ஐ.நா. பேரவை தீர்மானம் - கடைசி நம்பிக்கையான சர்வதேசச் சமூகமும் தமிழர்களைக் கைவிட்டுவிட்டது

ஐ.நா. பேரவை தீர்மானம்
கடைசி நம்பிக்கையான சர்வதேசச் சமூகமும் தமிழர்களைக் கைவிட்டுவிட்டது
விடுதலைச் சிறுத்தைகள் வேதனை
தொல். திருமாவளவன் அறிக்கை


ஐ.நா. பேரவையில் சிறு அளவிலான எதிர்ப்புமின்றி நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் தமிழினத்திற்கு இழைக்கப்பட்ட மாபெரும் துரோகமாகும். ஐ.நா. மனித உரிமை ஆணையத்தையும் சர்வதேசச் சமூகத்தையும் கடைசி நம்பிக்கையாகக் கருதி எதிர்பார்த்துக் காத்திருந்த தமிழ்ச் சமூகத்தை இத்தீர்மானத்தின் மூலம் அவை ஏமாற்றி விட்டன.  

அமெரிக்கா மற்றும் இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகள், இலங்கையில் இராஜபக்சே கும்பலை வீழ்த்தி ரணில் மற்றும் சிறிசேனா கும்பலை ஆட்சி அதிகாரப் பீடத்தில் அமர வைத்து இலங்கையில் தமக்குச் சாதகமான ஒரு சூழலை உருவாக்கி, தமிழினத்திற்கு நேர்ந்த கொடூரத்தை மூடி மறைத்து சிங்கள இனவெறியர்களைக் காப்பாற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன.  ஐ.நா. மூன்று வல்லுநர் குழு மற்றும் புலனாய்வுக் குழு ஆகியவை அளித்த அறிக்கைகளில் ஈழத்தில் மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் மட்டுமின்றி இனப்படுகொலை நிகழ்ந்ததற்கான ஆதாரங்களை அம்பலப்படுத்தியுள்ளன. இருப்பினும், அவற்றையெல்லாம் புறந்தள்ளிவிட்டு அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தீர்மானத்தை சில திருத்தங்களுடன் அமெரிக்காவுக்கு எதிரான சீனா உள்ளிட்ட நாடுகளும் ஆதரவளித்து நிறைவேற்றியுள்ளன. மனித உரிமை மீறல், போர்க் குற்றம் மற்றும் இனப்படுகொலை ஆகிய குற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன என்பதற்கான ஆதாரங்களை அறிந்த பின்னரும் சிங்களவர்கள் விரும்பும் வகையிலான ஒரு விசாரணை அமைப்பை உருவாக்குவதற்கு சர்வதேசச் சமூகம் எவ்வாறு ஒப்புக்கொண்டது என்பது விளங்கவில்லை.  

இத்தீர்மானத்தை முன்மொழிந்த அமெரிக்காவும், அதனை நிறைவேற்றத் துணையாக இருந்த அமெரிக்க ஆதரவு நாடுகளும், அமெரிக்க எதிர்ப்பு நாடுகளும் ஈழத்தில் நடந்த இனப்படுகொலைக்குத் துணையாக இருந்து குற்றமிழைத்தன என்பது உலகறிந்த உண்மையாகும்.  சிங்கள அரசு, இந்திய அரசு ஆகியவை மட்டுமின்றி அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு சர்வதேச அரசுகளும் தமிழினத்தை அழித்தொழித்த இனப்படுகொலைக் குற்றத்தில் ஈடுபட்ட காரணத்தாலேயே தங்களைத் தாங்களே தற்காத்துக் கொள்ளும் வகையில் இத்தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளன.  சிங்களவர்கள் விரும்பிய உள்ளூர் விசாரணை அமைப்பு முறைக்கும் தற்போது பன்னாட்டு நீதிபதிகளைக் கொண்டதாகக் கூறப்படும் விசாரணை முறைக்கும் பெரிய வேறுபாடு இருப்பதாகத் தெரியவில்லை.  சிங்களவர்கள் இதனை மனப்பூர்வமாக வரவேற்பதிலிருந்து இந்தப் பன்னாட்டு விசாரணை முறை எவ்வாறு இருக்கும் என்பதை உணர முடிகிறது.  

