கள்ளச்சாராய வழக்குகளில் தொடர்புடையோர் பட்டியலை தமிழக அரசு வெளியிட வேண்டும்

கள்ளச்சாராய வழக்குகளில் தொடர்புடையோர் பட்டியலை
தமிழக அரசு வெளியிட வேண்டும்

தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்
 

மதுவிலக்கு இப்போது தமிழ்நாட்டின் முதன்மையான அரசியல் பிரச்சனையாக மாறிவிட்டது. மதுக்கடைகளை மூடவேண்டும் என்ற கோரிக்கை வலுவாக மேலெழுந்திருக்கிறது.  மக்களின் இந்த மனநிலையைப் பயன்படுத்திக் கொண்டு அரசியல் இலாபம் அடையலாம் என எண்ணும் சிலர் ‘மதுவிலக்கு மாவீரர்களாக’ வேடம் போடுகிறார்கள்.  உண்மையிலேயே அவர்கள் மக்கள் மீது அக்கறை கொண்டவர்கள்தானா? என்ற ஐயம் நமக்கு எழுகிறது. 

குடிவெறியைவிடக் கொடுமையான சாதிவெறியைத் தூண்டுபவர்கள்  மதுவிலக்கை ஆதரிப்பதாலேயே மக்கள் நலனில் அக்கறை கொண்டவர்களாகிவிட முடியாது.  குடிப்பவரையும் அவரது குடும்பத்தையும்தான் குடிவெறி சீரழிக்கிறது.  ஆனால் சாதி வெறியெனும் நச்சுப் புகை நாடு முழுவதையும் சீரழிக்கிறது. 

தமிழ்நாட்டில் மதுவிலக்கு நடைமுறையிலிருந்த காலங்களில் கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்டு பலபேர் பொருள் ஈட்டினார்கள். அத்தகைய சுயநலக் கும்பல் விற்ற விஷச்சாராயத்தைக் குடித்து அப்பாவி ஏழை மக்கள் பலியான கொடுமைதான் ஆட்சியாளர்கள் மதுவிலக்கை ரத்து செய்வதற்கான நியாயத்தை உண்டாக்கியது. 

கள்ளச்சாராயத் தொழிலில் காசு சேர்த்தவர்கள் அரசியலில் அதை முதலீடு செய்து பதவிகளை அடைந்துள்ளனர். மீண்டும் மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்பட்டால் தற்போதிருக்கும் அரசியல் தொடர்புகளைப் பயன்படுத்தி முன்பு செய்ததைவிட இன்னும் தீவிரமாகக் கள்ளச்சாராயத் தொழிலில் அவர்கள் ஈடுபடக்கூடும்.  அவர்களால் மறுபடியும் தமிழ்நாட்டில் விஷச்சாராயச் சாவுகள் நிகழாமல் தடுக்க வேண்டுமெனில் மதுவிலக்கு நடைமுறையிலிருந்தபோது கள்ளச்சாராய வழக்குகளில் தொடர்புகொண்டிருந்த குற்றவாளிகள் யார் யார் என்ற விவரத்தையும், அவர்களுக்கு அரசியல் அடைக்கலம் கொடுத்திருப்பது யார் என்ற விவரத்தையும் தமிழக அரசு வெளியிடவேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம். 

இவண்
தொல்.திருமாவளவன்