர்களை நியமிக்கவேண்டுமென்று விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம்.


இவண்,
தொல்.திருமாவளவன்
தலைவர்,
விடுதலைச்சிறுத்தைகள் கட்சி.

0 comments:

கருத்துரையிடுக