தேர்தல் நேரத்தில் சாதிவெறியைத் தூண்டும் பாமகவின் சதித்திட்டத்தை அரசு முறியடிக்கவேண்டும்

விடுதலைச் சிறுத்தைகள் மீது வீண்பழி சுமத்தும் பாமக
தேர்தல் நேரத்தில் சாதிவெறியைத் தூண்டும் 
பாமகவின் சதித்திட்டத்தை அரசு முறியடிக்கவேண்டும்
விடுதலைச் சிறுத்தைகள் அறிக்கை

கடந்த 2013ஆம் ஆண்டு பாட்டாளி மக்கள் கட்சியினர் நடத்திய சாதிச்சங்க மாநாட்டின்போது கிழக்குக் கடற்கரை சாலையில் புதுச்சேரியிலிருந்து மாமல்லபுரம் வரையில் வழிநெடுகிலும் காலாப்பட்டு, பிள்ளைச்சாவடி முதலான ஊர்களில் தொடங்கி கடைகளை சூறையாடியும், சாலையில் போனவர்களையெல்லாம் ஆபாசமாக வசைபாடியும் சென்றனர். இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வாழும் கோட்டகுப்பம், கூனிமேடு மற்றும் தலித் மக்கள் வசிக்கும் மரக்காணம் ஆகிய பகுதியில் பாமகவினர் வன்முறையில் ஈடுபட்டனர். குறிப்பாக, மசூதிகளில் பீர்பாட்டில்களை வீசியும், இஸ்லாமியப் பெண்களிடம் ஆபாசமாகப் பேசியும், இஸ்லாமியர்களின் கடைகளுக்கு தீவைத்தும் வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்டனர். அத்துடன், மீனவர்களையும் தாக்கியுள்ளனர். அனுமந்தை பகுதியைச் சார்ந்த பா.ம.க.வினரின் ஏற்பாட்டில் மது அருந்திவிட்டு நெடுஞ்சாலையிலிருந்த மரங்களையும் தலித் குடியிருப்பையும் தீவைத்து எரித்தனர். விழுப்புரம் மாவட்ட எஸ்.பி.தலைமையில் மிகக்குறைந்த எண்ணிக்கையிலான காவலர்களே பாதுகாப்புப் பணியில் இருந்ததால் வன்முறையாளர்களை அவர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை.
இந்த திட்டமிட்ட சாதிவெறித் தாக்குதலில் தலித்துகளும், முஸ்லீம்களும், பிற சமூகத்தினரும்தான் பாதிப்பட்டனர் என்பதை தமிழக முதலமைச்சர் சட்டமன்றத்தில் விரிவாக தமது அறிக்கையில் எடுத்துரைத்தார். மரக்காணம் வன்முறை வெறியாட்டத்தைத் தொடர்ந்து பா.ம.க. தலைவர் கைது செய்யப்பட்டதையொட்டி, வடமாவட்டங்களில் மீண்டும் தூண்டிவிடப்பட்ட பா.ம.க.வினரின் திட்டமிட்ட வன்முறையால் பல இடங்களில் பாலங்கள் வெடிகுண்டுவைத்து தகர்க்கப்பட்டன. கல்வீச்சில் அப்பாவிகளும் வாகன ஓட்டுநர்களும் படுகொலை செய்யப்பட்டனர். கோடிக்கணக்கான மதிப்புள்ள அரசு சொத்துக்கள் அழிக்கப்பட்டன. சேதமடைந்த அரசுச் சொத்துக்களை மதிப்பிட்டு பாமகவினரிடம் அதற்கான நஷ்டஈட்டை வசூலிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது. ஆனால், சில வாரங்களில் மாநில அரசின் வேகம் குறைந்துவிட்டது. 
பாமகவினர் இறந்ததற்கு விபத்துதான் காரணம் என முதலில் அறிவித்த தமிழக அரசு பின்னர் சாதிவெறியை ஒடுக்குவதில் மெத்தனம் காட்டியதால் விசாரணை திசைமாறியது. கலவரத்தில் பாதிக்கப்பட்ட தலித் மக்களே பலியாடுகளாக்கப்பட்டனர். இந்த வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளவர்கள் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் உறுப்பினர்கள் அல்ல. அந்த கிராமத்தைச் சார்ந்த அப்பாவிகள்தான்.  மேல்முறையீட்டில் அவர்களுக்கு நிச்சயம் நீதி கிடைக்கும் என்கிற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. இந்தத் தீர்ப்பை சாக்காக வைத்துக்கொண்டு விடுதலைச் சிறுத்தைகள் மீதும், தலித் மக்கள் மீதும் வீண்பழிச்சுமத்தி மீண்டும் சாதிய வன்முறையைத் தூண்டும் விதமாக பாமக நிறுவனர் விடுத்துள்ள அறிக்கை அவரது தீய நோக்கத்தையே காட்டுகிறது. தேர்தல் நேரத்தில் சாதியவெறியை முதலீடாக வைத்து பழக்கப்பட்ட அவர் இப்போதும் அதே வேலையில் இறங்கியுள்ளார்.
தமிழக மக்கள் இதனை புரிந்துக்கொள்ளவேண்டுமென்றும், தமிழக அரசு விழிப்போடு இருந்து சாதிவெறியர்களின் சதித்திட்டத்தை முறியடிக்க வேண்டுமென்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கேட்டுக்கொள்கிறது.

இவண்.
தொல்.திருமாவளவன்

0 comments:

கருத்துரையிடுக