திரு வைகோவை அவமதித்த அமெரிக்கத் துணைத் தூதரைக் கண்டித்திடுக!

தமிழக மீனவர்களை மீட்டிடுக!
திரு வைகோவை அவமதித்த அமெரிக்கத் துணைத் தூதரைக் கண்டித்திடுக!
மத்திய அரசுக்கு தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்ஈழத் தமிழர்களுக்கு எதிராகத் துரோகம் இழைப்பதுபோல் உள்ளக விசாரணையே போதும் என்று அறிவித்துள்ள அமெரிக்காவின் போக்குக்கு தமது எதிர்ப்பைத் தெரிவிக்கும்பொருட்டு தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு அரசியல் கட்சியினரும் சென்னையில் உள்ள அமெரிக்கத் துணைத் தூதரைச் சந்தித்து முறையிட்டு வருகின்றனர். இன்றைய தினம் மதிமுக பொதுச்செயலாளரும், உலகறிந்த தலைவர்களில் ஒருவருமான திரு.வைகோ அவர்கள் துணைத் தூதரைச் சந்திப்பதற்கு முன்கூட்டிய அனுமதி பெற்றிருந்தார்.  அதனடிப்படையில் இன்று அவரைச் சந்திக்கச் செல்லும்போது அமெரிக்கத் துணைத் தூதர், அலுவலகத்தில் இருந்துகொண்டே திரு வைகோ அவர்களைச் சந்திக்காமல் அவமதித்துள்ளார். ஆலோசகர் ஒருவர் மூலமாக வைகோ அவர்களின் மனுவைப் பெறச் செய்திருக்கிறார். இந்தச்செயல் திரு வைகோ அவர்களுக்கான அவமதிப்பு மட்டுமல்ல, ஒட்மொத்தத் தமிழர்களையே அவமதித்ததாகத்தான் பொருள்படும். இதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
 
இன்று இந்திய கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழ்நாட்டைச் சார்ந்த 16 மீனவர்களை இலங்கைக் கடற்படை கைது செய்து இழுத்துச்சென்றுள்ளது. இலங்கையில் தேர்தல் முடிந்து தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்கும் என்று சிங்கள ஆட்சியாளர்கள் வாக்குறுதி அளித்தார்கள். ஆனால் இப்போதும் அவர்கள் பேரினவாதப் பாதையிலேயே பயணத்தைத் தொடர்கிறார்கள். ஈழத் தமிழர்களுக்கு இப்போது ஆதரவுக் குரல் எழுப்பவேண்டியது தாய்த் தமிழ்நாட்டின் தலையாயக் கடமையாகும். அந்தக் குரலை நசுக்குவதற்குத்தான் சிங்களப் பேரினவாத அரசும், அமெரிக்க வல்லரசும் இன்று கூட்டணி அமைத்திருக்கின்றன. 
 
திரு வைகோ அவர்களை அவமதித்த அமெரிக்கத் துணைத் தூதரின் நடவடிக்கையும், தமிழக மீனவர்களைக் கைது செய்துள்ள இலங்கைக் கடற்படையினரின் நடவடிக்கையும் அமெரிக்க இலங்கை கூட்டணியின் அடையாளமேயாகும். இது ஈழத் தமிழர்களுக்கு மட்டுமின்றி இந்தியாவிற்கே அச்சுறுத்தலான ஒன்றுதான் என்பதை இந்திய அரசு புரிந்துகொள்ளவேண்டும்.
இலங்கைக் கடற்படை பிடித்துச்சென்ற தமிழக மீனவர்களை விடுவிக்கவும், திரு வைகோ அவர்களை அவமதித்த அமெரிக்கத் துணைத் தூதருக்குத் தனது கண்டனத்தைத் தெரிவிக்கவும் இந்திய அரசு முன்வரவேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பாக வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.
 

இவண்

தொல்.திருமாவளவன்