பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மீது தடியடி - தொல்.திருமாவளவன் கண்டனம்

மதுக்கடையை மூட வலியுறுத்திப் போராடிய
பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மீது தடியடி
காவல்துறையின் அத்துமீறலுக்கு தொல்.திருமாவளவன் கண்டனம்

 
தங்கள் கல்லூரிக்கு அருகில் இருக்கும் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரிப் போராடிய பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியும், கைது செய்தும் வன்முறையில் ஈடுபட்ட காவல்துறையை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்.  கைது செய்யப்பட்ட மாணவர்களை உடனே விடுதலை செய்ய வேண்டுமென தமிழக அரசை வலியுறுத்துகிறோம்.
 
தமிழ்நாடு முழுவதும் குடியிருப்புகளின் அருகிலும், வழிபாட்டிடங்கள் மற்றும் பள்ளிகள் ஆகியவற்றுக்கு அருகிலும் ஏராளமான மதுக் கடைகளை தமிழக அரசு திறந்து நடத்தி வருகிறது.  இதன் விளைவாக பள்ளி மாணவர்கள்கூட மதுவுக்கு அடிமையாகும் அவல நிலை உருவாகியுள்ளது.  வழிபாட்டிடங்களுக்குப் பெண்கள் செல்ல முடியாத நிலையும் குடியிருப்புகளில் அமைதியாக குடும்பம் நடத்த முடியாத சூழலும் இந்த மதுக்கடைகளால் ஏற்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலை ஓரங்களிலும் ஏராளமான மதுக்கடைகளை தமிழக அரசு நடத்தி வருகிறது.  இதனால் விபத்துகள் அதிகரிக்கின்றன என்பதை நீதிமன்றங்கள் பலமுறை சுட்டிக்காட்டியிருக்கின்றன.
 
பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு அருகிலிருக்கும் மதுக்கடைகளை மூட வேண்டும் என்று ஆங்காங்கே மாணவர்கள் அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  ஆனால், அந்தப் போராட்டங்களைத் துச்சமெனக் கருதி தமிழக அரசு தொடர்ந்து அலட்சியப்படுத்தி வருகிறது.  இன்று காலை பச்சையப்பன் கல்லூரி மாணவர்களும் மாணவியரும் தமது கல்லூரிக்கு அருகிலிருக்கும் மதுக்கடையை அகற்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை மிக மூர்க்கத்தனமாக காவல்துறையினர் அடித்துக் கைது செய்யும் காட்சிகள் தொலைக்காட்சிகள் மூலமாக நாடெங்கும் தெரியவந்துள்ளது.  காவல்துறையினரின் தாக்குதலில் மயக்கமுற்று விழுந்துகிடந்த மாணவி ஒருவரை விலங்கை இழுத்துச் செல்வதுபோல் காவல்துறையினர் இழுத்துச் சென்ற காட்சி பதைபதைக்கச் செய்கிறது.
 
தமிழகஅரசின் இந்தச் சர்வாதிகார நடவடிக்கையை வன்மையாகக் கண்டிக்கிறோம்.  சட்டத்துக்குப் புறம்பாக மாணவர்களைத் தாக்கிய காவல்துறையினர் மீது வழக்குப் பதிவு செய்து பணியிடை நீக்கம் செய்ய வேண்டும்.  கைது செய்யப்பட்ட மாணவர்களை நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.
 
மதுவிலக்குக்கு ஆதரவாக ஏற்பட்டிருக்கும் மக்கள் எழுச்சியை வன்முறையால் அடக்கிவிடலாம் என தமிழக அரசு எண்ணுவது எரிமலையின் வாயை காகிதத்தால் மூட நினைப்பது போன்றதாகும்.  மக்களின் மனநிலையை உணர்ந்து மதுவிலக்கை நடைமுறைப்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.

இவண்
தொல்.திருமாவளவன்