சர்வதேச விசாரணையை வலியுறுத்தி தமிழக சட்டப் பேரவை தீர்மானம் தொல்.திருமாவளவன் வரவேற்பு

இலங்கை இனப்படுகொலை :
சர்வதேச விசாரணையை வலியுறுத்தி 
தமிழக சட்டப் பேரவை தீர்மானம்
தொல்.திருமாவளவன் வரவேற்பு
 

  இலங்கையில் சிங்களப் பேரினவாத அரசால் பல்லாயிரக் கணக்கான தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக சுதந்திரமான சர்வதேச விசாரணை நடத்தப்பட்டு போர்க் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும், பிற அரசியல் கட்சிகளும், உலகத் தமிழர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்ற நிலையில், ஏற்கனவே இது குறித்து தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
 
ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டம் தற்போது நடைபெற்றுக்கொண்டுள்ள நிலையில் சர்வதேச விசாரணையை வலியுறுத்தி இலங்கை வடக்கு மாகாண சபையும் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது.  இந்நிலையில், தமிழக சட்டப்பேரவையிலும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுத்திருந்தோம்.  வடக்கு மாகாண சபையின் தீர்மானத்தை வழிமொழிந்தும் விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட தமிழ் உணர்வாளர்களின் கோரிக்கையை ஏற்றும் தற்போது தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.  இதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மனதார வரவேற்கிறோம். தீர்மானத்தை முன்மொழிந்த மாண்புமிகு தமிழக முதல்வருக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
 
போர்க் குற்றங்கள் தொடர்பாக ஐ.நா. மனித உரிமை கவுன்சில் மேற்கொண்ட விசாரணை அறிக்கை இலங்கையில் போர்க்குற்றங்கள் நடைபெற்றிருப்பதை உறுதி செய்துள்ள நிலையில், ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலின் ஆணையரும் இலங்கையில் நடைபெற்ற குற்றங்கள் மிகவும் பயங்கரமானவை எனக் குறிப்பிட்டுள்ள நிலையிலும், இலங்கை அரசைக் காப்பாற்றும் வகையில் அமெரிக்க வல்லரசு தன்னுடைய நிலையை இப்போது மாற்றிக்கொண்டிருப்பது வேதனை அளிக்கிறது.  அமெரிக்காவின் சுயநலப்போக்குக்கு இந்தியப் பேரரசு பலியாகக் கூடாது.  ஈழத் தமிழர் பிரச்சனையில் நீதி வழங்கும் பெரும் பொறுப்பு இந்தியாவுக்கு உள்ளது.  இதை உணர்ந்து தமிழக சட்டப்பேரவைத் தீர்மானத்தில் குறிப்பிட்டிருப்பதுபோல் இந்திய அரசே ஐ.நா. மனித உரிமைக் கவுன்சில் கூட்டத்தில் தீர்மானம் ஒன்றைக் கொண்டுவர வேண்டும் எனவும் இனப்படுகொலையில் ஈடுபட்டவர்களைத் தண்டிப்பதில் உறுதியோடு இருக்க வேண்டும் எனவும், சர்வதேச விசாரணையை வலியுறுத்தி உலகெங்கும் வாழும் ஈழத் தமிழர்கள் ஒருங்கிணைந்து எதிர்வரும் 21ஆம் நாள் போராட்டங்களை நடத்தவுள்ளனர்.  அப்போராட்டங்களுக்கு தமிழக அரசு தனது ஆதரவை நல்க வேண்டுமென்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.

இவண்
தொல்.திருமாவளவன்

0 comments:

கருத்துரையிடுக