சிங்கள இனவெறியர்கள் இடம்பெறாத வகையிலும், சிங்கள அரசு விசாரணையில் எத்தகைய தலையீடும் செய்ய முடியாத வகையிலுமான ஒரு சர்வதேச விசாரணை முறைதான் தமிழர்களின் கோரிக்கையாகும்.  ஆனால், தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தின்படி பன்னாட்டு நீதிபதிகள் இடம்பெற்றாலும், சிங்கள இனவெறியர்கள் பங்கேற்கவும், சிங்கள இனவெறி அரசு தலையிடவும், விசாரணையில் தமது ஆதிக்கத்தை நிலைநாட்டவும் ஏதுவான வாய்ப்புகளை உருவாக்கும் வகையிலேயே தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் அமைந்துள்ளது. ஆகவேதான் இது தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட ஒரு மாபெரும் துரோகம் என்பதை சர்வதேசச் சமூகத்திற்கு நாம் சுட்டிக்காட்ட வேண்டிய தேவை எழுந்துள்ளது.  
இத்தீர்மானத்தில் விடுதலைப் புலிகளையும் விசாரிப்போம் என்கிற பெயரில் தமிழர்களை மீண்டும் வேட்டையாடுவதற்கான ஒரு வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளனர். அப்பாவித் தமிழர்களை விசாரணை என்கிற பெயரில் விடுதலைப் புலி என முத்திரைக் குத்திப் பழிவாங்குவதற்கு இத்தீர்மானம் வழிவகுக்கிறது. காணாமல் போன இருபத்தைந்தாயிரம் தமிழர்களைப் பற்றி இத்தீர்மானத்தில் ஏதும் குறிப்பிடப்படவில்லை.  

தமிழரின் தாயகத்தில் பத்து அடிக்கு ஒருவர் என இலட்சக் கணக்கான சிங்களப் படையினரை நிறுத்தி வைத்துக்கொண்டு இவர்கள் நடத்தப்போகும் விசாரணையில் சாட்சிகள் எவ்வாறு சுதந்திரமாக சாட்சியம் அளிக்க முன்வருவார்கள் என்கிற கேள்வி எழுகிறது.  

அங்கே நெடுங்காலமாக நிலைகொண்டிருக்கும் இராணுவ முகாம்களை அகற்றுவதற்கும் குடியேற்றப்பட்ட சிங்களவர்களை வெளியேற்றுவதற்கும் வாய்ப்பில்லாத ஒரு சூழலில் இத்தீர்மானத்தின்படி நடைபெறப் போகும் விசாரணை எவ்வாறு சுதந்திரமானதாக அமையும் என்பது விளங்கவில்லை.  

நடுநிலை வகிக்கப்போவதாகக் கூறி நாடகமாடிய இந்திய அரசும் வழக்கம்போல தமிழ்ச் சமூகத்தின் முதுகில் குத்தி துரோகம் இழைத்துவிட்டது.  

சிங்கள இனவெறியர்கள் விரித்த அரசியல் பொறிக்குள் சிக்கிக்கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இத்தீர்மானத்திற்கு சிவப்புக் கம்பளம் விரிக்கும் நிலை உருவாகிவிட்டது. 

தமிழ்ச் சமூகம் இன்று சர்வதேச அரங்கில் ஒரு நாதியற்ற சமூகமாகத் தவித்து நிற்கிறது.  இந்நிலையில், உலகத் தமிழர்கள் யாவரும் தமக்கு நேர்ந்துள்ள இந்தப் பேரவலத்தைக் கருத்தில்கொண்டு ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய வரலாற்றுத் தேவையை உணர வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் சுட்டிக்காட்டுகிறது. சர்வதேசச் சமூகத்தின் ஒத்துழைப்பின்றி ஈழத் தமிழர்களுக்கான நீதியை வென்றெடுக்க இயலாது என்ற உண்மையையும் புரிந்துகொண்டு தமிழ்ச் சமூகம் தமக்கான செயல் திட்டத்தை வரையறுக்க வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் வலியுறுத்துகிறது.  

ஐ.நா. பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தின் அடிப்படையில் நடைபெறப் போகும் விசாரணையை அங்குலம் அங்குலமாகக் கண்காணிக்கவும், அவற்றின் செயல்பாடுகளை சர்வதேசச் சமூகத்திலுள்ள சனநாயக சக்திகளின் பார்வைக்குக் கொண்டுசெல்லவும் அணியமாவோம் என புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகத்திற்கு விடுதலைச் சிறுத்தைகள் வேண்டுகோள் விடுக்கிறது.  

இவண்
தொல்.திருமாவளவன்

0 comments:

கருத்துரையிடுக