அறிவுத்தலைமையின் ஆற்றலாக திருமாவளவன் இருக்கிறார்


மையங்களை நோக்கி
ஒரே சிரிப்பாகத்தான் இருக்கிறது, மக்கள் நலக்கூட்டணியின் தற்போதைய நகர்வுக்குறித்து மிக அக்கறையோடு பதிவிடும் அறிவுஜீவிகளின் கூற்றுக்களைக் கண்டு.

அவர்கள் இருக்கும் கட்சிக்கு ஆதரவாக அவர்கள் பேசுவது இயல்புதான்.

இதுவரை மக்கள் நலக்கூட்டணியின் தலைவர்கள் குறித்த ‘நல்ல’ எண்ணங்கள் எதுவும் வெளியிடாதவர்கள் இப்போது இவர்கள் இப்படி செய்துவிட்டார்களே என்று பேசுவது சந்தர்ப்பவாதம்.திருமாவை தலித் தலைவராகவே பார்த்தவர்கள் இந்தக்கூட்டணி அமைந்ததும் தெலுங்கர்களின் கூட்டணியில் ‘தமிழர் திருமா’ என்று கூறியிருக்கின்றனர். தலித் முதல்வராக திருமாவளாவனை ஏற்காத வைகோ, விஜயகாந்தை ஏற்றுக்கொண்டாரே என்கிறார்கள். சரியானக் கூற்றுதான்.

திருமாவளவனை வெறும் வேட்பாளராகக் கூட ஏற்றுக்கொள்ளாதவர்கள்தானே உங்கள் தலைவர்கள். நாடாளுமன்ற தேர்தலில் அந்தக்கூட்டணியில் அடுத்த பெரியகட்சியாக இருந்து ஈழத்தமிழர் பிரச்சினையில் உங்கள் தலைவர்மீது வைக்கப்பட்ட விமர்சனங்களை எதிர்த்து அவரைக் காப்பாற்றியவருக்கு ஓர் இடம் அதிகம் தரமுடியாத உங்கள் கருணை உள்ளங்கள் மிகவும் அகன்றவை.

திருமாவளவன் என்னும் ஆளுமைக்குத் தலைமைக்கான அத்தனைத் தகுதிகளும் இருந்தும் அவரை ஒரு பொருட்டாக மதிக்காத பேரிரைச்சல் அரசியலுக்கு இன்று அவர் திருப்பித் தந்திருக்கும் அமைதியான பதிலடி இந்தக் கூட்டணி.

ஓர் அரசியல்வாதி அடுத்தத் தேர்தலைச் சிந்திக்கிறான் ஒரு சீர்த்திருத்தவாதியோ அடுத்தத் தலைமுறையைச் சிந்திக்கிறான். சமூகத்திற்கானப் போராட்டங்கள் கருத்தரங்கள் என்றால் உடனே கூப்பிடு திருமாவை என்னும் சிறுபான்மை இயக்கங்கள்கூட தேர்தல் வந்தால் இடந்தேடி அலைகின்ற சூழலில், மதவாதத்தின் வேர்களை எப்படியாவது ஊன்றிவிடலாம் என்ற பிஜேபியின் கனவை உடைத்து அவர்களைத் தனிமைப்படுத்தி இருக்கும் அரசியல் சாத்தியமாகி இருக்கிறது. ஜாதி அரசியலை முன்வைத்து ஓட்டுகளை அறுவடைச்செய்து ஆட்சிக்கு வந்துவிடலாம் என்னும் அறமற்ற அரசியலும் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது எத்தகைய ஒரு புத்தியுள்ள யுக்தி. அது திருமாவளவன் என்னும் சமூகசீர்த்திருத்தவாதியால் மட்டுமே முடிந்திருக்கிறது. வேறுவழியில்லாமல் காங்கிரசில்லாமல் இருந்தால் பிஜேபியுடன் திமுக கைக்கோர்க்கலாம். பாமக இப்போது வந்தாலும் அவர்கள் சேர்த்துக்கொள்ள தயார்தான், அதற்கான மரியாதை அவரிடம் அப்படியேதான் இருக்கின்றது.

அறிவும் ஆற்றலும் வீணடிக்கப்படும் தேர்தல் அரசியல் சூழ்நிலையில் முகங்கள் தானே முக்கியமாக இருக்கின்றன. எத்தனையோ கொள்கையாளர்கள் காலங்காலமாக, எனக்குத் தெரிந்து, திமுகவிற்காக திருமணம் கூட செய்து கொள்ளாமல் ஒவ்வொரு அசைவிலும் தலைவரையே எண்ணி எண்ணி வாழ்ந்துகொண்டு இதுவரை பத்திற்கும் மேற்பட்ட தேர்தல்களில் விருப்பமனுகொடுத்து பணங்கட்டி தேர்தலில் சீட் கிடைக்காமல் இந்த முறையும் அதே வேலையை செய்துகொண்டிருக்கும் அப்துல் அலி போன்றவர்கள் அப்படியே இருக்க, புதிதாக வந்த பிரபல முகங்கள் எந்தவிதமான துன்பமும் இன்றி திமுகவின் முகங்களாக மாறிவிடுவதும் தேர்தல் ஜனநாயகம் தானே?

தேர்தல் அரசியலில் எதுவும் நடக்கலாம். சமூக அரசியலில் மாற்றம் என்பது மிகவும் முக்கியம். சமூக மாற்றத்திற்கான தேர்தல் அரசியலை நகர்த்துவதின் முதல் கட்டம்தான் இது.

தேர்தலுக்குப் பிறகு விடுதலைச் சிறுத்தைகள் முன்மொழிந்திருக்கிற கூட்டணி ஆட்சி வருமென்ற சூழல் நிலவுமாயின் மக்கள்நலக் கூட்டணி + தேமுதிக + திமுக ஆட்சி வந்தால் இவர்கள் என்ன சொல்வார்கள்?

விளிம்புநிலையில் இருந்து புறப்பட்டு மையத்தை நோக்கி நகர்ந்து தகவைமைந்து மையத்தைக் கலைத்து சமநிலையை உருவாக்குவது இன்றைய அறிவுத்தலைமையின் ஆற்றலாக இருக்கிறது. அது திருமாவளவனிடமிருக்கிறது. தமிழ்ச்சமூகம் அவரை முன்வைக்கிற காலம் வந்துகொண்டே இருக்கிறது.

- யாழன் ஆதி

0 comments:

கருத்துரையிடுக