கடலூர் மாவட்டத்தை பேரழிவு பகுதியாக அறிவிக்க வேண்டும்: தொல்.திருமாவளவன்


மழை, வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கடலூர் மாவட்டத்தை பேரழிவுப் பகுதியாக அறிவித்து தமிழக முதல்வர் பார்வையிட வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.

சிதம்பரம் பகுதியில் காற்று, மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மக்கள் நலக்கூட்டு இயக்கம் சார்பில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் மார்க்சிஸ்ட் கம்யூ கட்சி மத்தியக்குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூ கட்சி மாநில செயலாளர் ரா.முத்தரசன் எம்எல்ஏ, மதிமுக துணை பொதுச்செயலாளர் மல்லை சத்தியா, செந்தில்அதிபன், மாவட்டச் செயலாளர்கள் வ.க.செல்லப்பன் (விசிக), குணசேகரன் (மதிமுக) ஆகியோர் கொண்ட குழு இன்று பார்வையிட்டது.

பின்னர் சிதம்பரத்தில் செய்தியாளர்களிடம் தொல்.திருமாவளவன் தெரிவித்தது: கடலூர் மாவட்டத்தில் எப்பொதும் இல்லாத அளவில் 48 செ.மீட்டர் மழை பெய்துள்ளது. குறிப்பாக நெய்வேலி, பண்ருட்டி, சிதம்பரம் பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளது. பண்ருட்டி பெரியகாட்டுபாளையத்தில் சுவர் இடிந்து விழுந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் உயிரிழந்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் மேலும் பலர் உயிரிழந்துள்ளனர். ஏராளமான கால்நடைகள் இறந்துள்ளன. பல லட்சக்கணக்கான மதிப்பிலான நெல், கரும்பு, வாழை, முந்திரி, மணிலா போன்ற பயிர்கள் உள்ளிட்ட விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. குடிசை வீடுகள் தரையோடு, தரையாக இடிந்துள்ன. 5 நாட்களாக அரசு பணிகள் தீவிரப்படுத்தப்படவில்லை. மின்சாரம், குடிநீர் இன்னும் பல கிராமங்களுக்கு வழங்கப்படவில்லை. தற்போது இயல்பு வாழ்க்கை திரும்பிவிட்டது எனக்கூறி அரசு நிர்வாகம் வழங்கி வந்த உணவையும் இன்று நிறுத்திவிட்டது.

சிதம்பரம் அருகே து.மண்டபம் கிராமத்தில் குடிநீர், உணவு கேட்டு சாலைமறியலில் ஈடுபட்ட மக்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியுள்ளனர். இதில் மாற்றுத்திறனாளி ஒருவர் உள்ளிட்ட பலர் காயமடைந்துள்ளனர். இதனை மக்கள் நல கூட்டு இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது.

5 நாட்களாக தமிழக முதல்வர் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டத்திற்கு வராதது அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. கடலூர் மாவட்டத்தை பேரழிவு பகுதியாக தமிழக முதல்வர் அறிவித்து வந்து பார்வையிட்டு நிவாரணம் மற்றும் மீட்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

இறந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சமும், இறந்த ஆடுகளுக்கு ரூ.10 ஆயிரமும், மாடுகளுக்கு ரூ.50 ஆயிரமும், சேதமடைந்த குடிசை வீடுகளுக்கு தலா ரூ.20 ஆயிரமும் நிவாரணம் வழங்க வேண்டும். 5 நாட்களாக முடங்கி கிடந்த மக்களுக்கு குடும்ப அட்டை வீதம் தலா ரூ.5 ஆயிரம் இழப்பீட்டை அரசு வழங்க வேண்டும். நெல் ஏக்கருக்கு ரூ.25 ஆயிரமும், கரும்பு, வாழை பயிருக்கு ஏக்கருக்கு ரூ. ஒன்றரை லட்சமும் வழங்க வேண்டும்.

மத்திய அரசு ஏற்கனவே தமிழகத்திற்கு பேரிடர் மேலாண்மை நிதிக்கு குறைந்த தொகையே நிதி ஒதுக்கியுள்ளது. எனவே மத்திய அரசு ரூ.ஆயிரம் கோடி இழப்பீடு வழங்க வேண்டும்.

கடலூர் மாவட்டத்தில் சாலைகள், பாலங்கள், மின்கம்பங்கள் உள்ளிட்ட அனைத்து கட்டமைப்பும் பாதிக்கப்பட்டுள்ளது. மின்சாரம், குடிநீர் பாதிக்கப்பட்டுள்ளது. இதனை மேம்படுத்த மத்திய அரசு பேரிடர் மீட்பு படையினரை தமிழகத்திற்கு அனுப்ப வேண்டும்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உடனடியாக அரசால் வழங்கப்படும் அரிசி, மண்ணெண்ணெய் உள்ளிட்ட நிவாரண உதவிகள் வழங்கப்படவில்லை. மீட்பு பணிகளும் நடைபெறவில்லை.

மேலும் கடலூர் மாவட்டத்தில் உள்ள ஏரிகள், குளங்கள், வடிகால் வாய்க்கால்கள் நீண்ட காலமாக தூர்வாரப்படாததால் வெள்ளப்பெருக்கெடுத்துள்ளது. வீராணம் ஏரிக்கு தூர்வார ரூ.40 கோடியை முதல்வர் அறிவித்து கடந்த 4 ஆண்டுகளாக எந்த பணியும் நடைபெறவில்லை. கொள்ளிடத்தில் தடுப்பணை கட்டுவது வெறும் அறிவிப்போடு உள்ளது. அரசு முற்றிலும் முடங்கி செயலிழந்து உள்ளது.

அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லையெனில் மக்கள் நல கூட்டு இயக்கம் கலந்தாலோசித்து போராட்டம் நடத்துவது குறித்து முடிவெடுக்கப்படும் என தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.

News : Dinamani
Photos : Akaran

0 comments:

கருத்துரையிடுக