பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பும் வள்ளுவம் போற்றும் இசுலாமிய மக்களுக்கு பக்ரீத் வாழ்த்துக்கள்

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பும்
வள்ளுவம் போற்றும் இசுலாமிய மக்களுக்கு
பக்ரீத் வாழ்த்துக்கள்
தொல். திருமாவளவன் அறிக்கை

தியாகத் திருநாளாம் பக்ரீத் பெருநாளில் இசுலாமியப் பெருங்குடி மக்கள் யாவருக்கும் விடுதலைச் சிறுத்தைகளின் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறோம். இறைவனின் கட்டளையை ஏற்று தனது பிள்ளையை பலிக்கொடுக்க முயன்ற இப்ராஹீம் நபிகளைத் தடுத்து குழந்தையைப் பலியிடவேண்டாம், அதற்குப் பதிலாக ஆட்டுக்குட்டியை பலியிட்டு தங்களின் நேர்த்திக் கடனை நிறைவேற்றுங்கள் என்று கூறியதாகவும், அதனடிப்படையில் ஆட்டுக் குட்டியைப் பலியிட்டு பகிர்ந்துண்ணும் வழக்கம் இசுலாமிய மக்களின் பண்பாடாக வளர்ந்தது எனவும், அதுவே பக்ரீத் பெருநாளாக கொண்டாடப்படுகிறது எனவும் அறிய வருகிறோம். குடும்பத்தினர், உறவினர் மற்றும் ஆதரவற்ற பெருமக்கள் எனப் பலரும் பகுத்துண்டு வாழவேண்டும் என்கிற நெறிமுறையைப் போதிக்கும் பெருநாள்தான் பக்ரீத் நாளாகும். 
 
தேசம், நிறம், இனம் என்கிற எல்லைகளைத் தாண்டி இசுலாமியர் யாவரும் இந்த நெறிமுறையைப் பின்பற்றி சகோதரத்துவத்தை போற்றிவருகின்றனர். இவ்வாறு, சகோதரத்துவத்தைப் போற்றும் இசுலாமிய மக்களுக்கு இந்திய மண்ணில் பாதுகாப்பற்ற நிலை நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது என்பது வேதனைக்குரியதாகும். தலித் மக்களைவிடவும் இசுலாமிய மக்கள் இந்த மண்ணில் பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கியுள்ளனர் என்றும், அவர்களது வாழ்க்கை பரிதாபத்திற்குரியதாக உள்ளது என்றும் ராஜேந்திர சச்சார் அறிக்கை கூறுகிறது.
 
இத்தகைய நிலையில் வாழும் இசுலாமிய மக்களுக்கு சங்பரிவார் அமைப்புகளைச் சார்ந்தவர்கள் கடுமையாக நெருக்கடிகளை ஏற்படுத்தி வருகின்றனர் என்பது கண்டனத்திற்குரியதாகும். தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களில் ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட சங்பரிவார் அமைப்புகள் பக்ரீத் பெருநாளுக்காக இசுலாமியர்கள் கொண்டுவரும் ஆடுகளை வழிமறித்து பறிமுதல் செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்றும் பக்ரீத் நாளில் ஆடுகளை பலியிடிக்கூடாது என்றும், அதற்கு தடைவிதிக்க வேண்டும் என்றும் சங்பரிவார் அமைப்புகள் பல்வேறு இடங்களில்  போராட்டங்களில் ஈடுபடுவதாகவும் செய்திகள் வருகின்றன. 
 
மராட்டிய மாநிலத்தில் இறைச்சி விற்கக்கூடாது எனத் தடைவிதித்தது செல்லாது என நீதிமன்றம் தீர்ப்பளித்தபிறகும் தடையாணையை நடைமுறைப்படுத்துவதில் தீவிரம் காட்டி வருகின்றனர். மராட்டியத்தில் மட்டுமின்றி இந்தப் போக்கு தமிழகத்திலும் இன்னும் பிற மாநிலங்களிலும் பரவிவருகிறது. இது சமூக நல்லிணக்கத்திற்கு இழைக்கும் தீங்காகும். தமிழக அரசு இசுலாமிய மக்களுக்குப் போதிய பாதுகாப்பு அளிக்கவேண்டும் என்றும் பக்ரீத் பெருநாளை சுதந்திரமாக கொண்டாட ஆவண செய்யவேண்டும் என்றும் விடுதலைச் சிறுத்தைகள் வேண்டுகோள் விடுக்கிறது. 
 
‘பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்’ என்னும் வள்ளுவனின் வாழ்வியல் நெறிகளை பின்பற்றும் வகையில் இசுலாமியப் பெருங்குடி மக்கள் பக்ரீத் பெருநாளைக் கொண்டாடி வருகின்றனர்.  வள்ளுவம் போற்றும் இசுலாமியப் பெருமக்கள் கொண்டாடும் பக்ரீத் பெருநாளில் சமூக நல்லிணக்கத்தையும், சகோதரத்துவத்தையும் வளர்த்தெடுக்க உறுதியேற்போம்.

இவண்
தொல். திருமாவளவன்

0 comments:

கருத்துரையிடுக