கலிங்கப்பட்டியில் தடியடி கண்ணீர்ப்புகை - விடுதலைச் சிறுத்தைகள் கடும் கண்டனம்


கலிங்கப்பட்டியில் மதுக்கடையை மூட வலியுறுத்தி அறவழியில் போராடிய மக்கள்மீது காவல்துறையினர் தடியடி நடத்தி, கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசியதில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் திரு. வைகோ அவர்களின் சகோதரர் உட்பட ஏராளமானோர் காயமடைந்துள்ளனர். காவல்துறையின் இந்தச் செயலை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம். 
கலிங்கப்பட்டி கிராமத்து மக்கள் திரு வைகோ தலைமையில் அறவழியில்தான் போராடினர். அதற்கு காவல்துறை உரிய முறையில் பாதுகாப்பு அளித்திருந்தால் தள்ளுமுள்ளு ஏற்பட்டு கலவரமாக அது மாறியிருக்காது. போராட்டம் குறித்து தகவலறிந்த நான் கலிங்கப்பட்டிக்கு நேரில் சென்று அந்தப்போராட்டத்தில் பங்கேற்று ஆதரவு தெரிவித்தேன். அப்போது காவல்துறையின் தடியடியில் காயம்பட்டவர்களையும் பார்த்து ஆறுதல் சொன்னேன்.
தமிழ்நாட்டில் மதுக்கடைகளை முழுமையாக மூடவேண்டும் என்ற கருத்து இப்போது வெகுமக்களின் கருத்தாக மாறியிருக்கிறது. திரு சசிபெருமாள் அவர்களின் மரணம் இன்று மக்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தித் தன்னெழுச்சியான போராட்டங்களைத் தூண்டியிருக்கிறது. மக்களின் மனநிலையைப் புரிந்துகொண்டு தமிழக அரசு மதுக்கடைகளை மூடவேண்டும். மதுவிலக்கைத் தேசியக் கொள்கையாக அறிவிக்குமாறு மத்திய அரசை வலியுறுத்தவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம். 
கலிங்கப்பட்டி சம்பவத்துக்காக திரு வைகோ அவர்களையோ மற்றவர்களையோ கைது செய்வது தேவையற்ற பதற்றத்தை உருவாக்கும். எனவே அத்தகைய முயற்சியைத் தவிர்க்குமாறு தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறோம். 
மதுவிலக்கை வழியுறுத்தி எதிர்வரும் 4ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் ஆதரவு தெரிவிக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம். வணிகப் பெருமக்கள், பொதுமக்கள் பெருமளவில் பங்கேற்று இந்த முழு அடைப்பு போராட்டத்தை வெற்றி பெறச் செய்யுமாறு விடுதலைச் சிறுத்தைகளின் கட்சியின் சார்பில் வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம்.

இவண்
தொல்.திருமாவளவன்