தஞ்சையில் ஜான்பாண்டியன் மீது தாக்குதல்! கர்நாடகத்தில் பேராசிரியர் கல்புர்கி படுகொலை!

தஞ்சையில் ஜான்பாண்டியன் மீது தாக்குதல்! 
கர்நாடகத்தில் பேராசிரியர் கல்புர்கி படுகொலை! 

மதவெறி, சாதிவெறி சக்திகளின் தொடரும் வன்முறைப்போக்குகளுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கண்டனம் 
                                              

தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை அருகே கொடியேற்றுவிழாவில் பங்கேற்பதற்காக தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான்பாண்டியன் அவர்கள் சென்றபோது சமூகவிரோதிகள் கல்வீச்சுத் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். அவருடன் சென்ற கட்சிப் பொறுப்பாளர்களின் கார் கண்ணாடிகள் சேதமடைந்துள்ளன. சிலர் காயமடைந்துள்ளனர். காவல்துறையினரின் முன்னிலையிலேயே இத்தாக்குதல் நடந்துள்ளது. கடந்த ஓரிரு வாரங்களுக்கு முன், அதே தஞ்சை மாவட்டத்தில் கொடியேற்றுவதற்காகச் சென்ற என்னைக் குறிவைத்து பெட்ரோல் குண்டுகளை வீசிக் கொலை செய்ய முயற்சி நடந்ததையும் நாடறியும்.

தமிழகத்தில் வேறு எந்தக் கட்சித் தலைவர்களுக்கும் இத்தகைய நெருக்கடிகள் ஏற்படுவதில்லை. ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சார்ந்த தலைவர்கள் ஓரிடத்திலிருந்து பயணம் செய்வது பெரும் நெருக்கடியாக உள்ளது. கொடியேற்றுவதற்கும், தோரணங்களைக் கட்டுவதற்கும், விளம்பரத் தட்டிகளை வைப்பதற்கும் சுதந்திரம் இல்லாத அளவிற்கு ஒவ்வொரு நாளும் நெருக்கடிகளைச் சந்திக்க வேண்டியுள்ளது. கொடியேற்ற விடாமல் தடுப்பதும், ஏற்றிய கொடிக்கம்பங்களை வெட்டிச் சாய்ப்பதும், சுவரெழுத்து விளம்பரங்களை அழிப்பதும், விளம்பரத் தட்டிகளைக் கிழிப்பதும், எரிப்பதும், புரட்சியாளர் அம்பேத்கர் சிலைகளை அவமதிப்பதும் போன்ற வன்முறைகளில் தமிழகம் முழுவதும் பரவலாக ஈடுபட்டு வருகின்றனர். இதனைக் கட்டுப்படுத்துவதற்கு அரசு போதிய கவனம் செலுத்தாத நிலையும் தொடர்கிறது. புகார் கொடுத்தாலும் வழக்குப் பதிவு செய்யப்படுவதில்லை. வழக்குகள் பதிவு செய்யப்பட்டாலும் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. காவல்துறையின் இத்தகைய மெத்தனப்போக்கால்தான் ஒடுக்கப்பட்ட சமூகத் தலைவர்கள் பயணம் செய்யும்போது, காவல்துறையினரின் முன்னிலையிலேயே கற்களை வீசுவது, பெட்ரோல் குண்டுகளை வீசுவது போன்ற வன்முறையில் சாதியவாத சமூகவிரோதிகள் ஈடுபடுகின்றனர். ஒரு சில அரசியல் கட்சிகள் சாதியவாதிகளைத் தூண்டிவிட்டு வன்முறைகளில் ஈடுபடுத்துகின்றனர். இதனால் சமூகப் பதற்றம் திட்டமிட்டே உருவாக்கப்படுகிறது. 

எனவே தமிழக அரசு சாதியவாத, சமூகவிரோத சக்திகளின் போக்குகளைக் கண்காணிக்கவும் வன்முறைத் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கேட்டுக்கொள்கிறது.

தமிழகத்தில் சாதிவெறியர்களின் வன்முறை வெறியாட்டம் தலைவிரித்தாடுவதைப்போல இந்தியாவின் பல்வேறு இடங்களில் மதவெறியர்களின் வன்முறைப் போக்குகளும் அதிகரித்துள்ளன. கர்நாடகாவில் ஹம்பி பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியர் கல்புர்கி அவர்களின் வீட்டிற்குச் சென்று அவரைத் துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்துள்ளனர். அவர் ஒரு இடதுசாரிச் சிந்தனையாளர் ஆவார். பழமைவாதக் கருத்துக்களுக்கு எதிராக பகுத்தறிவுக் கருத்துகளைக் கொண்ட பல்வேறு நூல்களைப் படைத்தவர். சாகித்திய அகாடமி விருது பெற்றவருமாவார். மதவாத சக்திகளுக்கு எதிராகச் சிந்திக்கிறார், செயல்படுகிறார் என்பதனால் இந்தக் கொடூரமான படுகொலையை திட்டமிட்டுச் செய்துள்ளனர். பஜ்ரங்தள் இயக்கத்தைச் சார்ந்த ஒருவர் இந்தப் படுகொலையைத் தாம் செய்ததாக வெளிப்படையாக அறிவித்துள்ளார். அத்துடன், அடுத்தாக மேலும் ஒருவரை தாம் குறிவைத்திருப்பதாகவும் தன்னுடைய இணையப் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். சங்பரிவார் அமைப்புகளின் இத்தகைய மதவெறிப்போக்குகள் ஒருபுறமும், ஒடுக்கப்பட்ட மக்கள் மற்றும் தலைவர்களுக்கு எதிரான சாதிவெறிப்போக்குகள் ஒருபுறமும் நாடெங்கிலும் தலைவிரித்தாடுகின்றன. இது சமூகநல்லிணக்கத்தையும் தேசத்தின் அமைதியையும் சீர்குலைக்கும் போக்காகும்.

தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான்பாண்டியன் அவர்களின் மீது கல்வீசித் தாக்குதல் நடத்திய சாதிவெறிப் போக்கையும், பேராசிரியர் கல்புர்கி அவர்களைப் படுகொலை செய்த மதவெறிப் போக்கையும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மிக வன்மையாகக் கண்டிக்கிறது. தஞ்சையில் வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது அரசு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என தமிழக அரசை விடுதலைச் சிறுத்தைகள் வற்புறுத்துகிறது.

 
இவண்
தொல்.திருமாவளவன்