தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த பெண்கள் துணையாக இருக்க வேண்டும் - மகளிர் மாநாட்டில் எழுச்சிதமிழர்

திருச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிர் விடுதலை இயக்கம் சார்பில் மது ஒழிப்பு மாநாடு நடந்தது. மாநாட்டிற்கு மகளிரணி மாநில செயலாளர் நற்சோனை தலைமை தாங்கினார். மாநகர செயலாளர் சுஜாஅருள் வரவேற்றார். மாநாட்டில் தலைவர் தொல். திருமாவளவன் கலந்து கொண்டு பேசியதாவது:–மது அருந்தக்கூடாது என்பது உள்ளிட்ட தனி மனித ஒழுக்கத்தை போதித்த புத்தரின் பஞ்சசீல கொள்கையை நாம் கடைபிடிக்கிறோம். அதேபோன்று அம்பேத்கரின் கொள்கையையும் நாம்தான் கடைபிடிக்கிறோம்.

மதுவினால் தனி மனித ஒழுக்கம் கெடுவதோடு, குடும்பத்தின் வளர்ச்சியும், நாட்டின் வளர்ச்சியும் பாதிக்கப்படும். தலித் மக்கள் சிந்திக்காமல் போதை மயக்கத்திலேயே இருக்க வேண்டும் என்பதற்காகவே திட்டமிட்டு, அவர்கள் குடியிருக்கும் பகுதியில் மதுக்கடைகளை அரசு அதிகமாக தொடங்கியுள்ளது.
எனவே இனி யாரும் மது அருந்தக்கூடாது என்ற கட்டுப்பாட்டை நமக்கு நாமே விதித்து கடைபிடிக்க வேண்டும் என மாநாட்டின் மூலம் ஆண்களை கேட்டுக்கொள்கிறேன். இதை நடைமுறைப்படுத்த பெண்கள் உறுதுணையாக இருக்க வேண்டும். பூரண மதுவிலக்கு கொள்கையை டிசம்பருக்குள் அறிவித்து அமல்படுத்தாவிட்டால் மாநிலம் தழுவிய அளவில் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் அம்பேத்கரின் விருப்பம், தேசிய அளவில் பூரண மதுவிலக்கு நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதாகும். இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் உறுப்பு எண் 47 மதுவிலக்கை இந்திய அளவில் நடைமுறைப்படுத்த வேண்டும் என வழிகாட்டுகிறது. எனவே மதுவிலக்கு கொள்கையை இந்திய அரசு தேசிய கொள்கையாக அறிவிக்க வேண்டும். இதனால் மாநில அரசுக்கு ஏற்படும் இழப்பீட்டை மத்திய அரசு வழங்க வேண்டும்.

தமிழ்நாட்டில் மதுபானக் கடைகளை உடனடியாக மூட வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

மாநாட்டில் விடுதலை சிறுத்தை கட்சி மாநில பொதுச் செயலாளர் ரவிக்குமார், அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்க தேசிய துணை தலைவர் வாசுகி, இந்திய மாதர் தேசிய சம்மேளன துணை செயலாளர் பத்மாவதி, ம.தி.மு.க. மாநில மகளிரணி செயலாளர் டாக்டர் ரொஹையா, விடுதலை சிறுத்தைகள் கட்சி சமூக நல்லிணக்க பேரவை செயலாளர் வக்கீல் அருள், திருச்சி மாவட்ட நிர்வாகிகள் அரசு, தமிழாதன், பிரபாகரன், கனியமுதன், கள்ளிக்குடி பொன்.முருகேசன் உள்பட ஆயிரக்கணக்கான மகளிர் கலந்து கொண்டனர்.
 


 

0 comments:

கருத்துரையிடுக