முன்னாள் குடியரசுத் தலைவர் கலாம் மறைவு தொல். திருமாவளவன் அஞ்சலி

புரா திட்டத்தைத் தேசியத் திட்டமாக அறிவிக்க வேண்டும்
முன்னாள் குடியரசுத் தலைவர் கலாம் மறைவு
தொல். திருமாவளவன் அஞ்சலி

முன்னாள் குடியரசுத்தலைவரும் தமிழ்நாட்டின் பெருமைக்குச் சான்றாகத் திகழ்ந்தவருமான திரு. அப்துல்கலாம் அவர்களின் திடீர் மறைவு பெரும் அதிர்ச்சியளிக்கிறது. தன்னை எப்போதும் ஓர் ஆசிரியராகவே கருதிவந்தவர் அவர். மாணவர்களுக்குப் பெரும் உந்துசக்தியாகத் திகழ்ந்த திரு. கலாம் அவர்கள் மாணவர்களிடையே உரையாற்றும்போதே உயிரிழந்துவிட்டார்.
 
செயற்கைக்கோள் தயாரிப்பில் முக்கியப் பங்காற்றியவர், அணுகுண்டு வெடிப்புச் சோதனையின் முதன்மைக் காரணியாகத் திகழ்ந்தவர் என்பவற்றையெல்லாம்விட மாணவர்களிடம்  இளைஞர்களிடம் எதிர்காலம் குறித்த நம்பிக்கையை ஏற்படுத்தியவர் என்பதே அவரது பெருமை.
 
இராமேசுவரத்தில் ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்து தமிழ்வழியில் பயின்று இந்தியாவின் முதல் குடிமகனாக உயர்ந்ததற்கு அவரது அயராத உழைப்பும் அறிவாற்றலும்தான் காரணம். 
 
குடியரசுத் தலைவராக இருந்தபோது ‘நகர்ப்புற வசதிகளைக் கிராமங்களுக்கும் அளிப்பது’ ( PURA) என்ற திட்டத்தைத் தயாரித்துச் செயல்படுத்தினார். அவரது பதவிக் காலத்துக்குப் பின் கடந்த காங்கிரசு ஆட்சிக் காலத்தில் அதை மேம்படுத்திச் செயல்படுத்தப் போவதாகக் கூறினார்கள். பாஜக பொறுப்பேற்றதும் அந்தத் திட்டம் முழுமையாக முடக்கப்பட்டுவிட்டது.  நகரமயமாக்கத்தின் காரணமாக கிராமப்புறங்கள் மேலும் மேலும் புறக்கணிக்கப்பட்டு தேக்கத்தின், வளர்ச்சியின்மையின் உறைவிடங்களாக மாற்றப்படும் இன்றைய சூழலில் திரு. அப்துல்கலாம் அவர்களின் ‘புரா’ திட்டத்தை இந்திய அரசு தேசியத் திட்டமாக அறிவித்து நடைமுறைப்படுத்துவதே அவருக்கு இன்றைய ஆட்சியாளர்கள் செலுத்தும் உண்மையான அஞ்சலியாக இருக்கும். 
 
இளைஞர்களின் ஆற்றலில் நம்பிக்கைவைத்து இந்தியாவின் எதிர்காலத்தை வளமானதாக்க ஓய்வின்றி உழைத்த மாமனிதர் திரு. அப்துல்கலாம் அவர்களுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வீரவணக்கத்தைச் செலுத்துகிறோம். 
 
இவண்
தொல்.திருமாவளவன்