மருத்துவக் கல்விக்கான தகுதி நுழைவுத் தேர்வு - உச்சநீதிமன்ற தீர்ப்பு சமூகநீதிக்கு எதிரானது!

மருத்துவக் கல்விக்கான தகுதி நுழைவுத் தேர்வு - 
உச்சநீதிமன்ற தீர்ப்பு சமூகநீதிக்கு எதிரானது!
தமிழக அரசு மேல் முறையீடு வழக்கு தொடுக்க வேண்டும் 
தொல்.திருமாவளவன் வேண்டுகோள்

---------------

 
அனைத்து மருத்துவக் கல்விக்கான தேசிய தகுதி நுழைவுத் தேர்வு நடத்திட உச்சநீதிமன்றம் இன்று குறிப்பிட்ட கால அட்டவணைகளுடன் தீர்ப்பளித்துள்ளது. இது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. 

2013ஆம் ஆண்டு இதே உச்சநீதிமன்றம் இத்தேர்வுக்கு தடைவிதித்தது. அதனை எதிர்த்து இந்திய மருத்துவ கவுன்சிலின் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த ஐந்து நீதிபதிகளை கொண்ட அரசியலமைப்பு அமர்வு தடையை நீக்கி இந்த ஆண்டே தகுதி நுழைவுத் தேர்வை நடத்துமாறு காலவரையரைகளுடன் தீர்ப்பளித்துள்ளது. கல்வி தரத்தை மேம்படுத்துவதற்காக இத்தகைய தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என சில கல்வியாளர்கள் இதனை வரவேற்கவும் செய்கின்றனர்.

ஆனால் இத்தீர்ப்பானது கிராமபுறத்து மாணவர்களையும் சமூக மற்றும் பொருளாதார அடிப்படையில் மிகவும் பின்தங்கியுள்ள குடும்பப் பின்னணிகளை கொண்ட மாணவர்களையும் வெகுவாகபாதிக்கும். இந்தியா முழுவதும் அனைவருக்கும் அடிப்படை கல்வியானது ஒரே தரமும் ஒரே பாடத்திட்டமும் கொண்டதாக வழங்கும் நிலையில்லை. அத்துடன் இந்தியா முழுவதும் மாணவர்கள் அனைவரும் ஒரே வகையான சமூக பொருளாதார பின்னணிகளை கொண்டவர்களாகவும் இல்லை. மேலும் வாழிடமும் நகர்புறம், பெருநகரம், கிராமபுறங்கள் என்னும் பல்வேறு நிலைகளைக் கொண்டிருக்கிறது. இத்தகைய வேறுபாடுகளை கொண்டிருக்கும் நிலையில் அனைவருக்குமான பொதுவான தகுதி நுழைவுத் தேர்வை நடத்துவது என்பது சமூகநீதிக்கு எதிரானதாகும். எனவே இத்தீர்ப்பினை எதிர்த்து தமிழக அரசு உடனடியாக மேல்முறையீடு வழக்கு தொடுக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் வேண்டுகோள் விடுக்கிறது.

இவண்
தொல்.திருமாவளவன்.

0 comments:

கருத்துரையிடுக