ஜெ.ன்.யூ மாணவர்கள் மீதான தாக்குதல் சிபிஐ, சிபிஐ (எம்) கட்சித் தலைவர்களுக்குக் கொலை மிரட்டல் இந்துத்துவவாதிகளின் வெறியாட்டத்தைக் கட்டுப்படுத்துக!

ஜவர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தாக்குதல்
சிபிஐ, சிபிஐ (எம்) கட்சித் தலைவர்களுக்குக் கொலை மிரட்டல்
இந்துத்துவவாதிகளின் வெறியாட்டத்தைக் கட்டுப்படுத்துக!
மத்திய அரசுக்கு தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்
 
 
   இந்தியாவுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பியதாக பொய்யான குற்றச்சாட்டுகளைச் சொல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் தலைவர் கண்ணையாகுமாரையும், மேலும் சில மாணவர்களையும் தேச விரோத வழக்கில் காவல்துறை கைது செய்து சிறையிலடைத்துள்ளது. ஏபிவிபி என்கிற பாஜகவின் மாணவர் அமைப்பின் வற்புறுத்தலின் பேரில் இந்தப் பொய் வழக்குகள் புனையப்பட்டுள்ளன.  இதற்குக் கண்டனம் தெரிவித்த சிபிஐ கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜா, சிபிஐ (எம்) பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி ஆகியோருக்கு இந்துத்துவ அமைப்பினர் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். சிபிஐ (எம்) கட்சியின் அலுவலகத்தையும் தாக்கிச் சேதப்படுத்தியுள்ளனர்.  இவை மட்டுமின்றி இன்று நீதிமன்ற வளாகத்திற்குள்ளேயே மாணவர்கள், பேராசிரியர்கள், பத்திரிகையாளர்கள் ஆகியோரையும் தாக்கியுள்ளனர். இந்திய நாட்டின் தலைநகரில் நடந்தேறிவரும் இந்த வன்முறைச் சம்பவங்கள் இந்தியாவில் சனநாயக ஆட்சிதான் நடக்கிறதா அல்லது அவசரநிலை காலத்துக் கொடுங்கோலாட்சி நடக்கிறதா என்கிற ஐயத்தை ஏற்படுத்தியுள்ளன. இந்திய சனநாயகத்துக்கும் அரசியலமைப்புச் சட்டத்துக்கும் எதிரான இந்த வன்முறைச் சக்திகளை கட்டுப்படுத்த மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறோம்.
 
ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் நீண்ட நெடிய சனநாயக மரபைக் கொண்டது.  கருத்துச் சுதந்திரத்துக்கும் ஆரோக்கியமான விவாதங்களுக்கும் அடையாளமாகத் திகழ்வது. அங்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் அமைப்பான அகில இந்திய மாணவர் பெருமன்றத்தின் (AISF) பொறுப்பாளர்கள், அப்சல் குரு தூக்கிலிடப்பட்டதையொட்டி நினைவுகூர்ந்து மரண தண்டனை குறித்து கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.  அதனை தேசவிரோதச் செயலாக சித்தரித்து ஏபிவிபி அமைப்பைச் சேர்ந்தவர்கள் அந்நிகழ்வில் புகுந்து கலவரம் செய்ததோடு, மாணவர்களைக் கைது செய்யவும் வைத்துள்ளனர்.   தோழர் டி.ராஜா அவர்களின் மகளும் அப்பல்கலைக்கழகத்தில் ஆய்வு மாணவராக உள்ளவருமான அபராஜிதாவை கைது செய்ய வலியுறுத்தியும், அவருக்குக் கொலை மிரட்டல் விடுத்தும் உள்ளனர்.  இதனிடையே தில்லியிலுள்ள சிபிஐ (எம்) அலுவலகமும் இந்துத்துவவாதிகளால் தாக்கப்பட்டுள்ளது.  தோழர்கள் டி.ராஜா, சீதாராம் யெச்சூரி ஆகியோருக்கு தொலைபேசி மூலம் கொலை மிரட்டல்களும் வந்துள்ளன.
 
இன்று மாணவர் தலைவர் கண்ணையாகுமார் நீதிமன்றத்துக்கு அழைத்துவரப்பட்டபோது அங்கு குழுமியிருந்த மாணவர்கள், ஆசிரியர்கள், பத்திரிகையாளர்கள் அனைவரையும் தேசவிரோதிகள் எனப் பழித்துரைத்து இந்துத்துவ குண்டர்கள் தாக்கியுள்ளனர்.  காவல்துறையின் முன்னிலையிலேயே இந்தத் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.  இதனைத் தடுக்கவோ, தாக்கியவர்களைக் கைது செய்யவோ காவல்துறையினர் முற்படவில்லை.  இது இந்த நாட்டில் சனநாயக ஆட்சி நடைபெறுகிறதா என்கிற கேள்வியை எழுப்பியுள்ளது.  இந்தத் தாக்குதலை நடத்தியவர்களை உடனடியாகக் கைது செய்ய வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் மத்திய அரசை வலியுறுத்துகிறோம்.
 
ஐதராபாத் பல்கலைக்கழகம் முதல் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் வரை நாடு முழுவதும் கல்வி வளாகங்களில் காவிக் கூட்டத்தின் வெறியாட்டம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.  இதைத் தடுத்து நிறுத்தாவிட்டால் மக்களாட்சிக்கு மாபெரும் ஊறு நேர்ந்துவிடும். எனவே, கட்சி பேதம் பாராமல் இந்த வன்முறை வெறியாட்டங்களைக் கண்டித்துக் குரல் எழுப்புமாறு சனநாயக சக்திகளைக் கேட்டுக்கொள்கிறோம்.

இவண்
தொல்.திருமாவளவன்

0 comments:

கருத்துரையிடுக