சேஷசமுத்திரத்தில் சாதிவெறியாட்டம் - ஆகத்து 24ல் சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம்

சேஷசமுத்திரத்தில் சாதிவெறியாட்டம்
-------------------------------------------------------------------
தூண்டிவிட்ட கும்பல் மீது நடவடிக்கை கோரி
ஆகத்து 24ல் சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம்
 விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிவிப்பு




விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அருகேயுள்ள சேஷசமுத்திரம் கிராமத்தில் ஒரு வன்முறைக் கும்பல் தலித் மக்களின் தெருக்களில் புகுந்து காட்டுமிராண்டித்தனமாகத் தாக்குதலை நடத்தி, சொத்துக்களைச் சூறையாடி, பெட்ரோல் குண்டுகளை வீசி குடிசைகளைக் கொளுத்தியுள்ளது.

இந்த இழிவான சாதிவெறியாட்டம் காவல்துறையினரின் முன்னிலையிலேயே நடந்துள்ளது. தலித் மக்கள் தங்கள் தெருவிலுள்ள அம்மன் கோவிலில் திருவிழா நடத்துவது வழக்கம். ஆண்டுதோறும் அம்மன் சிலையை மாட்டு வண்டியில் வைத்து தங்கள் தெருவைச் சுற்றிவந்து தேரோட்டம் நடத்துவதுண்டு. தேர் செய்யும் அளவிற்குப் பொருளாதார வலிமை இல்லாததால் மாட்டு வண்டியைத் தேராகப் பயன்படுத்தி வந்தனர்.
 
கடந்த 2012ஆம் அண்டு அதே கிராமத்தில் வசிக்கும் வன்னிய சமூகத்தைச் சார்ந்த ஒருவர் அளித்த நன்கொடையைக் கொண்டு மரத்தாலான சிறிய தேர் ஒன்றினை உருவாக்கினர். நன்கொடை அளித்தவருக்கும், அவரை எதிர்த்து ஊராட்சி மன்றத் தலைவருக்கான தேர்தலில் போட்டியிட்ட அதே சமூகத்தைச் சார்ந்த இன்னொருவருக்கும் இருந்த அரசியல் பகையின் காரணமாக, தலித் மக்களுக்குத் தேர் வழங்கியதைப் பொறுத்துக்கொள்ள முடியாத அந்த நபர், அதனை இரு சமூகத்திற்கிடையிலான சாதிப் பிரச்சனையாக மாற்றினார். அதாவது, ஒரே சமூகத்தைச் சார்ந்த இருவருக்கிடையில் எழுந்த அரசியல் பகையை சாதிப் பிரச்சனையாகக் கூர்தீட்டியுள்ளார். தன்னுடைய அரசியல் எதிரிக்கு ஆதரவாக தலித் மக்கள் செயல்படுகிறார்கள் என்பதை சகித்துக்கொள்ள முடியாமல் அந்த நபர் சாதிவெறி சக்திகளைத் தூண்டிவிட்டார். 
 
தலித் மக்கள் நடத்தவிருந்த தேரோட்டத்திற்கு எதிராக, தனக்கு ஆதரவான ஒரு சிலரைத் தூண்டி விட்டதையடுத்து, மாவட்ட ஆட்சி நிர்வாகம் தலித் மக்களின் தேரோட்டத்திற்கு கடந்த 2012ஆம் ஆண்டு திடீரெனத் தடை விதித்தது. அத்துடன், அந்தத் தேரை இழுக்க விடாமல் தடுக்கும் வகையில் பூட்டுப் போட்டு அதிகாரிகள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். அதிகாரிகளின் தலித் விரோத நடவடிக்கையை எதிர்த்து தலித் மக்கள் தங்கள் தெருவிலேயே அமைதியான முறையில் உண்ணாநிலை அறப்போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சுமார் இருபதுக்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட போராட்டத்தில் ஈடுபட்ட தலித் மக்களை எளிதில் பிணையில் வரமுடியாத வகையில் பொய் வழக்குப் புனைந்து கைது செய்து சிறைப்படுத்தினர். சுமார் 70 குடும்பங்களே உள்ள சிறுபான்மையான தலித் மக்கள் மீது ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களைக் கொண்ட ஆதிக்க சாதியினைச் சார்ந்தவர்கள் செய்யும் அடக்குமுறைக்கு ஆதரவாகச் செயல்படும் வகையிலே அதிகாரிகளும் தலித் மக்களுக்கெதிரான ஒடுக்குமுறையில் ஈடுபட்டனர். எனினும் தலித் மக்கள் தொடர்ந்து அறவழிப் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளைச் சந்தித்து நீதிகோரி முறையிட்டு வந்தனர். அதனடிப்படையில் கடந்த சில ஆண்டுகளாக அதிகாரிகள் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தினர். சுமார் 16 முறை நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளின் முடிவில் தலித் மக்களின் பக்கம் நியாயம் இருப்பதை உணர்ந்த மாவட்ட ஆட்சி நிர்வாகம் தலித் மக்கள் தேரோட்டம் நடத்திக்கொள்ள அனுமதி அளித்தது. 
 
