தி இந்து இலக்கியத் திருவிழாவில் தலித் இலக்கியம் தொடர்பாக நடந்த அமர்வில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், எழுத்தாளர் ரவிக்குமார் உள்ளிட்டோர் முன்னாள் நீதிபதி கே. சந்துருவுடன் உரையாடினார்கள். இந்த அமர்வில் கலந்துகொள்வதாக இருந்த தலித் இலக்கிய முன்னோடிகளில் ஒருவரான பேராசிரியர் கே.ஏ. குணசேகரன் எதிர்பாராத விதமாக ஜனவரி 17-ம் தேதி காலமானார். அவருக்கு இந்த நிகழ்வில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

‘தலித் அழகியலும் அரசியலும்: தமிழ் தலித்துகள் எப்படித் தங்கள் அடையாளத்தை மீட்டெடுத்தார்கள்’ என்ற தலைப்பில் நடந்த இந்த விவாதத்தில், தலித் இலக்கியம் கடந்து வந்த பாதை, தற்போதைய தலித் இலக்கியப் போக்கு போன்ற அம்சங்கள் விவாதிக்கப்பட்டன.

கடந்து வந்த பாதை
ரவிக்குமார் தன் உரையில், கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாகத் தமிழ் தலித் இலக்கியப் பிரதிகள் படைக்கப்பட்டுவருகின்றன என்றும், விளிம்புநிலை மக்களின் அவலக் குரல்களை விழுங்க முடியாதவர்கள் ஆரம்பத்திலிருந்தே தலித் இலக்கியத்தை ஒவ்வாமையோடுதான் அணுகிவருகிறார்கள் என்றும் தெரிவித்தார்.

“தலித் இலக்கியம் போதுமான அளவுக்கு இல்லை என்பதற்குக் காரணம், தலித்துகள் தங்களுடைய அவலங்களைச் சொல்ல முன்வரவில்லை என்பதல்ல. மக்களுக்கு அதைக் கவனிக்க நேரமில்லை என்பதுதான். இந்தத் தொய்வு வாசகர் தொய்வு. படைப்பாளிகளின் தொய்வு இல்லை. மந்தமான இந்த மனோபாவத்தை ஏற்றுக்கொள்ள முடியாது” என்றார் ரவிக்குமார்.

தலித் இலக்கியமும் அரசியலும்
தலித் என்று சொல் விவாதத்துக்குள்ளாக்கப்படுவதைப் பற்றியும், தலித் இலக்கியம் அரசியல் களமாக விளங்குவது பற்றியும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தன் உரையில் விளக்கினார். “ ‘தலித்’ என்ற சொல் தீண்டப்படாதவர்களை அடையாளப்படுத்தும் விதமாகப் பயன்பாட்டிலிருக்கிறது. உலகம் முழுவதும் இந்தச் சொல்லாட்சி நடைமுறையில் இருக்கிறது. இந்திய மண்ணில் ‘தலித்’ என்ற சொல், சமூகரீதியாகவும், அரசியல்ரீதியாகவும், பொருளாதாரரீதியாகவும், கல்விரீதியாக ஒடுக்கப்பட்டிருக்கும் அனைவரையும் குறிக்கும் சொல். ஒடுக்குமுறைக்கு உள்ளாகும் எந்தவொரு பிரிவினரும் தலித்தான். அவர்கள் பேசுவது எழுதுவதெல்லாமே தலித் அரசியல்தான், தலித் இலக்கியம்தான்” என்று குறிப்பிட்டார்.


தலித் இலக்கியம் யாருக்கானது என்பதை விளக்கிய திருமாவளவன், “தலித் இலக்கியத்தைத் தலித்துகள்தான் எழுத வேண்டும் என்ற நிலை இருக்கக் கூடாது. யார் வேண்டுமானாலும் அதைப் படைக்கலாம். யாரெல்லாம் விளிம்புநிலைச் சமூகத்தின் கருத்தியலை உள்வாங்கிக்கொள்கிறார்களோ, அந்தச் சமூகத்துக்காகச் சிந்திக்கிறார்களோ, அவர்கள் எல்லோருக்குமே தலித் இலக்கியம் படைக்கும் தகுதி இருக்கிறது” என்றார்.

நாகப்பட்டினம் மாவட்டத்தின் திருநாள்கொண்டச்சேரி கிராமத்தில், செல்லமுத்து என்ற தலித் முதியவரின் இறந்த உடலைப் பொதுப்பாதை வழியாக எடுத்துச் செல்லாமல், உயர் நீதிமன்றத் தீர்ப்பை மீறி மாற்றுப் பாதையில் எடுத்துச்சென்று காவல்துறையினரே அடக்கம் செய்த சம்பவமும் இந்த அமர்வில் குறிப்பிடப்பட்டது.

- என்.கெளரி

Source : The Tamil Hindu, 24.01.2016