தியாகி ஜி.எ.வடிவேலு மறைவு விடுதலைச் சிறுத்தைகளின் ஆழ்ந்த இரங்கல்

விடுதலைப் போராட்ட வீரர் தியாகி ஜி.எ.வடிவேலு மறைவு
வளரும் தலைமுறையினர் பின்பற்றுவதற்குரிய தலைவர் 
விடுதலைச் சிறுத்தைகளின் ஆழ்ந்த இரங்கல்
தொல்.திருமாவளவன் அறிக்கை


காங்கிரஸ் பேரியக்கத்தின் முதுபெரும் தலைவர்களில் ஒருவரும் இந்திய விடுதலைப் போராட்ட வீரருமான தியாகி ஜி.எ.வடிவேலு அவர்களின் திடீர் மறைவு பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. 

பெருந்தலைவர் காமராசர், காந்தியடிகள், மூதறிஞர் ராஜாஜி போன்றவர்களுடன் நெருங்கி பழகியவர்; மிகுந்த தேசப்பற்றுள்ளவர்; பல்வேறு அறவழிப் போராட்டங்களில் பங்கேற்று 17 முறை சிறைச்சென்றவர்; பெருந்தலைவர் ராம்மனோகர் லோகியா அவர்களின் தலைமையேற்று சில ஆண்டுகள் அரசியல் பணியாற்றியவர்; சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்களின் தலைமையிலான சனதா தளத்திலும் பொறுப்பேற்று மக்கள் பணியாற்றியவர்; மீண்டும் காங்கிரஸ் பேரியக்கத்தில் இணைத்துக்கொண்டு இறுதி மூச்சுவரையில் காந்தியவாதியாக வாழ்ந்து மறைந்தவர்; 

எளிமையும் தூய்மையும் நிறைந்த வாழ்க்கையை மேற்கொண்டவர்; வளரும் தலைமுறையினர் பின்பற்றுவதற்குரிய போற்றுதலுக்குரிய முன்மாதிரியான தலைவராக விளங்கியவர்; விடுதலைச் சிறுத்தைகளின் மீது வாஞ்சைக்கொண்டவராக என்னை ஊக்கப்படுத்தியவர். அவருடைய இழப்பு காங்கிரஸ் பேரியக்கத்திற்கு மட்டுமல்ல, சமத்துவம், சமூகநீதி, சனநாயகம் போன்றவற்றில் நம்பிக்கையுள்ள யாவருக்கும் நேர்ந்த பேரிழப்பாகும். அவரை இழந்துவாடும் குடும்பத்தினருக்கும் காங்கிரஸ் கட்சியினருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது.

இவண்.

தொல்.திருமாவளவன்

0 comments:

கருத்துரையிடுக