இதனைப் பொறுத்துக்கொள்ள முடியாத சாதிவெறியர்கள், சாதிவெறியைத் தூண்டிவிட்டு, அப்பாவிகளை மோதவிட்டு ஆதாயம் தேடும் ஓர் அரசியல் கட்சியின் தூண்டுதலின்படி, கடந்த ஆகஸ்ட் 15 - இந்திய சுதந்திர நாளன்று தலித் மக்களுக்கெதிரான, திட்டமிட்ட வன்முறையில் ஈடுபட்டனர். பாதுகாப்பிற்காக நின்றிருந்த காவல்துறை அதிகாரிகளின் முன்னிலையிலேயே சுமார் ஆயிரத்துக்கு மேற்பட்ட ஒரு வன்முறைக் கும்பல் தலித் மக்களின் தெருவுக்குள் புகுந்து வன்முறை வெறியாட்டத்தில் இறங்குகிறது. மின் இணைப்பைத் துண்டித்துவிட்டு தெருவுக்குள் புகுந்த அந்த வன்முறை கும்பலில் கொள்ளையடிக்கவும், இன்னொரு குழுவினர் சொத்துக்களை தட்டுமுட்டுச் சாமான்களை அடித்து நொறுக்கிச் சூறையாடவும், இன்னொரு குழுவினர் பெட்ரோல் குண்டுகளை வீசி குடிசையைக் கொளுத்தியும் வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்களை வெளியேறும்படி கூறிய மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட காவல்துறையினர் மீதும் அக்கும்பல் தாக்குதலில் ஈடுபட்டுள்ளது.
 
தலித் மக்களுக்கெதிராக நடந்த இந்த வன்முறை வெறியாட்டம் ஒரு சாதிக்கட்சியின் தூண்டுதலில்தான் அரங்கேறியுள்ளது. தர்மபுரியில் தலித் கிராமங்களைத் தாக்கிய அதே வழிமுறைகளைப் பின்பற்றி இங்கேயும் தாக்குதலை நடத்தியுள்ளனர். அதாவது, மின் இணைப்பைத் துண்டித்து, குழுக்குழுவாகப் பிரிந்து கொள்ளை, சூறை, பெட்ரோல்குண்டு வீச்சு, தீ வைப்பு போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். தருமபுரியில் தலித் மக்களுக்கெதிரான வன்முறையை நடத்தி கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அரசியல் ஆதாயம் அடைந்த அதே சாதிவெறிக் கும்பல், எதிர்வரும் சட்டமன்றப் பொதுத் தேர்தலில், சாதிவெறியை மூலதனமாக்கி அரசியல் ஆதாயம் அடையத் துடிக்கிறது. குறிப்பாக, வடமாவட்டங்களில் தலித் மக்களுக்கெதிரான வன்முறைகளைத் தூண்டுவதில் குறியாக இருக்கிறது. அதனடிப்படையில்தான் சேஷசமுத்திரம் கிராமத்திலும் வெளியூர்களிலிருந்து சாதிவெறிக் கும்பலை இறக்கி, சேஷசமுத்திர தலித் மக்களுக்கு எதிரான வன்முறை வெறியாட்டத்தை அரங்கேற்றியுள்ளனர்.
 
குறிப்பாக, ஓட்டுவதற்குத் தயார் நிலையிலிருந்த தேரினையும் கொளுத்தியுள்ளனர். இது தன்னியல்பாக வெடித்த வன்முறையல்ல. திட்டமிட்டு நடத்தப்பட்ட சாதிவெறியாட்டமாகும். எனவே, தமிழக அரசு வழக்கம்போல இதனைப் பொருட்படுத்தாமல், பாதிக்கப்பட்டவர்கள் தலித் மக்கள்தானே என்று மெத்தனம் காட்டக்கூடாது என விடுதலைச் சிறுத்தைகள் கேட்டுக்கொள்கிறது.
 
மேலும், வடமாவட்டங்களில் சாதியின் பெயரால் சமூகப் பதற்றத்தை உருவாக்கிட, திட்டமிட்டுச் செயல்பட்டுவரும் குறிப்பிட்ட அக்கட்சியின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதற்கும், தலித் மக்களுக்கெதிரான வன்முறைகளைத் தடுப்பதற்கும் உரிய நடவடிக்கைகளைத் தீவிரமாக மேற்கொள்ள வேண்டுமெனவும் தமிழக அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.
 
இந்நிலையில் வெளியூர்களுக்குச் சிதறி ஓடிய தலித் மக்களை மீண்டும் அவர்களது கிராமத்திலேயே குடியமர்த்த வேண்டுமெனவும், தலித் மக்கள் தங்கள் தெருவில் தேரோட்டுவதற்குப் போதிய பாதுகாப்பை வழங்க வேண்டுமெனவும், இந்த வன்முறை வெறியாட்டத்திற்குக் காரணமான சாதிவெறிக் கட்சியைச் சார்ந்த கும்பலை வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்ய வேண்டுமெனவும் பாதிக்கப்பட்ட தலித்துகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டுமெனவும் தமிழக அரசை வலியுறுத்தியும், அப்பாவி மக்களுக்கெதிரான சாதிவெறியர்களின் வன்முறையைக் கண்டிக்கும் வகையிலும் ஆகஸ்டு 24ஆம் நாள் சென்னையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் மாபெரும் வெகுமக்கள் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்படுகிறது.




இவண்
தொல்.திருமாவளவன்