எஸ்.சி.எஸ்.டி. வன்கொடுமைத் தடுப்புச் சட்ட திருத்த மசோதா நிறைவேற்றம்

எஸ்.சி.எஸ்.டி. வன்கொடுமைத் தடுப்புச்
 சட்ட திருத்த மசோதா நிறைவேற்றம்

தமிழக அரசு சரியாக நடைமுறைப்படுத்த வேண்டும்!

தொல்.திருமாவளவன் அறிக்கைதாழ்த்தப்பட்ட பழங்குடியின மக்கள் மீதான வன்கொடுமைகள் ஆண்டுதோறும் அதிகரித்து வருவதை கவனத்தில்கொண்டு 1989ஆம் ஆண்டு வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், அந்தச் சட்டத்தின் அடிப்படையிலும் குற்றம் இழைத்தவர்கள் சரியாகத் தண்டிக்கப்படவில்லை. அதிலிருந்த ஓட்டைகளைப் பயன்படுத்தி குற்றவாளிகள் தப்பித்து வந்தனர். எனவே, அச்சட்டத்தை வலுப்படுத்த வேண்டுமென்று விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும், தன்னார்வ அமைப்புகளும், மனித உரிமை அமைப்புகளும் போராடி வந்தன. 


நான் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கின்றபோது இந்தத் திருத்த மசோதாவை சட்டமாக்க வேண்டும் என மக்களவைக்கு உள்ளேயும் வெளியேயும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் பல்வேறு போராட்டங்களை நடத்தினேன். ‘தலித் உரிமைகளுக்கான தேசியப் பிரச்சார இயக்கத்தோடு’ (NCDHR) இணைந்து பல நடவடிக்கைகளை மேற்கொண்டேன். 


திரு.பி.எஸ்.கிருஷ்ணன், திரு.பால் திவாகர், திரு.ரமேஷ்நாதன் உள்ளிட்டோர் இதில் முனைப்போடு செயல்பட்டனர். அதன் விளைவாக, தற்போது இந்த மசோதா மக்களவையிலும் மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதைச் சட்டமாக்குவதற்கு முன்முயற்சி எடுத்த மத்திய அரசுக்கும் ஆதரவளித்த அரசியல் கட்சிகளுக்கும் விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.


தற்போது வலுப்படுத்தப்பட்டுள்ள இந்த வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் தலித் மக்களின் நிலங்களை மற்றவர்கள் அபகரிப்பதைத் தடுக்கவும், பொதுச் சொத்துக்கள் மற்றும் பொதுக் கோவில்களில் தலித்துகள் நுழைவதை யாரேனும் தடுத்தால் அவர்களுக்குக் கடுமையான தண்டனை வழங்கவும் வகை செய்கிறது. அதுபோல தலித் மக்களுக்கு எதிரான வெறுப்புப் பிரச்சாரத்தை மேற்கொள்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் வழிவகுக்கிறது. இந்தச் சட்டத்தை தமிழக அரசு சரியான முறையில் பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.


வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை முற்றாக ரத்து செய்ய வேண்டுமென சில சனநாயக விரோத சக்திகள் பிரச்சாரம் செய்து வந்தார்கள். தலித் மக்களுக்கு எதிரான வெறுப்புப் பிரச்சாரத்திலும் கடந்த நான்கு ஆண்டுகளாக தீவிரமாக ஈடுபட்டு வந்தார்கள். அதன் காரணமாக, தமிழ்நாட்டில் வன்கொடுமைகளும் சாதி ஆணவக் கொலைகளும் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளன. எனவே, இனியாவது தமிழக அரசு இந்தச் சட்டத்தைப் பயன்படுத்தி கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமெனவும், குறிப்பாக வெறுப்புப் பிரச்சாரத்தைத் தடுத்து நிறுத்த வேண்டுமெனவும்
வலியுறுத்துகிறோம்.


இவண்
தொல்.திருமாவளவன்

0 comments:

கருத்துரையிடுக