மீத்தேன் எரிவாயு எடுக்க ஓ.என்.ஜி.சி. மூலம் முயற்சி மத்திய அரசின் சதித் திட்டத்தை முறியடிக்க அனைவரும் ஒன்றுபட வேண்டும்!

 
 தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் மீத்தேன் எரிவாயு எடுப்பதற்காக தனியார் நிறுவனம் ஒன்றுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.  அந்த மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் நடத்திய போராட்டங்களின் விளைவாக அந்தத் திட்டம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.  தமிழக அரசும் மீத்தேன் எரிவாயு எடுக்க அனுமதிக்க மாட்டோம் என அறிவித்தது.

இந்நிலையில், ஓ.என்.ஜி.சி., கெயில் ஆகிய நிறுவனங்கள் மூலமாக மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டத்தை மத்திய அரசு தந்திரமாகச் செயல்படுத்த முயற்சிக்கிறது.  அதைத் தடை செய்ய வேண்டும் என்று விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் தொடுத்த வழக்கில் தென்மண்டலப் பசுமைத் தீர்ப்பாயம் எதிர்வரும் 10ந்தேதி வரை தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.  இந்தத் தடையை விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் வரவேற்கிறோம்.  தற்காலிகத் தடையை நிரந்தரத் தடையாக மாற்ற வேண்டுமென வேண்டுகோள் விடுக்கிறோம்.

ஓ.என்.ஜி.சி., கெயில் ஆகிய நிறுவனங்களின் மூலம் மீத்தேன் எடுக்கும் மத்திய அரசின் சதிச் செயலுக்கு தமிழக அரசு அனுமதி எதுவும் வழங்கவில்லை எனத் தெரிகிறது.  மாநில அரசின் அனுமதியில்லாமலேயே இலட்சக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழித்தொழிக்கும் செயலில் மத்திய பாஜக அரசு ஈடுபடுவது கண்டனத்துக்குரியது. இதை உடனடியாகக் கைவிட வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.

இந்த வழக்கில் நீதிமன்றத்துக்கு உதவும் வகையில் 'அமிகஸ் கியூரீ'யாக திரு. வைகோ அவர்கள் நியமிக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.  இதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வரவேற்கிறோம்.

தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் மீத்தேன் எடுக்க மேற்கொள்ளப்படும் எத்தகைய முயற்சியாக இருந்தாலும் அதை முறியடிப்பதற்கு விவசாயிகளோடு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் ஒன்றிணைந்து போராடும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

இவண்

தொல்.திருமாவளவன்