தமிழக அமைச்சரவையில் இசுலாமியருக்கும் அருந்ததியருக்கும் பிரதிநிதித்துவம் அளிப்பதுதான் நன்றிக்குரிய செயல்!

தமிழக அமைச்சரவையில்
இசுலாமியருக்கும் அருந்ததியருக்கும் பிரதிநிதித்துவம் அளிப்பதுதான் நன்றிக்குரிய செயல்!
தொல்.திருமாவளவன் அறிக்கை


தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்னும் மாற்று அரசியலை முன்வைத்த எமது கூட்டணியின் முயற்சி வெற்றி பெறவில்லை.  தமிழகத்தில் மீண்டும் ஒரு கட்சி ஆட்சிமுறையே தக்கவைக்கப் பெற்றுள்ளது.  இந்தத் தேர்தல் முடிவானது, மக்கள் மனமுவந்து அளித்த தீர்ப்பாகாது. போலி வாக்குறுதிகள், கவர்ச்சி அறிவிப்புகள், வாக்குகளுக்கு விலை போன்றவற்றால் அப்பாவி வாக்காளர்களை வஞ்சித்து வழிப்பறி செய்த வெற்றி என்பது வெற்றி பெற்றவர்களின் மனசாட்சிக்கே தெரியும்.  மகிழ்ச்சியடைவதற்கோ, பெருமைப்படுவதற்கோ உரிய வெற்றி அல்ல என்பது வெற்றி பெற்ற ஒவ்வொருவருக்கும் ஆட்சியைக் கைப்பற்றியவர்களுக்கும் மிக நன்றாகவே தெரியும்.  

எமது கூட்டணிக்கு ஏற்பட்டுள்ள இந்தப் பின்னடைவால் எமது நோக்கம் தவறானது என்று பொருளாகாது.  திமுகவும் அதிமுகவும் தங்களின் இருப்பைத் தக்கவைத்துக்கொள்வதற்காக பல்லாயிரம் கோடி ரூபாய்களைக் கொட்டி இரைக்க வேண்டிய நெருக்கடிகளுக்கு ஆளாயின.  குறிப்பாக, ஆர்.கே.நகர், திருவாரூர், கொளத்தூர் ஆகிய தொகுதிகளிலும் நூறு விழுக்காடு வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்தேயாக வேண்டும் என்கிற நெருக்கடி தலைவர்களுக்கே உருவானது.  இது எமது கூட்டணி ஏற்படுத்திய தாக்கம் என்பதை எவராலும் மறுக்க இயலாது.  தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளின்படி தொகுதி ஒன்றுக்கு 28 இலட்சம் மட்டுமே செலவு செய்ய வேண்டிய நிலையில், குறைந்தது முப்பது கோடிகளுக்கும் மேல் தலைவர்களே செலவு செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர் என்பது எமது கூட்டணிக்குக் கிடைத்த வெற்றியே ஆகும்.  தமிழகம் முழுவதும் எமது கூட்டணிக்கு சுமார் 15 இலட்சம் வாக்குகளுக்கும் மேலாக மக்கள் வாக்களித்துள்ளனர். இந்த வாக்குகள் ஒவ்வொன்றும் விலையின்றிப் பெறப்பட்டவையாகும்.  ஒவ்வொரு வாக்கும் கோடிப் பொன்னுக்கும் மேலானதாகும்.

இந்நிலையில், ஆட்சியைக் கைப்பற்றியுள்ள அதிமுக, தமது அமைச்சரவைப் பட்டியலை வெளியிட்டுள்ளது.  அப்பட்டியலில் தலித் வகுப்பைச் சார்ந்தவர்கள் மூவருக்கு மட்டுமே வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.  குறிப்பாக, இந்த முறை தலித் கிறித்தவர் ஒருவருக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டிருப்பது ஆறுதல் அளிக்கிறது. அதே வேளையில், இந்தப் பட்டியலில் இசுலாமியர் ஒருவருக்குக்கூட வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பது ஏமாற்றத்தை அளிக்கிறது.  அதேபோல,  அருந்ததியர் சமூகத்தில் ஒருவருக்கும் வாய்ப்பளிக்கவில்லை என்பது அச்சமூகத்திற்கு இழைக்கும் துரோகமாகும்.  'ஒரே கல்லில் மூன்று காய்' என்று சொல்லும் வகையில் பெஞ்சமின் என்பவருக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.  சிறுபான்மைச் சமூகத்திற்கு வழங்கியுள்ளோம் என்றும், ஆதி திராவிடர் சமூகத்திற்கு வழங்கியுள்ளோம் என்றும், தலித் கிறித்தவர் ஒருவருக்கு வழங்கியுள்ளோம் என்றும் சொல்லிக்கொள்ளலாம் என்னும் நோக்கில் செய்யப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. இது அருந்ததியர் மற்றும் இசுலாமியரை வஞ்சிக்கும் செயலாகும்.  அருந்ததியர் சமூகத்தின் வாக்குகளைப் பெற்றுக் கொண்டு அச்சமூகத்தை வஞ்சிப்பது மனசாட்சிக்கு எதிரான செயலாகும்.

எனவே, அமைச்சரவையில், இசுலாமியருக்கும், அருந்ததியருக்கும் பிரதிநிதித்துவம் அளிப்பதுதான் நன்றிக்குரிய செயலாக அமையும் என்பதை விடுதலைச் சிறுத்தைகள் சுட்டிக்காட்டுகிறது.

இவண்

தொல்.திருமாவளவன்

0 comments:

கருத்துரையிடுக