டிஎஸ்பி விஷ்ணுப்ரியா குடும்பத்தினருக்கு எழுச்சித்தமிழர் ஆறுதல்
பெண் காவலர்களின் பாதுகாப்புக்காக நீதி விசாரணை ஆணையம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கூறினார்.
கடலூர் கோண்டூரில் உள்ள தற்கொலை செய்துகொண்ட டிஎஸ்பி விஷ்ணுபிரியாவின் வீட்டுக்கு வியாழக்கிழமை தொல்.திருமாவளவன் சென்றார். அங்கு வைக்கப்பட்டிருந்த விஷ்ணுபிரியாவின் உருவப்படத்துக்கு மலரஞ்சலி செலுத்தி பெற்றோருக்கு ஆறுதல் கூறினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
விஷ்ணுபிரியாவின் சாவில் சந்தேகம் உள்ளதாக அவரின் பெற்றோர் உறுதியாக நம்புகின்றனர். எனவே சிபிஐ விசாரணை வேண்டுமென அவர்கள் கோருகின்றனர். ஆனால் தமிழக முதல்வர் சிபிசிஐடி விசாரணையே போதும் என்று தெரிவித்திருந்தார். சிபிசிஐடி விசாரணையின் மூலம் உண்மை வெளிவருமா என்ற சந்தேகம் விடுதலைச் சிறுத்தை கட்சிக்கு உள்ளது.
திருச்செங்கோட்டில் கூடுதல் காவல் கண்காணிப்பாளராகப் பணியாற்றிய பெஸ்கி திடீரென சென்னைக்கு இட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஏன் இந்த இடமாற்றம் என்பதை அரசு விளக்க வேண்டும். விஷ்ணுபிரியா தனக்கு ஏற்பட்ட நெருக்கடிகளை பெஸ்கியுடன் பகிர்ந்துள்ளார். நடந்த உண்மைகள் அவருக்குத் தெரியும். அரசு இந்த விஷயத்தில் நேர்மையான விசாரணை நடத்தும் என்ற நம்பிக்கை இல்லை.
கோகுல்ராஜ் கொலை வழக்கோடு சேர்த்து மில் அதிபர் ஜெகந்நாதன் கொலை வழக்கையும் விஷ்ணுபிரியா விசாரித்துள்ளார். இவ்விரு வழக்குகளிலும் தொடர்புடைய கூலிப்படையினர் அவரை அச்சுறுத்தியதாக தகவல் கிடைத்துள்ளது. அவர்கள் பேசியது மற்றும் சில ஆதாரங்களை விஷ்ணுபிரியா திரட்டி வைத்துள்ளார்.
ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள் குற்றவாளிகளுக்கு ஆதரவாக காவல் துறை உயர் அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்துள்ளனர். எனவே சிபிசிஐடி விசாரணை என்ற நிலைப்பாட்டை முதல்வர் மறுபரிசீலனை செய்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
கோகுல்ராஜ் கொலை வழக்கு, விஷ்ணுபிரியா மரணம் ஆகியவற்றுக்கு சிபிஐ விசாரணை வேண்டும் என்பதை வலியுறுத்தி எனது தலைமையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் கடலூரில் வரும் 28ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
விஷ்ணுபிரியாவின் குடும்பத்துக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும்.
இந்த வழக்கு தொடர்பாக வெளிப்படையாக கருத்து தெரிவித்த டிஎஸ்பி மகேஸ்வரிக்கு காவல் துறை பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
காவல் துறையில் பணியாற்றும் பெண் போலீஸார், அதிகாரிகளுக்கு போதிய பாதுகாப்பு இல்லை. அவர்களுக்கு இழைக்கப்படுகின்ற இன்னல்கள் தொடர்பாகவும், அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்குவது தொடர்பாகவும் நீதி விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என்றார்.

0 comments:

கருத்துரையிடுக