அதிமுக வாக்குகளையே மக்கள் நலக் கூட்டணி சிதறடிக்கும்: திமுக வாக்குகளை பிரிக்க வாய்ப்பில்லை - திருமாவளவன் கணிப்பு


அதிமுகவுக்கு சாதகமான வாக்கு களையே மக்கள் நலக் கூட்டணி சிதறடிக்கும். திமுக வாக்கு வங்கியை நாங்கள் பிரிக்கவில்லை என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.


இது தொடர்பாக ‘தி இந்து’வுக்கு அவர் அளித்த சிறப்புப் பேட்டி:

# மக்கள் நலக் கூட்டணி 2 கட்ட பிரச்சாரங்களை முடித்துள்ளது. மக்கள் உங்களை எப்படிப் பார்க்கின்றனர்?

எங்கள் பிரச்சாரங்களில் கட்சி சாராத வர்களும் கணிசமான அளவில் பங்கேற் கின்றனர். மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர். அந்த மாற்றம் மக்கள் நலக் கூட்டணிதான் என்பதை புரிந்துகொண் டுள்ளனர் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

# திமுகவும் அதிமுகவும் உங்களுக்கு போதிய அங்கீகாரமும், முக்கியத்துவமும் அளிக்காததுதான் ம.ந.கூட்டணி உருவானதற்கு காரணம் என்று பேசப்படுகிறதே?

கடந்தகால அனுபவம், பொதுமக்கள் மனநிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரண மாகத்தான் மக்கள் நலக் கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது. வேறு வழியில் லாமல் இந்தக் கூட்டணியை உருவாக்க வில்லை. வேறு ஒரு வழியை உருவாக்கவே இணைந்துள்ளோம்.

# உங்கள் கூட்டணியில் ஒரு சிறுபான்மையின கட்சிகூட இணையவில்லையே?
மக்கள் நலக் கூட்டியக்கத்தை உருவாக்கியபோது மனிதநேய மக்கள் கட்சி எங்களுடன் இருந்தது. பின்னர் கூட்டணி பேச்சு ஆரம்பித்தபோது விலகியது. இன்றைய அரசியல் சூழலில் திமுக, அதிமுக போன்ற பெரிய கட்சிகளை சார்ந்து இயங்க வேண்டிய இக்கட்டான நிலையில்தான் சிறுபான்மையின அரசியல் கட்சிகள் உள்ளன.

# மக்கள் நலக் கூட்டணி ஒரு மாயை என்று பாமக சொல்கிறதே?
பாமக உட்பட பலரும் செய்கிற விளம்பரங்கள் தான் மாயை. காழ்ப்புணர்ச்சியின் காரணத்தால் அப்படி சொல்கிறார்கள்.

# வாக்குகளை சிதறடித்து அதிமுகவுக்கு சாதகம் செய்யவே மக்கள் நலக் கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது என்ற விமர்சனம் குறித்து?

இது உண்மையல்ல. எம்ஜிஆர் காலத்தில் இருந்தே இடதுசாரிகள் அதிமுகவுக்கு ஆதரவாகவே இருந்து வந்தனர். விடுதலைச் சிறுத்தைகள் சாராத தலித் வாக்கு வங்கியும் காங்கிரஸ், அதிமுகவுக்கே இருந்தது. இப்போது அவர்களும் எங்களுக்கு வாக் களிக்கும் மனநிலையில் உள்ளனர். திமுக வுக்கான இயல்பான வாக்கு வங்கியை நாங்கள் பிரிக்கவில்லை. அதிமுகவுக்கான வாக்குகளைத்தான் எங்கள் கூட்டணி சிதறடிக்கும். இந்தத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணிக்கும் அதிமுகவுக்கும்தான் போட்டி.

# திமுக ஆட்சியில் இருந்தபோது அக்கூட்டணியில் இருந்தீர்கள். இப்போது அதை ஊழல் கட்சி என்று விமர்சிப்பது முரணாக உள்ளதே?

சாதிய பிரச்சினைகளில் திமுகவுடனும், மதவாத பிரச்சினையில் அதிமுகவுடனும் எங்களுக்கு முரண்பாடு உள்ளது. எனினும், அந்த முரண்பாட்டை தாண்டி, தேர்தல் நேரத் தில் இருந்த முதன்மையான மக்கள் பிரச்சி னைக்களுக்காக அவர்களுடன் கூட்டணி அமைத்தோம்.

# கூட்டணிக்கு வந்தால் விஜயகாந்தை முதல்வர் வேட்பாளர் ஆக்குவது பற்றி பரிசீலிப்போம் என்று சொன்னீர்கள். திமுக, அதிமுகவிடம் இருந்து தேமுதிக எந்த வகையில் வித்தியாசப்படுகிறது?

பரிசீலனை என்றால் ஒரு விஷயத்தை ஏற்கவும் செய்யலாம், மறுக்கவும் செய்யலாம். தமிழகத்தில் இன்றைக்கு மதுவும் ஊழலுமே பிரதான பிரச்சினைகள். தேமுதிகவுடன் பல முரண்பாடுகள் இருந் தாலும், ஊழல், மது என்னும் பிரதான பிரச்சினையில் அக்கட்சியுடன் உடன்படு கிறோம். தேமுதிகவுடன் கூட்டணி அமைத்தால் மேலும் வலிமையடைவோம் என்பதால் அக்கூட்டணியை விரும்புகிறோம். குடும்ப அரசியல், தனி மனித செயல்பாடுகள் போன்ற முரண்பாடுகளை முதன்மையாகக் கொள்ளவில்லை.

# திமுக - காங்கிரஸ் மீண்டும் கூட்டணி அமைத்துள்ளது குறித்து?

1967-க்குப் பிறகு திமுக, அதிமுகவுக்கு மாற்றாக ஒரு அணியை காங்கிரஸ் கட்டமைக்கவில்லை. அப்படி செய்திருந்தால், இன்றைக்கு மக்கள் நலக் கூட்டணியை உருவாக்கும் தேவை ஏற்பட்டிருக்காது.

# திமுக கூட்டணியில் விசிக இடம்பெற வேண்டும் என்று பேராயர் எஸ்றா சற்குணம் கேட்டாரே?

மக்கள் நலக் கூட்டணியில் நீண்டதூரம் பயணப்பட்டுவிட்டதால் அதற்கான வாய்ப்புகள் இல்லை என்று கூறிவிட்டேன்.

எம்.மணிகண்டன்

நன்றி : தி இந்து தமிழ்; 28.02.2016

0 comments:

கருத்துரையிடுக