மக்கள் பாடகர் கோவன் கைது - விடுதலைச்சிறுத்தைகள் கண்டனம்!மக்கள் பாடகரும், வீதி நாடகக் கலைஞருமான கோவன், தமிழக அரசால் பொய் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். கருத்துரிமைக்கு எதிரான இந்த நடவடிக்கையை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

நாடு முழுவதும் எழுத்தாளர்கள், கலைஞர்கள் கொல்லப்படுவதற்கும் தாக்கப்படுவதற்கும் எதிராக கொந்தளிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் அரசே ஒரு பாடகரின் மீது அடக்குமுறையை ஏவுகிறது. வகுப்புவாத சக்திகளுக்கும் அரசுக்கும் வேறுபாடு இல்லை என்பதையே இது காட்டுகிறது.

தமிழக அரசின் மக்கள் விரோத மதுக் கொள்கையை எதிர்த்து, 'மூடு டாஸ்மாக்கை மூடு' எனும் பாடலை இயற்றிப் பாடி, வீதியெங்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தியவர், கோவன் அவர்கள். கருத்தாழம் மிகுந்த அந்தப் பாடல் பொதுமக்களிடம் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதே, அரசின் கோபத்திற்கு காரணமாகும். மதுக்கடைகளை எதிர்த்துப் போராடிய மாணவர்களை ஒடுக்கியதுபோல், இப்போது ஒரு பாடகரையும் ஒடுக்க முனைகிறது தமிழக அரசு.

அரசை எதிர்த்து அற வழியில் போராடுவோர் மீது அடக்குமுறைகளை ஏவும் போக்கை, தமிழக அரசு கைவிட வேண்டும். கோவன் மீதான பொய் வழக்கை திரும்பப் பெற்று, அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

இவண்,
தொல்.திருமாவளவன்

0 comments:

கருத்துரையிடுக