ஜல்லிக்கட்டுக்குத் தடை - நீதிமன்றத் தீர்ப்பா? மக்களின் உணர்வா?

ஜல்லிக்கட்டுக்குத் தடை - 
நீதிமன்றத் தீர்ப்பா? மக்களின் உணர்வா?
திருநாள்கொண்ட சேரியில் பின்பற்றியதையே பின்பற்றுமா தமிழக அரசு? 
தொல்.திருமாவளவன் கேள்வி
~~~~~~~~~

தமிழ் மக்களின் பாரம்பரிய பண்பாட்டு அடையாளமாக விளங்கும் ‘ஜல்லிக்கட்டு’ என்னும் ‘ஏறுதழுவுதல்’ விளையாட்டு விழாவுக்கு உச்சநீதிமன்றம் தடைவிதித்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக இவ்விழாவை நடத்திட இயலாதநிலை ஏற்பட்டுள்ளது. தேர்தல் நெருங்கிவரும் சூழலில், இது அனைத்துக் கட்சியினராலும் பேசப்படுகிற ஒன்றாக மாறியது. பொது மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு உருவானது. பல்வேறு வடிவங்களில் போராட்டங்கள் தென்மாவட்டங்களில் நடைபெற்றன. இந்நிலையில், மாநில அரசு மைய அரசுக்கு கடிதம் எழுதியது. அவசரச் சட்டம் இயற்றி ஜல்லிக்கட்டு நடத்திட ஏதுவான சூழலை உருவாக்கவேண்டுமெனக் கோரியது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக நீதிமன்ற நடவடிக்கைகளில் முனைப்புக் காட்டாத தமிழக முதல்வர் அவர்கள், கடைசி கட்டத்தில் கடிதம் எழுதுகிறார் என்பது ஒரு கண்துடைப்பு நாடகமே ஆகும். அதேபோல், கடந்த நாடாளுமன்ற கூட்டத் தொடர்களில் ஜல்லிகட்டு நடத்துவதற்குரிய சட்டத் திருத்தத்தைக் கொண்டுவரவோ, அவசரச் சட்டத்தை இயற்றவோ ஆர்வம் காட்டாத மையஅரசு, உச்சநீதிமன்றத் தீர்ப்பையும் பொருட்படுத்தாமல், ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை நடத்தலாம் என்று ஓர் அரசாணையை வெளியிட்டது. அது சட்டப்பூர்வமான பாதுகாப்புடையதாக இல்லை என்பதை விடுதலைச் சிறுத்தைகள் சுட்டிக்காட்டினோம். இந்த அரசாணையை எதிர்த்துத் தடைபெறுவதற்கு வாய்ப்பிருக்கிறது என்பதையும் சுட்டிக்காட்டினோம். எதிர்பார்த்ததைப் போலவே தற்போது உச்சநீதிமன்றம் அரசாணைக்குத் தடைவிதித்தது.

வழக்குத் தொடுத்தவர்கள், காளையை அடக்கும் இந்நிகழ்வில் சிவபக்தர்களின் உணர்வுகள் காயப்படுத்தப்படுவதாக நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. காளைமாடுகள் காயப்படுத்தப்படும் என்பதற்காக அல்ல; சிவபக்தர்களின் உணர்வுகள் காயப்படுத்தப்படுகின்றன என்பது ஒரு காரணமாக முன்வைக்கப்பட்டிருப்பது வியப்பாகவுள்ளது. இப்படி விதிக்கப்பட்டத் தடையை எதிர்த்து அரசுத் தரப்பில் வைக்கப்பட்ட கோரிக்கையை உச்சநீதிமன்றம் ஏற்கவில்லையென தற்போது தீர்ப்பளித்துள்ளது.

ஆகவே, ஜல்லிக்கட்டு நிகழச்சிக்கு விதிக்கப்பட்ட தடை விலக்கப்படவில்லை. இதற்கு மைய, மாநில அரசுகளே பொறுப்பேற்க வேண்டும். அரசியல் ஆதாயம் கருதிய இவ்விரு அரசுகளின் ஆட்சியாளர்களும் நடத்திய மோசடி நாடகம் இது என்பது உறுதியாகவுள்ளது. ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிக்கு எதிராக விதிக்கப்பட்ட தடையை, தமிழக அரசு மதித்து நிகழ்ச்சியை நடத்தவிடாமல் தடுக்கப் போகிறதா? அல்லது தடுத்தால் சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்படும் என்று கண்டுகொள்ளாமல் அமைதிகாக்கப் போகிறதா என்கிற கேள்வி எழுகிறது.

கடந்த 4.1.2016 அன்று, நாகை மாவட்டம், வழுவூர் அருகேயுள்ள திருநாள்கொண்ட சேரியில் தலித் பிணத்தைப் பொதுவழியே எடுத்துச்செல்ல அனுமதிக்க வேண்டுமென்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால், அந்தத் தீர்ப்பை தமிழக அரசு ஒரு பொருட்டாக மதிக்கவே இல்லை. கடந்த 6.1.2016 அன்று, தலித் சமூகத்தைச் சார்ந்த பொது மக்களை அடித்து விரட்டிவிட்டு, அந்த பிணத்தை தாமே எடுத்துச்சென்று புதைத்தது தமிழக அரசு. உயர்நீதிமன்றத் தீர்ப்பைவிட சாதி இந்துக்களின் உணர்வுகளை மதிக்கவும், சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்கவும் இவ்வாறு செயல்பட்ட தமிழக அரசு இப்போது என்ன செய்யப்போகிறது?

தென்மாவட்ட மக்களின் உணர்வுகளை மதிக்கவும் சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்கவும், உயர்நீதிமன்றத் தீர்ப்பைக் கண்டுகொள்ளாமல் அமைதிகாக்கப் போகிறதா? தமிழக அரசு சனநாயக சக்திகளுக்கு விடைசொல்ல வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் விழைகிறது.

0 comments:

கருத்துரையிடுக