சாயத்தொழிற்சாலையை மூடக்கோரி மக்கள் நல கூட்டு இயக்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

சிதம்பரம் அருகே பெரியப்பட்டு கிராமத்தில் அமைக்கப்பட்டு வரும் தனியாருக்கு சொந்தமான சாயத்தொழிற்சாலையை மூடக்கோரி மக்கள் நல கூட்டு இயக்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர்.சிதம்பரம் அருகே பெரியப்பட்டு கிராமத்தில் தனியார் சாயத்தொழிற்சாலை அமைக்கும் பணி நடைபெற்றது. இதனால் மண் வளம் பாதிக்கப்பட்டு விவசாயம், குடிநீர் பாதிக்கப்படும் என்பதால் சாயத்தொழிற்சாலைக்கு தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி பெரியப்பட்டு, ஆண்டார்முள்ளிப்பள்ளம், வாண்டையாம் பாளையம், தச்சம்பாளையம், காயல்பட்டு, பெரியாண்டிக்குழி, சினனாண்டிக்குழி உள்ளிட்ட சுமார் 20 கிராம மக்கள் பல்வேறு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் மக்கள் நல கூட்டு இயக்கம் சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பங்கேற்று கண்டன உரையாற்றினார்.

இந்த தொழிற்சாலை அமைக்கக்கூடாது என மக்கள் வாழ்வாதார இயக்கம் கடந்த 10 ஆண்டுகளாக தொடர்ந்து 50-க்கும் மேற்பட்ட போராட்டங்களை நடத்தியுள்ளது. ஆனால் தமிழக அரசு செவி சாய்க்கவில்லை. தொழிற்சாலைகளை நாங்கள் எதிர்க்கவில்லை. 

விவசாயம், குடிநீர், கடல்வளம் பாதிக்கும் சாயத்தொழிற்சாலையைதான் எதிர்க்கிறோம். திருப்பூர், கரூர் பகுதிகளில் அங்குள்ள மக்களால் விரட்டியடிக்கப்பட்ட இத்தொழிற்சாலை கடலூரில் தொடங்கும் பணி நடைபெற்று வருகிறது. 

இந்த தொழிற்சாலையினால் தோல்நோய், புற்று நோய், மலட்டு தன்மை ஏற்படும். எனவே தமிழக அரசு இத்தொழிற்சாலையை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் வருகிற நவ.23 ஆம் தேதி மக்கள் நல கூட்டு இயக்கம் சார்பில் கடலூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என திருமாவளவன் தெரிவித்தார்.


0 comments:

கருத்துரையிடுக