போராட்டக் களத்திலேயே சசிபெருமாள் உயிர்ப்பலி பிடிவாதத்தைத் தளர்த்திக்கொண்டு மதுக்கடைகளை மூட வேண்டும்

போராட்டக் களத்திலேயே சசிபெருமாள் உயிர்ப்பலி
பிடிவாதத்தைத் தளர்த்திக்கொண்டு மதுக்கடைகளை மூட வேண்டும்
தமிழக அரசுக்கு தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்
காந்தியவாதி சசிபெருமாள் அவர்கள் மதுவிலக்குக் கொள்கைக்காக இன்று உயிர்ப்பலியாகியிருக்கிறார். இது தாங்கிக்கொள்ள இயலாத வேதனையாகும்.  குமரி அருகே திருவட்டாறு என்னுமிடத்தில் அலைபேசி (செல்போன்) கோபுரத்தில் ஏறிநின்று மதுவிலக்குக் கொள்கையை தமிழக அரசு ஏற்க வேண்டுமென்றும், மதுக் கடைகளை இழுத்து மூடவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்.  
இந்த வகையான போராட்ட உத்திகளில் எமக்கு உடன்பாடு இல்லையெனினும் அவரது கொள்கை உறுதி எம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காகவும், பரந்துபட்ட அளவில் பொதுமக்களை இப்போராட்டத்தில் ஈடுபட வைப்பதற்காகவும் அவர் இவ்வுத்தியைக் கையாண்டிருக்கிறார் என்றே உணர முடிகிறது.  போராட்டக் களத்திலேயே தான்கொண்ட கொள்கைக்காக தம் உயிரைக் கொடையளித்திருக்கிறார்.  இவரது உயிர்ப்பலி அரசின் செவிப்பறையைக் கிழிக்கும் என நம்புவோம்.  சசிபெருமாளின் உயிரிழப்புக்குப் பின்னராவது தமிழக அரசு தனது பிடிவாதத்தைத் தளர்த்திக்கொண்டு படிப்படியாக மதுக்கடைகளை மூட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.  வரும் டிசம்பருக்குள் முழுமையான அளவில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்திட தமிழக அரசு முன்வர வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறேன். கொள்கைக்காக போராட்டக்களத்தில் உயிரிழந்திருக்கிற உண்மைப் போராளி சசிபெருமாளுக்கு எமது வீரவணக்கத்தைச் செலுத்துவதோடு அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவரது குடும்பத்தாருக்கு இழப்பீடு வழங்குவதுடன் அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்கிட வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.  அத்துடன், மதுவிலக்கை மாநிலக் கொள்கையாக இல்லாமல் தேசியக் கொள்கையாக அறிவிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

இவண்
தொல்.திருமாவளவன்