100 நாள் வேலைத்திட்டத்தில் மாபெரும் முறைகேடு

100 நாள் வேலைத்திட்டத்தில் மாபெரும் முறைகேடு
மாநிலம் முழுவதும் விசாரிக்க தமிழக அரசு ஆணையிட வேண்டும்! --தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்

~~~~~~~
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், அடிப்படையில் மிகவும் சிறப்பான திட்டமாகும்.  ஏழை எளிய மக்களுக்கு குறைந்தபட்சம் 100 நாட்கள் வேலையை உறுதி செய்வதற்காக கடந்த காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு கொண்டுவந்த திட்டம் இதுவாகும். ஆனால், இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதில் பல முறைகேடுகள் நடந்துவருவதாகவும் இதன் பலன் ஏழை எளிய மக்களுக்குச் சென்று சேராமல் இடைத் தரகர்களால் கோடிக் கணக்கான ரூபாய் கொள்ளையடிக்கப்படுவதாகவும் புகார்கள் எழுந்து வருகின்றன.

அதற்கு வலுச்சேர்க்கும் வகையில் தற்போது மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டத்தில் மிகப்பெரிய முறைகேடு கண்டறியப்பட்டுள்ளது.  போலியான வங்கிக் கணக்குகளைப் பயன்படுத்தி 30 இலட்சம் ரூபாய் முறைகேடு செய்யப்பட்டுள்ளதாக இப்போது கண்டறியப்பட்டுள்ளது.  இது ஒரு சிறு உதாரணம்தான்.   தமிழ்நாடு முழுவதும் இப்படி பல்லாயிரக் கணக்கான கோடி ரூபாய் முறைகேடு நடந்திருக்க வாய்ப்பு உள்ளது. எனவே, தமிழக அரசு உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவரைக் கொண்டு விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் வலியுறுத்துகிறோம்.

தமிழ்நாடு அரசின் ஊரக வளர்ச்சித் துறையின்கீழ் செயல்படும் சமூக தணிக்கைக் குழுதான் இந்த முறைகேட்டைக் கண்டறிந்துள்ளது.

2014-15 நிதியாண்டில் மட்டுமே, அதுவும் ஒரு வட்டத்தில் 30 இலட்சம் ரூபாய் முறைகேடு கண்டறியப்பட்டிருக்கிறது என்றால் தமிழ்நாடு முழுவதும் இருக்கிற கிராமப் பஞ்சாயத்துகளில் எவ்வளவு முறைகேடு நடந்திருக்கும் என்பதை யூகித்துக்கொள்ளலாம்.  இதனை ஏதோ, ஒன்றிரண்டு ஊழியர்கள் சம்மந்தப்பட்ட முறைகேடு என நம்ப முடியவில்லை.  ஏனெனில் இந்தத் திட்டத்தின்கீழ் வழங்கப்படும் தொகையை வட்டார வளர்ச்சி அலுவலர், மாவட்ட அலுவலர், அதன் பின்னர் மாவட்ட ஆட்சியர் என்று பல்வேறு நிலைகளிலும் சோதித்துப் பார்த்த பின்பே பயனாளிகளுக்கு தொகை வழங்கப்படுகிறது. எனவே, இந்த முறைகேட்டில் இந்த அலுவலர்கள் அனைவருமே ஈடுபட்டிருந்தாலொழிய இவ்வளவு பெரிய தொகையைக் கையாடல் செய்ய முடியாது.  எனவே, அனைத்து அதிகாரிகளுக்கும் இதில் பொறுப்பு இருக்கிறது. தமிழக அரசு பாரபட்சமின்றி இதில் தொடர்புடைய அனைத்து அலுவலர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

100 நாள் வேலைத் திட்டத்தையே இரத்து செய்துவிட வேண்டும் என்று பா.ஜ.க. அரசு திட்டமிட்டுள்ள நிலையில் இத்தகைய முறைகேடுகள் அதற்கு வலுச் சேர்ப்பதாக அமைந்துவிடக் கூடும்.  எனவே, மக்கள் நலனில் அக்கறை உள்ள இயக்கங்கள் யாவும் ஆங்காங்கே இந்தத் திட்டத்தை கண்காணிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

இவண்
தொல்.திருமாவளவன்

0 comments:

கருத்துரையிடுக