மதுவிலக்கை வலியுறுத்திய முழு அடைப்புப் போராட்டம் பெரும் வெற்றி

மதுவிலக்கை வலியுறுத்திய முழு அடைப்புப் போராட்டம் பெரும் வெற்றி
தமிழக அரசு தனது அராஜகப் போக்கை மாற்றிக்கொண்டு
மதுவிலக்கை நடைமுறைப்படுத்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும்
தொல்.திருமாவளவன் அறிக்கை
 
விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக, மனிதநேய மக்கள் கட்சி ஆகிய கட்சிகள் கூட்டாக விடுத்த அழைப்பை ஏற்று தமிழகமெங்கும் கடைகளை அடைத்து மதுவிலக்குக் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்த வணிகப் பெருமக்களுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.  இக்கோரிக்கையை இடதுசாரிக் கட்சிகளும், தேமுதிக, காங்கிரஸ், புதிய தமிழகம், ஆம்ஆத்தி உள்ளிட்ட கட்சிகளும், திரு.வெள்ளையன் தலைமையிலான வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பும் ஆதரித்து அறிக்கை விடுத்தன.  இதன் காரணமாக முழு அடைப்புப் போராட்டம் மிகப் பெரும் வெற்றியைப் பெற்றிருக்கிறது. 
 
மதுவிலக்கை வலியுறுத்திய முழு அடைப்புப் போராட்டத்தை ஒடுக்கிவிட வேண்டும் என்ற நோக்கத்தோடு தமிழக அரசு காவல்துறையை ஏவி எமது கட்சிகளின் தொண்டர்களையெல்லாம் இரவோடு இரவாகக் கைது செய்தது. ஆயிரக் கணக்கானோர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ற பேரில் கைது செய்யப்பட்டனர்.  இன்று தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களிலும் மதுக்கடை மறியலில் ஈடுபட்ட பல்லாயிரக் கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். 
 
சென்னை, மயிலாப்பூர் பகுதியில் மக்களிடையே மதுவிலக்குப் பரப்புரையில் ஈடுபட்ட நானும் (தொல்.திருமாவளவன்), தோழர் ஜி.இராமகிருஷ்ணன், தோழர் இரா.முத்தரசன், பேராசிரியர் ஜவாஹிருல்லா ஆகிய தலைவர்களும் நூற்றுக்கணக்கான தொண்டர்களோடு கைது செய்யப்பட்டிருக்கிறோம்.

 ஆனால், இந்த அடக்குமுறைகளையெல்லாம் முறியடித்து முழு அடைப்புப் போராட்டம் பெரும் வெற்றியடைந்துள்ளது.  மதுக்கடைகளை முற்றாக மூட வேண்டும் என்ற மக்களின் விருப்பமே இந்த வெற்றிக்கு முதன்மையான காரணம்.
கலிங்கப்பட்டியில் அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்ட மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்டோர் மீது கொலைமுயற்சி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.  அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்ட பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் அடித்துத் துன்புறுத்தப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளனர்.  தமிழக அரசின் அராஜகப் போக்கை ஞாயப்படுத்தும்வகையிலும் போராடுகிறவர்களை அவதூறு செய்யும் வகையிலும் அமைச்சர் நத்தம் விசுவநாதன் அறிக்கை விடுத்திருக்கிறார்.  இதனை வன்மையாகக் கண்டிக்கிறோம்.  முன்னெச்சரிக்கை என்ற பெயரிலும் போராட்டங்களின்போதும் கைது செய்யப்பட்டவர்களை நிபந்தனையின்றி உடனே விடுதலை செய்ய வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.
 
மேலும், அராஜக வழியில் செல்லாமல், வறட்டுக் கவுரவம் பார்க்காமல் மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதுபற்றி விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தை உடனே கூட்டிடுமாறு தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.

இவண்
தொல்.திருமாவளவன்