வெள்ள நிவாரணம் – மைய மாநில அரசுகளை கண்டித்து மக்கள் நலக் கூட்டணி ஆர்பாட்டம்

வெள்ள நிவாரணம் – மைய மாநில அரசுகளை கண்டித்து மக்கள் நலக் கூட்டணி ஆர்பாட்டம்


அண்மையில் பெய்த கனமழையால் தலைநகர் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர்,விழுப்புரம் தூத்துக்குடி உள்ளிட்ட ஏராளமான மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இலட்சக்கணக்கான மக்கள் அகதிகளாய் வாழும் அவலம் ஏற்பட்டது. இன்னும் மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பவில்லை, அணைத்து உடைமைகளையும் இழந்து அல்லல்பட்டு வருகின்றனர். உரிய நேரத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தமிழக அரசு மேற்கொள்ளாததே இந்த பேரழிவிற்கு காரணம் என்பது பொதுமக்களின் கருத்தாக உள்ளது. இந்த பெரும் துயரில் இருந்து மக்களை மீட்பதற்கு மைய மாநில அரசுகள் உரிய நடவடிக்கைகளை இன்னும் மேற்கொள்ளவில்லை என்பது அதிர்ச்சி அளிக்கிறது.

மைய அரசு ரூ.1940 கோடி மட்டுமே வெள்ள நிவாரண நிதியாக தமிழகத்திற்கு ஒதுக்கியுள்ளது. சுமார் ஒரு இலட்சம் கோடிக்கு மேலாக மக்களுக்கு பாதிப்பு நேர்ந்து இருக்கும் என்பது வல்லுனர்களின் கருத்தாகும். இந்நிலையில் மைய அரசு ஒதுக்கியுள்ள இந்த சொற்ப நிதியை கொண்டு பாதிக்கப்பட்ட மக்களை இயல்பு வாழ்க்கைக்கு மீட்டு எடுப்பது எவ்வாறு என்பது கேள்விக்குறியாக உள்ளது. மாநில அரசும் இதற்கென போதிய நிதி ஒதுக்கீடு செய்யவில்லை மேலும் சேத மதிப்பீடு செய்யும் நடவடிக்கைகளும் முறையாக நடந்தேறவில்லை, நிவாரண பணிகள் மிகவும் மந்தமான நிலையில் உள்ளன.

எனவே மைய மாநில அரசுகளின் மெத்தன போக்கை கண்டித்தும், வெள்ள சேதங்களை தேசிய பேரழிவாக அறிவிக்கவும், மைய அரசு உடனடியாக ரூ,ஐம்பதாயிரம் கோடி இழப்பீடாக வழங்க வலியுறுத்தியும், பாதிக்கபட்டோருக்கு போதிய இழப்பீடு வழங்க கோரியும் மக்கள் நலக் கூட்டணியின் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் நாளை 10மணியளிவில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும். இந்த ஆர்பாட்டத்தில் கூட்டணியின் தலைவர்கள் வைகோ, முத்தரசன்,வெங்கட்ராமன் ஆகியோரும் மற்றும் நானும் கலந்து கொள்கிறோம், பல்லாயிரகணக்கான தொண்டர்களும் பொது மக்களும் இந்நிகழ்வில் பங்கேற்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.

தொல்.திருமாவளவன்
தலைவர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி

0 comments:

கருத்துரையிடுக