வளர்ச்சிக்கு உதவாத வாய்ப்பந்தல் பட்ஜெட்

வளர்ச்சிக்கு உதவாத வாய்ப்பந்தல் பட்ஜெட்
தொல்.திருமாவளவன் கருத்து


பா. ஜ.க. அரசால் இன்று சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் நிதிநிலை அறிக்கை ஏழை எளிய மக்களுக்கோ நடுத்தர மக்களுக்கோ பயனளிப்பதாக இல்லை. அதுமட்டுமின்றி, நடுத்தர மக்கள் மீது தாங்க முடியாத வரிச்சுமையை திணிப்பதாகவும் உள்ளது. 
 
நாட்டின் பொருளாதார நிலை முன்னேறிக்கொண்டிருக்கிறது என உரத்து முழங்கும் பா.ஜ.க. ஆட்சியாளர்கள் அதற்கு உதவும் வகையில் பட்ஜெட்டில் எந்தவொரு அறிவிப்பையும் செய்யவில்லை.  வருமான வரி உச்சவரம்பு உயர்த்தப்படவில்லை. புதிய வேலைவாய்ப்புகளுக்கான எந்தவொரு அறிவிப்பும் இல்லை.  ஆனால், நடுத்தர மக்கள் மீது மறைமுக வரியை ஏராளமாக உயர்த்தியிருக்கிறது.

'மாசு வரி' என்னும் கூடுதல் வரி ஒன்றை நிதியமைச்சர் அருண்ஜேட்லி கண்டுபிடித்திருக்கிறார். மோட்டார் வாகனங்களின் மீது இந்தக் கூடுதல் வரி விதிக்கப்பட்டிருக்கிறது. சுற்றுச்சூழல் மாசடைய முதன்மையான காரணம் வாகனங்கள் அல்ல.  தொழிற்சாலைகளே அதிக அளவில் மாசுகளை வெளியிடுகின்றன.  இந்த உண்மையை மறைத்து வாகனங்கள் வைத்திருப்போர் மீது அபராதம் விதிப்பதுபோல இப்போது மாசு வரி என்ற கூடுதல் வரியை விதிப்பது ஏற்புடையது அல்ல.

இன்னும் ஐந்து ஆண்டுகளில் விவசாயிகளின் வருமானத்தை இரண்டு மடங்காக உயர்த்துவோம் என பட்ஜெட்டில் சொல்லியிருக்கிறார்கள்.  இடுபொருட்களின் விலையைக் குறைப்பது, உற்பத்திப் பொருட்களுக்கான ஆதரவு விலையைக் கூட்டுவது முதலான எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தாமல் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்போம் எனச் சொல்வது மோடி அரசின் மோசடியே தவிர வேறல்ல.

எஸ்.சி./எஸ்.டி. பிரிவுகளைச் சேர்ந்த தொழில் முனைவோருக்கு உதவ 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்திருப்பதாக பட்ஜெட்டில் கூறியுள்ளனர்.  இது எந்தவிதத்திலும் போதுமானதல்ல.  எஸ்.சி./எஸ்.டி. துணைத் திட்டங்களின் அடிப்படையில் பட்ஜெட்டில் இந்தப் பிரிவினருக்கு ஒதுக்கப்பட வேண்டிய தொகையை ஒதுக்காமல் இப்படி அலங்காரமாக அறிவிப்புகளைச் செய்வது, அம்பேத்கரின் பெயரை விளம்பரத்துக்காகப் பயன்படுத்துவது போன்ற செயல்கள் பா.ஜ.கவின் தலித் விரோத நோக்கத்தை மறைப்பதற்குச் செய்யும் தந்திரங்களாகவே உள்ளன.

திறன் மேம்பாட்டுப் பயிற்சிக்காக மையங்கள் உருவாக்கப்படுமென்று கூறியுள்ளனர்.  ஏற்கனவே அவ்வாறு பயிற்சி பெற்ற 70 லட்சத்துக்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு வேலை கிடைத்துவிட்டதா, இந்தப் பயிற்சியால் அவர்கள் பயனடைந்திருக்கிறார்களா என்பனவற்றையெல்லாம் பா.ஜ.க.அரசுதான் கூற வேண்டும்.

இந்த பட்ஜெட் நாட்டிலுள்ள கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும், பெரும் பணக்காரர்களுக்கும் ஆதரவானது.  ஏழை எளிய மக்களுக்கும், நடுத்தர மக்களுக்கும் எதிரானது.  மொத்தத்தில் வளர்ச்சிக்கு உதவாத வாய்ப்பந்தல் பட்ஜெட்.

இவண்

தொல்.திருமாவளவன்

0 comments:

கருத்துரையிடுக