கழிவுநீர் தொட்டியைச் சுத்தம் செய்த நால்வர் பலி!

கழிவுநீர் தொட்டியைச் சுத்தம் செய்த நால்வர் பலி!
காரணமானவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும்!
விடுதலைச் சிறுத்தைகள் கோரிக்கை
 

19.1.16 அன்று சென்னை , துரைப்பாக்கம் அருகில் உள்ள ஒக்கியம்பாக்கம் தனியார் பிரியாணி கடை ஒன்றில் கழிவுநீர் தொட்டியைச் சுத்தம் செய்த நான்கு இளைஞர்கள் நச்சு வாயுத் தாக்கி உயிர் பலியாகியுள்ளனர்.இந்த கொடூரம் நெஞ்சைப் பதற வைக்கிறது, உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் இது போன்ற பணிகளில் மனிதர்களை நேரடியாக ஈடுபடுத்துவதை கடந்த 2013 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் தடை செய்து தீர்ப்பளித்துள்ளது. ஆனால் மத்திய, மாநில அரசுகள் இத்தீர்ப்பை நடைமுறைப்படுத்தாமல் மெத்தனம் காட்டி வருவதால்தான் இதுபோன்ற பலிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. கடந்த சில பத்தாண்டுகளில் மட்டும் தமிழகத்தில் 195 பேர் இறந்துள்ளனர் என தெரிய வருகிறது. தொடரும் இத்தகைய சாவுகளுக்கு மேல்சாதி ஆணவப் போக்குகளே காரணமாகும். அதாவது துப்புரவுப்பணி மற்றும் கழிவு நீர் அகற்றும் பணிகளில் ஒடுக்கப்பட்டோர்களை மட்டுமே ஈடுபடுத்தும் போக்கு இதனை உறுதிப்படுத்துகிறது,

இத்தகைய கொடுமைகள் மேலும் நிகழாமல் தடுக்கும் வகையில் பாதாளச் சாக்கடைகள் மற்றும் கழிவுநீர் தொட்டிகளைச் சுத்தம் செய்வதற்கு மேலைநாடுகளில் பயன்படுத்துவதைப்போல இங்கேயும் அதிநவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் தொடர்ந்து வற்புறுத்தி வருகிறது.

தற்போது பலியாகியுள்ள சரவணன் , குமார் ,முருகன் , ராஜேஷ் ஆகியோரின் குடும்பத்தினருக்கு இழப்பீடாக தலா ரூபாய் ஐம்பது இலட்சம் வழங்க வேண்டுமெனவும் அவர்களது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வாய்ப்பு வழங்க வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறோம். அத்துடன் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் விஜி என்பவருக்கு உயர்சிகிச்சை , உரிய இழப்பிடு மற்றும் அரசு வேலை வாய்ப்பு வழங்க வேண்டுமெனவும் கேட்டுகொள்கிறோம். இச்சாவுகளுக்குக் காரணமான தனியார் பிரியாணி கடை உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகத்தினரைக் கைது செய்ய வேண்டுமென தமிழக அரசை விடுதலைச் சிறுத்தைகள் வற்புறுத்துகிறது.

இவண்
தொல்.திருமாவளவன்
தலைவர், வி சி க

0 comments:

கருத்துரையிடுக