திருநாள் கொண்டசேரி தீண்டாமைக் கொடுமை - கண்டன ஆர்பாட்டம்

மயிலாடுதுறை அருகே திருநாள் கொண்டசேரி கிராமத்தில் நடைபெற்ற சாதிய வன்முறைக்கும், நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த தவறிய காவல்துறையைக் கண்டித்தும் தெரிவித்து விடுதலை சிறுத்தை சார்பில் சென்னையில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு விடுதலை சிறுத்தை தலைவர் தொல்.திருமாவளவன் தலைமை தாங்கினார்.
 


மயிலாடுதுறை அருகே உள்ள திருநாள் கொண்டசேரி கிராமத்தில் 90 வயதான  செல்லமுத்து காலமானார். அவரது உடலை பொது பாதை வழியாக எடுத்துச் செல்ல முயன்றபோது ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அவரது உடலை பொது பாதை வழியாக எடுத்துச் சென்று அடக்கம் செய்ய ஐகோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால் காவல்துறை அதிகாரிகளும், வருவாய் துறை அதிகாரிகளும் நீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்தாமல் தலித் மக்களை ஏமாற்றி நம்ப வைத்து பொது பாதை வழியாக உடலை எடுத்துச் செல்வதாக கூறி சிறிது தூரம் கொண்டு சென்று விட்டு பின்னர் கொல்லைப்புறம் வழியாக எடுத்துச் சென்று அடக்கம் செய்தனர். இதை கண்டித்த அப்பாவி தலித் மக்கள் மீது தடியடி நடத்தி பொய் வழக்கு போட்டு சிறையில் அடைத்துள்ளனர்.

தலித் மக்கள் மீதான போலீசாரின் இந்த நடவடிக்கை வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்த செயலுக்கு உறுதுணையாக இருந்த காவல் துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர இருக்கிறேன்.

இடது சாரி கட்சி தலைவர்களும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். தலித்துக்கள் மீது தொடரும் தாக்குதலுக்கு தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும்.

இந்த ஆட்சியில் கடந்த 4 ஆண்டுகளில் தலித்துக்கள் மீது தாக்குதல் சம்பவம் அதிகரித்து உள்ளது. தர்மபுரி, விழுப்புரம் மாவட்டங்களில் பல தலித்துக்கள் மீது பொய் வழக்கு போட்டு கைது செய்து உள்ளனர். பட்டுக்கோட்டையில் என்னை தாக்க முயற்சி நடந்தது.

இப்போது நாகை மாவட்டத்தில் பிணத்தை எடுத்துச் செல்ல விடாமல் சாதி வெறியர்கள் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். இந்த வன்முறை சம்பவங்களை தமிழக அரசு வேடிக்கை பார்க்கிறது.

0 comments:

கருத்துரையிடுக