எஸ்.வி.எஸ். இயற்கை மருத்துவக் கல்லூரி மாணவிகள் மர்ம மரணம் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்

எஸ்.வி.எஸ். இயற்கை மருத்துவக் கல்லூரி மாணவிகள் மர்ம மரணம்
சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்
தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்
 
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில் உள்ள எஸ்.வி.எஸ்.இயற்கை மருத்துவக் கல்லூரியில் பயின்று வந்த மூன்று மாணவிகள் மர்மமான முறையில் மரணமடைந்தது நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அவர்கள் நீரில் மூழ்கி இறக்கவில்லை என்று சிபிசிஐடி அறிக்கையில் தெரியவந்துள்ளது.  அந்த மாணவிகள் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் எனவே இந்த விசாரணையை மையப் புலனாய்வு அமைப்பான சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டுமென்றும் தொடக்கம் முதலே விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கூறிவந்தது.  மாணவிகள் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற ஐயம் உறுதிப்பட்டுள்ள நிலையில் இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு ஒப்படைக்க வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.
 
எஸ்.வி.எஸ். கல்லூரிக்கு அனுமதி வழங்கியது தொடர்பாக, அப்போது மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த திரு. அன்புமணி அவர்கள் மீது பல்வேறு கட்சிகளும் குற்றச்சாட்டுகளைத் தெரிவித்து வந்தன.  அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் ஏதுமில்லாத நிலையில் அந்தக் கல்லூரிக்கு எவ்வாறு ஒப்புதல் அளிக்கப்பட்டது என்று அவர் விளக்கமளிக்க வேண்டுமென்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் கோரிக்கை விடுத்திருந்தது.  
 
இதனால் கோபமடைந்த பா.ம.க. நிறுவனர் இராமதாஸ் அவர்கள் அந்தக் கல்லூரி நிர்வாகத்தோடு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைத் தொடர்புபடுத்தி அவதூறு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.  அவர் கூறியிருக்கும் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை. 
 
இப்படி அவதூறு பரப்புவதன் மூலம் அப்பகுதியில் சமூகப் பதற்றத்தைத் தூண்ட வேண்டுமென்பதே அவரது நோக்கம்.   அண்மைக்காலமாக அவர் விடுதலைச் சிறுத்தைகளைக் குறிவைத்து அவதூறு பரப்பி வருவது, தேர்தல் காலத்தில் 'தர்மபுரி'யைப்போல் இலாபமடையலாம் என்ற அவரது தீய நோக்கத்தையே வெளிப்படுத்துகிறது. இதை அரசாங்கம் கவனத்தில்கொண்டு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்று வலியுறுத்துகிறோம்.

இவண்

தொல்.திருமாவளவன்

0 comments:

கருத்துரையிடுக