விஜயகாந்த் - தேமுதிகவினர் கைது - தொல்.திருமாவளவன் கண்டனம்

விஜயகாந்த் - தேமுதிகவினர் கைது
மதுவுக்கெதிரான மக்கள் போராட்டத்தை காவல்துறையைக் கொண்டு ஒடுக்க நினைக்கும் தமிழக அரசுக்குக் கண்டனம்
தொல்.திருமாவளவன் அறிக்கை
 
மதுவிலக்குக் கொள்கையை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி சென்னையில் மனிதச் சங்கிலிப் போராட்டத்தில் ஈடுபட்ட தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார். கட்சியின் தொண்டர்கள் மீது காவல்துறையினர் காட்டுமிராண்டித்தனமாகத் தடியடி நடத்தி கைது செய்துள்ளனர். 
 
மனிதச் சங்கிலிப் போராட்டம் என்பது அமைதியான முறையில் அறவழியில் நடைபெறும் மக்கள் போராட்டமாகும்.  இதனால் பொது அமைதிக்கு எத்தகைய பாதிப்பும் ஏற்பட்டுவிடப் போவதில்லை.  வழக்கமாக இப்போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி வழங்குவதுண்டு.  ஆனால், தேமுதிகவினரின் இந்த மனிதச் சங்கிலிப் போராட்டத்திற்கு தமிழக அரசு திட்டமிட்டே, அரசியல் உள்நோக்கத்தோடு அனுமதி மறுத்துள்ளது. 
 
அதே வேளையில் நேற்று (5-8-2015) மதிமுக தலைமை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்திற்கு ஒரு மதவாத அமைப்புக்கு சென்னை மாநகரக் காவல்துறை அனுமதி வழங்கியது. ஒரு கட்சி அலுவலகத்தை முற்றுகையிடுவதற்கு அனுமதி அளித்த காவல்துறை, மனித சங்கிலிப் போராட்டத்திற்கு அனுமதி மறுத்திருப்பது வேடிக்கையாகவுள்ளது. ஒரு கட்சிக்கெதிராக இன்னொரு கட்சி போராட்டம் என்னும் பெயரால் முற்றுகையிடுவதற்குத் திரளும்போது அவ்விடத்தில் இரு தரப்பினருக்கும் மோதல் ஏற்பட வாய்ப்புள்ளது.  எனினும் அதற்கு அரசு அனுமதியளிக்கிறது.  ஆனால், வன்முறைக்கு வாய்ப்பில்லாத, அமைதிவழிப் போராட்டமான மனிதச் சங்கலிப் போராட்டத்திற்கு அரசு அனுமதி மறுக்கிறது. தமிழக அரசின் அரசியல் உள்நோக்கம்கொண்ட, சனநாயகத்திற்கெதிரான இந்த இரட்டை நிலை அணுகுமுறையை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் மிக வன்மையாகக் கண்டிக்கிறோம். 
 
மதுவிலக்குப் போராட்டத்தில் பலியான சசிபெருமாள் குடும்பத்தினரை கைது செய்து வெந்தபுண்ணில் வேல் பாய்ச்சுவதுபோல நடந்துகொண்ட தமிழக அரசு, அதனைத் தொடர்ந்து பரவிடும் மக்கள் போராட்டங்களையும் அடக்கி ஒடுக்கிவிடலாம் என முயற்சிக்கிறது.  அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்கள், மாற்றுத் திறனாளிகள் என பொதுமக்கள் அனைவரின் மீதும் ஒடுக்குமுறையை ஏவும் தமிழக அரசு இன்று தேமுதிகவினரின் மீதும் காட்டுமிராண்டித்தனமான தடியடி நடத்தியுள்ளது.
 
காவல்துறையினரைக் கொண்டு மக்கள் போராட்டத்தை ஒடுக்கிவிடலாம் என்று கனவு காண்கிற தமிழக அரசு தமது ஆணவப் போக்கைக் கைவிட வேண்டுமெனவும், தற்போது கைது செய்யப்பட்டுள்ள விஜயகாந்த் மற்றும் தேமுதிகவினரையும், ஏற்கனவே பொய் வழக்குகளில் சிறைப்படுத்தப்பட்ட அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமெனவும் தமிழக அரசை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

இவண்
தொல்.திருமாவளவன்