போராளி இமானுவேல் சேகரன் அவர்களின் மூத்த மகள் மறைவு

போராளி இமானுவேல் சேகரன் அவர்களின் மூத்த மகள் மறைவு

விடுதலைச் சிறுத்தைகளின் வீரவணக்கம்

தொல்.திருமாவளவன் அறிக்கை

 ஒடுக்கப்பட்ட மக்களின் தலைநிமிர்வுக்காகப் போராடிய போராளி இமானுவேல் சேகரன் அவர்களின் மூத்த மகள் மேரி வசந்தராணி அவர்கள் உடல் நலக் குறைவு காரணமாக இன்று (16-11-2015) திடீரெனக் காலமாகிவிட்டார் என்பதை அறிந்து மிகுந்த வேதனையடைகிறோம்.  

போராளி இமானுவேல் சேகரன் அவர்களின் மகள்கள் நால்வரில், இருவர் தமிழகத்திலும் இருவர் மலேசியாவிலும் வசிக்கின்றனர்.  அவர்களில் மூத்தவரான மேரி வசந்தராணி அவர்கள் தமிழகத்தில் பரமக்குடியில் ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவராவார்.  அவரது தந்தை தியாகி இமானுவேல் சேகரன் அவர்களைப் போல அரசியல் ஈடுபாடு காட்டவில்லையென்றாலும், சமூகப் பற்றுள்ளவராகவும், சமூகப் பணிகளில் ஈடுபாடு கொண்டவராகவும், தலித் மக்களின் நலன்களுக்காகப் பாடுபடும் சமூக அமைப்புகளை ஊக்கப்படுத்துகிறவராகவும் விளங்கினார். அவரது தந்தையின் நன்மதிப்புக்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில் அரசியல் மற்றும் சமூகத் தொடர்புகளைக் கொண்டிருந்தார். குறிப்பாக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினருடன் தோழமையான, நல்லிணக்கமான நட்புறவைக் கொண்டிருந்தார்.

அவருடைய கொடிய மறைவு விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் ஒடுக்கப்பட்டோரின் மீட்சிக்காகப் போராடும் சமூக அமைப்புகளைச் சார்ந்தவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை அளிப்பதாகும்.  அவரை இழந்து வாடுகிற குடும்பத்தினருக்கும் உற்றார் உறவினர்களுக்கும் விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதுடன் எமது செம்மாந்த வீரவணக்கத்தையும் செலுத்துகிறோம்.

இவண்

தொல்.திருமாவளவன்

0 comments:

கருத்துரையிடுக