கோகுல்ராஜ் வழக்கு விசாரணை அதிகாரி விஷ்ணுப்ரியா சாவு அய்யங்களை ஏற்படுத்துகிறது.

கோகுல்ராஜ் வழக்கு விசாரணை அதிகாரி விஷ்ணுப்ரியா சாவு அய்யங்களை ஏற்படுத்துகிறது.

மையப் புலனாய்வு விசாரணைக்கு தமிழக அரசு ஆணையிட வேண்டும்

தலைவர் தொல்.திருமாவளவன் அறிக்கை.

திருச்செங்கோடு காவல் துணை கண்காணிப்பாளர் விஷ்ணு பிரியா அவர்கள் திடீரெனத் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார். இது மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. தன்னுடைய சாவுக்கும் கோகுல்ராஜ் கொலைவழக்குத் தொடர்பான விசாரணைக்கும் எந்தத் தொடர்பும் இல்லையென்று தற்கொலை செய்துகொள்வதற்கு முன்னதாக அவர் எழுதியுள்ள கடிதத்தில் இருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன.

கோகுல்ராஜ் கொலைசெய்யப்பட்ட வழக்கை விசாரணை செய்யும் அதிகாரி என்னும் முறையில் அவர் அவ்வழக்கின் முதன்மைக் குற்றவாளியைக் கைது செய்ய வேண்டும் என்பதில் தீவிரம் காட்டியிருக்கிறார். அக்குற்றவாளியின் உறவினர்களையும் நண்பர்களையும் பிடித்து விசாரித்திருக்கிறார். முதன்மைக் குற்றவாளிக்குச் சொந்தமான சொத்துக்களை முடக்குவது தொடர்பான அறிக்கையையும் வெளியிட்டிருக்கிறார். குற்றவாளி பதுங்கி இருக்கும் இடத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறார் என்றும் அண்மையில் தகவல்கள் வெளியாயின. இந்நிலையில், அக்குற்றவாளி தன்னைக் காவல்துறையினரால் கைது செய்ய முடியாது என்று சவால் விட்டிருக்கிறார். மேலும், விசாரணை அதிகாரி என்கிற முறையில் விஷ்ணுப்ரியா அவர்களுக்குத் தொடர்ச்சியாக அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன என்றும், விசாரணை செய்ய அவருக்கு உதவியாக நியமிக்கப்பட்ட காவல்துறையினர் அவருக்கு ஒத்துழைக்கவில்லை என்றும் தெரிய வருகிறது.

இந்நிலையில்தான் அவர் தற்கொலை செய்துள்ளார். அவர் தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு குடும்பப் பிரச்சனைகளோ தனிப்பட்ட பிரச்சனைகளோ ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. அவருடைய தந்தை ஓய்வு பெற்ற காவல்துறை உயர் அதிகாரியாவார். அவருடைய தாயார் வங்கி அதிகாரியாகப் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். நன்கு படித்த குடும்பப் பின்னணியைக்கொண்ட அவர், காவல்துறையில் பணியைத் திறம்படச் செய்யவில்லை என்ற காரணத்திற்காக தற்கொலை செய்துகொண்டாக அவர் கடிதத்தில் எழுதியிருப்பதாகச் சொல்லப்படுவதை ஏற்க இயலவில்லை. அத்துடன், தன்னுடைய சாவை அரசியலாக்க வேண்டாம் என்றும், தனது உடலை பிணக் கூறாய்வுக்குட்படுத்த வேண்டாம் என்றும் அவருடைய கடிதத்தில் எழுதியிருப்பதாகவும் சொல்லப்படுவது பல்வேறு ஐயங்களுக்கு இடமளிக்கிறது. தன்னுடைய வேலைகளைத் தன்னால் திறம்படச் செய்ய இயலவில்லை என்றால், வேலை வேண்டாம் என உதறிவிட்டு வெளியேறுவதுதான் பொதுவாக யாரும் எடுக்கிற முடிவாக இருக்க முடியும். அப்படி வேலையைவிட்டு வெளியேறாமல், இதற்காகத் தற்கொலை செய்துகொண்டார் என்று சொல்வதையும் ஏற்க இயலவில்லை. ஏதோ ஒரு வகையில் மன அழுத்தத்தை ஏற்படுத்தும் அளவுக்கு மறைமுகமான, கடுமையான அச்சுறுத்தல் அவருக்கு விடுக்கப்பட்டிருக்கலாம் என்ற அச்சத்தையே விஷ்ணுப்ரியா அவர்களின் சாவு ஏற்படுத்துகிறது. கோகுல்ராஜ் கொலை வழக்கை விசாரணை செய்தவர் என்கிற முறையில் அவருடைய சாவு பல்வேறு கேள்விகளுக்கு இடமளிக்கிறது.

விஷ்ணுப்ரியா அவர்கள் எழுதியிருப்பதாகச் சொல்லப்படும் கடிதத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு அது தற்கொலைதான் என்கிற முடிவுக்கு வந்துவிடக் கூடாது. கோகுல்ராஜ் கொலைவழக்கு விசாரணைக்கும் விஷ்ணுப்ரியா அவர்களின் சாவுக்கும் தொடர்பில்லை என்பதை முழுமையான விசாரணையின் மூலம் உறுதிப்படுத்த வேண்டிய தேவை உள்ளது. எனவே, விஷ்ணுப்ரியா அவர்களின் மரணத்தை மையப் புலனாய்வு விசாரணைக்குட்படுத்த வேண்டும் என்று தமிழக அரசை விடுதலைச் சிறுத்தைகள் கேட்டுக்கொள்கிறது.

இவண்
தொல்.திருமாவளவன்.

0 comments:

கருத்துரையிடுக