ரோகித் வேமுலா சாவு மத்திய அமைச்சர்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும் - தொல்திருமா

ஆராய்ச்சி மாணவர் ரோகித் வேமுலா சாவு
மத்திய அமைச்சர்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும்
தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்ஹைதராபாத் பல்கலைகழகத்தின் முனைவர் ஆராய்ச்சி பட்டவகுப்பு மாணவர் ரோகித் வேமுலா 17.01.2016 அன்று பல்கலைகழக விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அம்பேத்கர் மாணவர் சங்கத்தின் முன்னணி தலைவர்களுள் ஒருவரான ரோகித் வேமுலா உட்பட ஐந்து மாணவர்களை பல்கலைகழக நிர்வாகம் இடைநீக்கம் செய்தது. இதனை கண்டித்து இருவார காலம் தொடர் போராட்டத்தில் அம்பேத்கர் மாணவர் சங்கம் உட்பட பல்வேறு மாணவர் இயக்கங்கள் ஒன்று சேர்ந்து இந்த அறப்போராட்டத்தை நடத்திவந்தனர். இருவார காலமாக போராட்டம் தொடர்ந்தும் பல்கலைகழக நிர்வாகம் போராடும் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த முன்வரவில்லை. இதனால் மனமுடைந்த ரோகித் வேமுலா தற்கொலை செய்துகொண்டார்.

அம்பேத்கர் மாணவர் சங்கத்தையும் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களையும் தேசவிரோதிகள் என்றும் தீவிரவாதிகள் என்றும் சமூக வலைதளங்களில் பாரதிய ஜனதாவின் மாணவ அமைப்பினர் (ABVP) தொடர்ந்து அவதூறு பரப்பி வந்ததால் அம்பேத்கர் மாணவர் சங்கத்தின் சார்பில் அதனை கண்டித்தனர். இதனால் பாரதிய ஜனதாவை சார்ந்த அமைச்சர்கள் பண்டாரு தத்தாத்ரேயா, ஸ்மிருதி ராணி ஆகியோர் அம்பேத்கர் மாணவர் சங்கத்தினர் மீது நடவடிக்கை எடுக்க அழுத்தம் கொடுத்துள்ளனர். இதன் விளைவாகவே ரோகித் வேமுலா உட்பட ஐந்து தலித் மாணவர்களை விசாரணை ஏதுமின்றி பல்கலைகழக நிர்வாகம் இடைநீக்கம் செய்தது. ரோகித் வேமுலாவின் சாவிற்கு அரசியல் தலையீடுகளே காரணமாக உள்ளதால் மாணவர் கூட்டமைப்பின் போராட்டம் இன்னும் தொடர்கிறது.

ஹைதராபாத் பல்கலைகழக வளாகத்தில் கடந்த பத்தாண்டுகளில் இதுவரை ஒன்பது மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. இவர்களில் எட்டு பேர் தலித் மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தலித் மாணவர்களுக்கு எதிரான சாதிய வன்கொடுமைகள் உயர் கல்வி நிறுவனங்களில் தொடர்வது மிகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது. எனவே ஹைதராபாத் பல்கலைகழகத்தில் கடந்த பத்தாண்டுகளில் நடந்த தற்கொலை சாவுகள் மற்றும் தலித் மாணவர்களுக்கு எதிரான சாதிய வன்கொடுமைகளை எதிர்த்து நீதி விசாரணை நடத்த ஆந்திர மாநில அரசு ஆணையிட வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம். அத்துடன் மாணவர் பிரச்சனையில் தலையீடு செய்து ரோகித் வேமுலாவின் சாவிற்கு காரணமான மைய அமைச்சர்கள் பண்டாரு தாத்ரேயா மற்றும் ஸ்மிருதி ராணி ஆகிய இருவரையும் உடனடியாக அமைச்சரவையில் இருந்து வெளியேற்ற வேண்டும் எனவும் பல்கலைகழக துணைவேந்தர் பேராசிரியர் அப்பாராவை உடனடியாக பணிநீக்கம் செய்ய வேண்டுமெனவும் விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் மைய அரசை வற்புறுத்துகிறோம்.

இவண்
தொல்.திருமாவளவன்

0 comments:

கருத்துரையிடுக