தமிழக அரசுத் துறைகளில் தலைவிரித்தாடும் சாதிக் கொடுமைகள் தொல்.திருமாவளவன் கண்டனம்

தமிழக அரசுத் துறைகளில் தலைவிரித்தாடும் சாதிக் கொடுமைகள்
தொல்.திருமாவளவன் கண்டனம்

தமிழக அரசுத் துறைகளில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு சாதிக் கொடுமைகள் தலைவிரித்தாடுகின்றன.  கடைநிலை ஊழியர் முதல் முதல்நிலை அலுவலர் வரை சாதி அடிப்படையில் நிர்வாகரீதியாக ஒடுக்கப்படுவதும் அவர்கள் பொய்க் குற்றச்சாட்டின் அடிப்படையில் பணி இடைநீக்கம் செய்யப்படுவதும் மற்றும் சட்டத்திற்குப் புறம்பான வகையில் அவர்களைச் செயல்பட நிர்ப்பந்திப்பதும் தற்போது தலைதூக்கியுள்ளன.
 
குறிப்பாக, தமிழ்நாடு மின்சாரவாரியத்தில் தலித் சமூகத்தைச் சேர்ந்த தலைமைப் பொறியாளர்கள் பணிமூப்பு மற்றும் தகுதி அடிப்படையில் இயக்குநர் பதவிகளுக்கு உடனடியாக நியமிக்கப்படாமல் அப்பதவி கூடுதல் பொறுப்பாகவே வழங்கப்பட்டு மிகவும் காலம் தாழ்த்தி அவர்களுக்கு அப்பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளன.  அத்துடன் தகுதியும் பணிமூப்பும் இருந்தும் கோடிக் கணக்கில் பணம் கொடுத்தால்தான் பதவி உயர்வு வழங்கப்படும் எனவும் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர்.  தற்போது காலியாக உள்ள வடக்கு மண்டலத்திற்கான தலைமைப் பொறியாளர் பதவியை நிரப்பாமல் பல மாதங்களாக கிடப்பில் போட்டு வைத்துள்ளனர்.  மேலும், அப்பதவிக்கு கோடிக் கணக்கில் பேரம் நடப்பதாகச் செய்திகள் வருகின்றன.  
 
கடந்த 2012ஆம் ஆண்டு தமிழ்நாடு மின்சார வாரியத்தின் நிர்வாக இயக்குநராக இருந்த திரு.முருகன் அவர்கள் பணி ஓய்வு பெறுவதற்கு ஒருநாள் முன்பாகவே பொய்யான குற்றச்சாட்டின் அடிப்படையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.  அவருடன் மேலும் பல அலுவலர்களும் பணியிடைநீக்கம் செய்யப்பட்டனர்.  ஆனால், தலித் சமூகத்தைச் சேர்ந்த திரு.முருகன் அவர்களை மட்டும் குற்றச்சாட்டில் சிக்க வைத்துவிட்டு மற்ற அனைவரையும் விடுவித்ததுடன் அவர்களுக்கு மீண்டும் பணியும் பணிப் பயன்களும் வழங்கப்பட்டுள்ளன.  திரு. முருகன் அவர்க¬ளை மட்டும் குற்றவாளியாக்கி இதுநாள் வரை அவர் மீதான குற்றச்சாட்டினை விலக்காமல், அவருக்கு பணி ஓய்வும் அதற்கான பணிப் பலன்களும் வழங்காமல் மூன்றாண்டுகளுக்கும் மேலாக இந்த அரசு இழுத்தடித்து வருகிறது.
 
இதே போன்று தமிழக அரசின் அனைத்துத் துறைகளிலுமுள்ள தலித் அலுவலர்கள் நிர்வாக அடிப்படையில் ஒடுக்கப்படுவது நாள்தோறும் நடைபெற்று வருகிறது. இந்திய ஆட்சிப் பணி மற்றும் காவல் பணியிலுள்ள தலித் சமூகத்தைச் சேர்ந்த அலுவலர்களுக்கும் இதே கதிதான்.  பலர் தங்கள் மீது தொடுக்கப்படும் இத்தகைய ஒடுக்குமுறைகளை வெளியில் சொல்லுவதில்லை.  தலித் அலுவலர்கள் மனஉளைச்சலுக்கும் ஆளாக்கப்படுகிறார்கள்.  குறிப்பாக, விஷ்ணுப்ரியா அவர்களுக்கு நேர்ந்த கொடுமைகளை நாடே அறியும்.  மேலும், அரசுத் துறைகளில் பணியாற்றும் தொழிலாளர்கள் மற்றும் அலுவலர்கள் சாதி அடிப்படையில் ஒருங்கிணைந்துகொண்டு அரசு நிர்வாகத்தையும் சட்டத்தையும் தவறாகக் கையாளுகிறார்கள்.  இத்தகைய போக்கு மிகவும் ஆபத்தானது.  
 
இவையெல்லாம் மாண்புமிகு தமிழக முதல்வரின் கவனத்திற்கு தெரியுமா? அல்லது அவருக்குத் தெரிந்துதான் நடக்கிறதா என்ற கேள்வி எழுகிறது.  
 
இந்தியாவில் மற்ற மாநிலங்களைவிட தமிழகத்தில்தான் சாதி ஒழிப்பிற்காக எத்தனையோ தலைவர்கள் பாடுபட்டார்கள்.  அவர்களின் கனவை சுக்குநூறாக்கும் வகையில் தமிழக அரசுத் துறைகள் இயங்குவது கண்டனத்துக்குரியது.  இத்தகைய நிலை நீடிக்குமானால் தமிழக அரசுத் துறைகளில் உள்ள தலித் அலுவலர்களைப் பாதுகாக்க விடுதலைச் சிறுத்தைகள் தீவிரமாக போராட்டங்களில் ஈடுபட வேண்டிவரும் என ஆட்சியாளர்களின் கவனத்திற்குத் தெரிவித்துக்கொள்கிறோம்.

இவண்.
தொல்.திருமாவளவன்

0 comments:

கருத்துரையிடுக