உடுமலைப்பேட்டையில் பட்டப் பகலில் தலித் இளைஞர் வெட்டிக்கொலை சட்டம் - ஒழுங்கு சந்தி சிரிக்கிறது தொல்.திருமாவளவன் கண்டனம்

உடுமலைப்பேட்டையில் காதல் திருமணம் செய்துகொண்ட தம்பதியினரை பட்டப் பகலில் பொதுமக்கள் முன்னிலையில் வெட்டிப் படுகொலை செய்துள்ளனர்.  கொலையாளிகள் எல்லோருக்கும் முன்பாக இரு சக்கர வாகனத்தில் ஏறிச்செல்வது சிசிடிவி கேமராவில் பதிவாகியிருக்கிறது. கொலைநடந்து ஒரு நாள் ஆகியும்கூட கொலையாளிகள் கைது செய்யப்படவில்லை. இது தமிழக அரசு சட்டம்-&ஒழுங்கைக் காப்பாற்றத் தவறிவிட்டது என்பதற்கு வெளிப்படையான சான்றாக உள்ளது.  அதிகரித்துவரும் ஆணவக் கொலைகளைக் கட்டுப்படுத்தத் தவறிய தமிழக அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
 
கடந்த 8 மாதங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்துகொண்ட சங்கர்&கௌசல்யா இருவரையும் கொலை செய்வதாக கௌசல்யாவின் பெற்றோர் தொடர்ந்து அச்சுறுத்தல் விடுத்து வந்துள்ளனர்.  இதுகுறித்து கௌசல்யா காவல் நிலையத்தில் தனது தந்தையின் மீது புகார் கூறியுள்ளார்.  அதனடிப்படையில் அவரது தந்தையை காவல்துறையினர் அழைத்து எச்சரித்து மட்டும் அனுப்பியுள்ளனர்.  இந்தப் புகாரின் மீது உரிய நடவடிக்கை எடுத்து அவர்களுக்குப் பாதுகாப்பு அளித்திருந்தால் இந்தப் படுகொலை நிகழ்ந்திருக்காது.  இதற்கு முழுக்க முழுக்க தமிழகக் காவல்துறையும் தமிழக அரசும்தான் பொறுப்பேற்க வேண்டும்.
 
அரியானா மாநிலத்தைத்தைப் போல, தமிழ்நாட்டிலும், அதிமுக ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து  ஆணவக் கொலைகள் அதிகரித்து வருகின்றன. இதற்கு சாதிவெறி அமைப்புகளின் வெளிப்படையான வெறுப்புப் பிரச்சாரமே முதன்மையான காரணமாகும்.  வெறுப்புப் பிரச்சாரத்தைக் கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.  ஆணவக் கொலைகளைத் தடுக்க உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்தபடி சிறப்புச் சட்டம் ஒன்றை இயற்ற வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.  பல்வேறு அரசியல் கட்சிகளும்கூட இதற்காகக் குரல்கொடுத்து வருகின்றன.  ஆனால், சாதிவெறி அமைப்புகளைக் கட்டுப்படுத்த தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எதையும் எடுக்காததாலேயே மேலும் ஓர் ஆணவக் கொலை நடந்தேறியிருக்கிறது.  இது தமிழர்கள் அனைவரும் வெட்கித் தலைகுனிய வேண்டிய ஒன்றாகும்.
 
உடுமலைப்பேட்டை படுகொலையில் ஈடுபட்ட சாதிவெறியர்களையும், கூலிப் படையினரையும் உடனடியாகக் கைது செய்ய வேண்டும்.  தேர்தல் காலம் என்பதால் சாதிவெறி அமைப்புகள் தேர்தல் இலாபத்திற்காகக் கலவரங்களைத் தூண்டிவிடும் ஆபத்து உள்ளது.  எனவே, சாதிக் கலவர அபாயம் உள்ள பகுதிகளில் இப்போதே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.

இவண்
தொல்.திருமாவளவன்

0 comments:

கருத்துரையிடுக