அக்டோபர் 31 - திருச்சியில் ‘மது ஒழிப்பு மகளிர் மாநாடு’

மதுவிலக்குக் கொள்கையை வலியுறுத்தி
அக்டோபர் 2 - தமிழகம் தழுவிய அளவில் கிராமந்தோறும் 
இலட்சக் கணக்கான விடுதலைச் சிறுத்தைகள் மிதிவண்டிப் பரப்புரை
அக்டோபர் 31 - திருச்சியில் ‘மது ஒழிப்பு மகளிர் மாநாடு’
தொல்.திருமாவளவன் அறிவிப்புதமிழக அரசு மதுவிலக்குக் கொள்கையை ஏற்றுக்கொண்டு அரசு மதுபானக் கடைகளை மூட வேண்டும் என தமிழக மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.  நடந்து முடிந்த சட்டமன்றக் கூட்டத் தொடரில் இதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் வலியுறுத்தினோம்.  ஆனால், தமிழக சட்டமன்றக் கூட்டத் தொடர் நிறைவு பெற்றுவிட்டது.  அரசு மதுபானக் கடைகளை மூட முடியாது எனவும், மக்களைத் திருந்தச் சொல்லுங்கள் என்றும் மதுவிலக்கு மற்றும் ஆயத்துறைக்கான அமைச்சர் சட்டமன்றத்தில் பேசியிருக்கிறார். அமைச்சரின் இந்தப் பேச்சு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாக அமைந்துள்ளது.  

மக்களின் உணர்வுகளை அவமதிக்கும் வகையில் தமிழக அரசு மிகவும் பிடிவாதமாக நடந்துகொள்ளும் சூழலிலும் மதுஒழிப்புக் கோரிக்கையை வலியுறுத்தி மக்களின் போராட்டம் தொடர்ந்துகொண்டே இருக்கிறது.  கடந்த இரண்டு வார காலமாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, ‘மதுவை ஒழிப்போம்! மக்களைக் காப்போம்!’ என்கிற முழக்கத்துடன், மதுஒழிப்பு விழிப்புணர்வுப் பரப்பியக்கத்தை மேற்கொண்டு வருகிறது.  வீதி வீதியாக, வீடு வீடாகச் சென்று மது ஒழிப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் துண்டறிக்கைகளை வழங்கியும், வீதி நாடகங்களை நடத்தியும் தொடர் பரப்புரையை மேற்கொண்டு வருகிறது.  

மதுவிலக்குக் கொள்கையை நடைமுறைப்படுத்தும் வகையில் தனது தோப்பிலிருந்த நூற்றுக்கணக்கான தென்னை மரங்களை வெட்டிச் சாய்த்த தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் 17ஆம் நாள் முதல், மதுவிலக்குக் கொள்கையை தனது உயிர்மூச்சுக் கொள்கையாகக் கொண்டு பரப்புரை செய்த காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2ஆம் நாள் வரை நடைபெற்றுவரும் மதுஒழிப்பு விழிப்புணர்வுப் பரப்பியக்கத்தின் இறுதி நாளான அக்டோபர் 2 அன்று தமிழகம் முழுவதும் மிதிவண்டிப் பரப்புரையை விடுதலைச் சிறுத்தைகள் மேற்கொள்கிறது.  தமிழகம் தழுவிய அளவில் நடைபெறும் இப்பரப்பியக்கத்தில் இலட்சக் கணக்கான விடுதலைச் சிறுத்தைகள் பங்கேற்கிறார்கள்.  அக்டோபர் 3ஆம் நாள் முதல் தொடர்ந்து ஒரு மாத காலத்திற்கு விடுதலைச் சிறுத்தைகளின் பெண்கள் அணியான மகளிர் விடுதலை இயக்கம், கிராமந்தோறும் மது ஒழிப்புப் பரப்பியக்கத்தைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதெனத் திட்டமிடப்பட்டுள்ளது.  அக்டோபர் 31 அன்று மகளிர் விடுதலை இயக்கத்தின் சார்பில் திருச்சியில் ‘மது ஒழிப்பு மகளிர் மாநாடு’ நடைபெறவுள்ளது.  

பல்வேறு மகளிர் இயக்கங்களைச் சார்ந்தவர்களும் பங்கேற்கவுள்ள இம்மாநாட்டில் பல்லாயிரக் கணக்கான பெண்கள் அணி திரண்டு மதுக் கடைகளை மூட வலியுறுத்தியும் மதுஒழிப்புக் கொள்கையை தேசியக் கொள்கையாக அறிவிக்க வலியுறுத்தியும் தீர்மானம் நிறைவேற்றப்படும்.

இவண்,
தொல்.திருமாவளவன்

0 comments:

கருத்துரையிடுக