யாக்கூப் மேமோனின் தூக்கு தண்டனையை ரத்துசெய்யவேண்டும் குடியரசுத் தலைவருக்கு வேண்டுகோள்

யாக்கூப் மேமோனுக்கு தடா நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்துசெய்ய குடியரசுத் தலைவர் தமது அதிகாரத்தைப் பயன்படுத்தவேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம். 
 
மும்பை குண்டுவெடிப்பும் அதில் அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டதும் மறக்கமுடியாதவை. அதுவொரு பயங்கரவாதத் தாக்குதல்தான் என்பதை எவரும் மறுக்க முடியாது. ஆனால், அந்தத் தாக்குதலுக்குக் காரணமானவர்கள் எனக் கருதப்படும் டைகர் மேமோன் உள்ளிட்ட உண்மைக் குற்றவாளிகள் கைதுசெய்யப்படாத நிலையில், குண்டு வைத்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட பத்து பேரின் மரணதண்டனையை ஏற்கனவே உச்சநீதிமன்றம் ஆயுள்தண்டனையாகக் குறைத்துவிட்ட நிலையில், தாமே முன்வந்து சரணடைந்த யாக்கூப் மேமோனுக்குத் தூக்கு தண்டனை அளிப்பது சரியல்ல.  எனவே அவரது மரண தண்டனையை ரத்துசெய்யவேண்டும் என வலியுறுத்துகிறோம். 
 
யாக்கூப் மேமோனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்யுமாறு பாஜக, காங்கிரஸ், இடதுசாரிக் கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் குடியரசுத் தலைவரை வலியுறுத்தியுள்ளனர். இதை மத்திய அரசு கவனத்தில் எடுத்துக்கொள்ளவேண்டும். இந்தப் பிரச்சனையை குறுகிய அரசியல் நோக்கோடு அணுகக்கூடாது. 
 
மரணதண்டனை கூடாது என்பதை வலியுறுத்தி புரட்சியாளர் அம்பேத்கர், மகாத்மா காந்தி உள்ளிட்ட தலைவர்கள் தெரிவித்த கருத்துகளையும்; உலகமெங்கும் மரண தண்டனைக்கு எதிராகப் பெருகிவரும் ஆதரவையும் இந்திய அரசு கவனத்தில் கொள்ளவேண்டும். ஐநா மன்றம் அறிவுறுத்தியிருப்பதுபோல மரண தண்டனையை முற்றாக ஒழிப்பதற்கு இதுவே உகந்த தருணம் என்பதையும் சுட்டிக் காட்டுகிறோம். 

இவண்


தொல்.திருமாவளவன்