வைகோ தலைமை கலிங்கப்பட்டி மதுவிலக்குப் போராட்டத்தில் போலீஸார் தடியடி , திருமாவளவன் கண்டனம்

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவின் சொந்த ஊரான கலிங்கப்பட்டியில் அவரது தாயார் நேற்று காலை 11 மணி முதல் இரவு 11 மணி வரை டாஸ்மாக் மதுக்கடையை அகற்றக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து, அந்த ஊருக்குள் நுழைய வைகோவுக்கு தடை விதிக்கப்பட்டது. இன்றைக்குக் காலையில் போலீஸ் பாதுகாப்புடன் மதுக்கடை திறக்கப்பட்டது. இதற்கு வைகோ உள்ளிட்ட அனைவரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில் இன்று பிற்பகலில் வைகோ தனது சொந்த ஊரான கலிங்கப்பட்டிக்கு சென்றார். அங்கு அவரது கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் என சுமார் 500 பேருடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

ஏராளமான பெண்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அரசுக்கு எதிராக அவர்கள் முழக்கமிட்டனர். இதனையடுத்து பதற்றமும், பரபரப்பும் ஏற்படவே கலிங்கபட்டியில் அசம்பாவிதம் ஏதும் ஏற்பட்டுவிடாமல் இருப்பதற்காக சுமார் 300 போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனும் போராட்ட களத்திற்கு விரைந்து வைகோவுடன் இணைந்து போராட்டத்திற்கு ஆதரவளித்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, போலீசார் வானத்தை நோக்கி சுட்டதாகவும், தன்னை நோக்கி 10 முறை போலீஸ் சுட்டதாகவும் கூறினார். இருப்பினும் தொண்டர்களை அமைதி காக்க அவர் வலியுறுத்தினார்.

செய்தியாளர்களிடம் பேசிய திருமா,

இன்று நான் திருநெல்வேலிக்கு வர ஒரு வாய்ப்பு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து அம்மாவை (வைகோவின் தாயார்) பார்க்க நான் வருகிறேன் என்று கூறினேன். அதற்கு அவர்கள் சம்மதம் தெரிவித்திருந்தார்.

அதன்படி இங்கு வந்தேன். நான் வரும் வழியில் கலிங்கப்பட்டியில் தடியடி நடக்கிறது. அங்கு போக வேண்டாம் என்றார். இப்படிப்பட்ட வேளையில்தான் செல்ல வேண்டும் என்று இங்கு வந்தேன். நாம் நமது நாட்டில் பல்வேறு இடங்களில் நடந்த போராட்டங்களை பார்த்திருப்போம். அங்கெல்லாம் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டிருக்கலாம். பல்லாயிரம் பேர் கலந்து கொண்டு நடத்தப்படும் போராட்டத்தில்கூட, கூட்டத்தினரை கலைப்பதற்காக இறுதியாக தண்ணீர்தான் பீய்ச்சி அடிப்பார்கள்.

ஆனால், இந்த குக்கிராத்தில், சுமார் 500, 1000 கணக்கில் உள்ள மக்கள் மத்தியில் துப்பாக்கி சூடு நடத்த வேண்டிய அவசியம் என்ன? தடியடி நடத்த வேண்டிய அவசியம் என்ன?
இதன் மூலம் இந்த ஆட்சிக்கு அபசகுனம் ஏற்பட்டுள்ளது. அது இந்த கலிங்கப்பட்டியில் இருந்து தொடங்குகிறது'' என்றார்