தொல்.திருமாவளவன் கிறிஸ்துமஸ் வாழ்த்து

மாந்தநேயத்தைச் செழிக்கச் செய்வோம்! 
கிறிஸ்துமஸ் நன்னாளில் உறுதியேற்போம்!
தொல்.திருமாவளவன் கிறிஸ்துமஸ் வாழ்த்து
மானுடத்தை நல்வழிப்படுத்த இம்மண்ணுலகில் தோன்றிய மகான் இயேசு பெருமானின் பிறந்த நாளில் கிறித்தவப் பெருங்குடி மக்கள் யாவருக்கும் எமது இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

ஈராயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இயேசுபெருமானின் வார்த்தைகள் நம்மை வழிநடத்திக் கொண்டிருக்கின்றன.  சாதி, மதம், மொழி, இனம், நாடு போன்ற எல்லைகளைத் தாண்டி மனிதச் சமூகத்தை ஒருங்கிணைக்கவும் நல்வழிப்படுத்தவும் இன்றும் இயேசு பெருமான் வல்லமை வாய்ந்தவராக விளங்குகிறார். அவருடைய வழிகாட்டுதல்களைப் பின்பற்றும் நம்மிடையே இன்னும் சாதியின் பெயராலும், மதத்தின் பெயராலும் வேறுபாடுகளும் மோதல்களும் நிலவுவதை மறுக்க இயலாது. இது கிறித்தவத்திற்கும் இயேசு பெருமானுக்கும் எதிரான போக்குகளேயாகும் என்பதை நாம் உணர வேண்டும்.

 இயேசுபெருமானின் வார்த்தைகளை, வழிகாட்டுதல்களை கிறித்தவ மதத்தைச் சார்ந்தவர்கள்தான் பின்பற்ற வேண்டும் என்றில்லை.  அனைவரும் பின்பற்றக்கூடிய மகத்தான வாழ்க்கை நெறியே இயேசு பெருமானின் வழிகாட்டுதல்களாகும்.

எனவே, இந்திய மண்ணில் சாதியின் பெயராலும், மதத்தின் பெயராலும் நிகழும் முரண்பாடுகளையும் மோதல்களையும் தவிர்ப்பதற்கு, நல்லிணக்கத்தைப் பேணுவதற்கு இயேசு பெருமானின் பிறந்த நாளில் நாம் உறுதியேற்க வேண்டும்.  குறிப்பாக, தலித் கிறித்தவர்கள், பிற கிறித்தவர்கள் என்னும் அடிப்படையில் நிலவும் மாந்தநேயத்திற்கெதிரான போக்குகளைக் களைந்திட இளைய தலைமுறையினர் முன்வர வேண்டும்.

அண்மையில் பெய்த கனமழையில் தமிழகத்தில் மிகப்பெரும் பாதிப்பு ஏற்பட்டது.  மக்கள் சொல்லொண்ணாத் துயரத்திற்கு ஆளாகும் நிலை உருவானது.  இயற்கைப் பேரிடர் நேர்ந்தபோது மனிதநேயம் மேலோங்கியதை நம்மால் காண முடிந்தது.  கிறித்தவத் தேவாலயங்களும் மசூதிகளும் இந்துக் கோவில்களும் பாதிக்கப்பட்ட மக்கள் சாதி, மத வரம்புகளைத் தாண்டி தஞ்சம் புகுந்தனர்.  அனைத்துத் தரப்பினருக்கும் அடைக்கலம் தரும் அரண்களாக அவை விளங்கின.  இத்தகைய மனிதநேயமானது இயற்கைப் பேரிடர் காலங்களில் மட்டுமின்றி எப்போதும் மக்களிடையே நிலவ வேண்டும்.

ஏழை-பணக்காரன், இந்து-முஸ்லிம்-கிறித்தவன் என்கிற வேறுபாடு இல்லாமல் அனைவருக்கும் மாந்தநேயத்தின் மகத்துவத்தை உணர்த்தும் வல்லமை பெற்றதாக இந்தப் பெருவெள்ளம் அமைந்தது.  இந்தப் படிப்பினையை உணர்ந்து மாந்தநேயத்தை மேலும் செழித்தோங்கச் செய்திட இயேசு பெருமானின் பிறந்த நாளான கிறிஸ்துமஸ் நன்னாளில் உறுதியேற்போம் என்று விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் வேண்டுகோள் விடுத்து அனைத்துத் தரப்பினருக்கும் எமது உளங்கனிந்த கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்.


இவண்

தொல்.திருமாவளவன்

0 comments:

கருத்துரையிடுக