மது ஒழிப்புக் கொள்கைப் பரப்பியக்கம்

பெரியார் பிறந்த நாள் முதல் காந்தி பிறந்த நாள் வரை (செப்.17 - அக்.2)
விடுதலைச் சிறுத்தைகளின் மது ஒழிப்புக் கொள்கைப் பரப்பியக்கம்
இந்தக் கூட்டத்தொடரிலேயே மதுவிலக்குக் கொள்கையை ஏற்று தீர்மானம் நிறைவேற்ற தமிழக அரசுக்கு வேண்டுகோள்

தொல்.திருமாவளவன் அறிக்கை 
 
 

மது ஒழிப்பை வலியுறுத்தி தமிழமெங்கும் மக்கள் போராட்டம் வலுத்து வருகிறது. இது ஒரு நீண்டகால கோரிக்கையாகும். எனினும் தமிழக அரசு இதனைப் பொருட்படுத்தவில்லை. அரசாங்கமே விற்பனைக் கழகம் ஒன்றை நிறுவி அதன்மூலம் தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் மதுக்கடைகளைத் திறந்துவைத்து குடிப்பழக்கத்தை ஒரு வெகுமக்கள் கலச்சாரமாக மாற்றியிருப்பது சகித்துக்கொள்ள இயலாத வேதனைக்குரிய செயலாகும். குடிப்பது ‘குற்றம்’ என்றும், ‘தலைக்குனிவான செயல்’ என்றும் பகிரங்கமாகக்கருதி, வெட்கப்பட்டு, கூனிக்குறுகிய காலமெல்லாம் மாறி, குடிப்பதையே பெருமையாகக் கருதும் வகையில், அரசாங்கமே அதனை அங்கீகரித்துள்ளது. குடிப்பழக்கத்தால் வரும் பாதிப்புகளைப்பற்றிக் கொஞ்சமும் கவலைப்படாமல், அரசுக்கு வருமானம்தான் முதன்மையெனக் கருதுவது வெட்கக்கேடானதாகும். அத்துடன் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகளையும் மதுவியாபாரம் செய்வதற்குப் பயன்படுத்துவது அவர்களை அவமதிக்கும் செயலாகும். குடிப்பழக்கத்தில், தனிமனிதனின் உடலும் உள்ளமும் கடுமையாகப் பாதிக்கப்படுவதோடு, அவன் சார;ந்த குடும்பமும் சமூகமும் வெகுவாகச் சீரழிவதைப் பார்க்கமுடிகிறது. உயிர்ச்சேதம், பொருட்சேதம் போன்றவற்றுடன் சமூக அமைதியும் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது. எனவே தான், கட்சிசாராத பொதுமக்களே இன்று, மது ஒழிப்பை வலியுறுத்தி போராடி வருகின்றனர். ஆனாலும், அரசு இதுகுறித்து கவலைப்படுவதாகத் தெரியவில்லை. மதுஒழிப்புக்கோரி போராடியக் களத்திலேயே சேலம் சசிபெருமாள் உயிரிழந்திருக்கிறார். அதன் பின்னர், வெகுமக்களின் போராட்டம் வெகுவாகத் தீவிரமடைந்தது. ஆனாலும் அரசு தன்னுடைய நிலைப்பாட்டிலிருந்து சற்றும் தளரவில்லையென்பது பெரிதும் வேதனையளிக்கிறது. 

  இந்நிலையில்தான் விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில், தந்தை பெரியார் பிறந்தநாளான செப்டம்பர் 17 முதல் காந்தியடிகள் பிறந்தநாளான அக்டோபர் 2 வரையில் கிராமங்கள்தோறும் அமைதியான முறையில் அறவழியில் மதுஒழிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இருவாரகாலத்திற்குத் தொடர்ச்சியான பரப்பியக்கத்தை நடத்துகிறோம். அதாவது, ‘மையஅரசே, மதுவிலக்குக் கொள்கையைத் தேசியக் கொள்கையாக அறிவிப்புச்செய்’ என்றும், ‘மாநில அரசே, மதுவிலக்குக் கொள்கையை ஏற்று, மக்கள் வாழ்வைச் சீரழிக்கும் மதுக்கடைகளை உடனே மூடு’ என்றும் இரட்டை கோரிக்கைகளை முன்னிறுத்தி இவ்வியக்கம் ஒருங்கிணைக்கப்படுகிறது. அரசுகளுக்கு மட்டுமே இத்தகைய பொறுப்பு உள்ளது என்று கருதாமல், மக்களுக்கும் இதில் பெரும்பொறுப்பு உண்டு என்பதை உணரவேண்டும். எனவே, மதுப்பழக்கத்திலிருந்து விடுபடவேண்டுமென வலியுறுத்துவதும் நமது கடமையாகும். அந்த வகையில், வீதிவீதியாக, வீடுவீடாகச் சென்று விழிப்புணர்வூட்டும் துண்டறிக்கைகளை வழங்குவது, தெருமுனைப் பிராச்சாரங்களை மேற்கொள்வது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்கிறோம். அத்துடன், இந்த இருவார காலமும் விடுதலைச் சிறுத்தைகள் யாவரும் கருஞ்சட்டை அணிந்து கொண்டும், சட்டையில் ‘மதுவை ஒழிப்போம்! மக்களைக்காப்போம்!’ என்னும் முழக்கம் பொறித்த அட்டையிலான வில்லைகளைப் பொருத்திக்கொண்டும் பரப்பியக்கத்த்தில் ஈடுபடுகிறோம். ‘எரிவதை இழுத்தால் கொதிப்பது அடங்கும்’ என்பதைப் போல, ‘குடிப்பதை நிறுத்தினால் விற்பது நிற்கும்!’. 

 மதுக்கடைகளை மூடச்சொல்லும் அதே வேளையில், மதுப்பழக்கத்தைக் கைவிடச் சொல்வதும்தான் மதுஒழிப்பு பரப்பியக்கத்தின் நோக்கமாகும். தந்தை பெரியார் அவர்களைத் தமது கொள்கை ஆசான்களில் ஒருவராக ஏற்றுக்கொண்டுள்ள தமிழகத்தின் ஆட்சியாளர்கள், தந்தை பெரியார் அவரது துணைவியார் நாகம்மையார், சகோதரி கண்ணம்மையார் ஆகியோர் மது ஒழிப்புக்காக ஆற்றிய பங்களிப்பை நினைவில்கொண்டு, அவர்களின் தியாகத்தை மதிக்கும் வகையில், மதுவை ஒழிக்க, மதுவிலக்கை ஏற்க முன்வரவேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் வலியுறுத்துகிறோம். இந்த சட்டமன்றக் கூட்டத்தொடரிலேயே கொள்கை அளவில் மதுவிலக்கை ஏற்று தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம்.

0 comments:

கருத்துரையிடுக